நேர்மறை ஒழுக்கக் கட்டுப்பாடு தொடர்பாக 60 முன்பள்ளி ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் இன்றைய தூ (22.09.2026) காலை 09.30 மணிக்கு யாழ்ப்பாணம் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
அரசாங்க அதிபரின் தலைமையுரை
யாழ்ப்பாண மாவட்டத்தில் முன்பள்ளி மட்டத்திலிருந்தே பிள்ளைகளிடையே நேர்மறையான சிந்தனை, ஒழுக்கம், பொறுப்புணர்வு, தலைமைத்துவப் பண்புகள் மற்றும் சமூகப் பொறுப்புணர்வை வளர்ப்பது அவசியம் என யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார். முன்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு பயிற்சிப் பட்டறையில் உரையாற்றிய அவர், ஒரு பிள்ளை தனது குடும்பச் சூழலிலிருந்து வெளியே வந்து சமூகத்துடன் முதன்முதலாக இணையும் முக்கியமான தளமாக முன்பள்ளிகள் விளங்குகின்றன எனக் குறிப்பிட்டார். ஒரு பிள்ளையின் சமூகமயமாக்கல் செயற்பாட்டில் குடும்பத்திற்கு அடுத்த முக்கியமான இடம் முன்பள்ளியாகும். எனவே, முன்பள்ளி ஆசிரியர்களின் சிந்தனைகள், அணுகுமுறைகள் மற்றும் செயற்பாடுகள் பிள்ளைகளின் எதிர்கால ஆளுமை வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகின்றன எனத் தெரிவித்தார். மேலும், இன்றைய பெற்றோர் இருவரும் தொழிலில் ஈடுபடும் சூழ்நிலை அதிகரித்துள்ள நிலையில், பிள்ளைகளின் பராமரிப்பு மற்றும் வழிகாட்டலில் முன்பள்ளிகளின் பொறுப்பு மேலும் அதிகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். பிள்ளைகளுக்கு ஒழுக்கம் மற்றும் சுற்றுச்சூழல் பொறுப்புணர்வை கற்பிப்பது வெறுமனே அறிவுறுத்தல்களாக இல்லாமல், நடைமுறைச் செயற்பாடுகள் மூலம் கற்றுக்கொடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
திண்மக் கழிவுகளை வகைப்படுத்துவது குறித்து பிள்ளைகளுக்கு கூறுவது மட்டும் போதாது. அவர்கள் அதை நடைமுறையில் செய்து கற்றுக்கொள்ளும் வகையில் வாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும். சிறு வயதில் உருவாக்கப்படும் இத்தகைய பழக்கவழக்கங்களே எதிர்காலத்தில் பொறுப்புள்ள குடிமக்களை உருவாக்குகின்றனஎனவும் தெரிவித்தார். முன்பள்ளி ஆசிரியர்களின் பங்களிப்பை நினைவுகூர்ந்த அவர், ஒருவர் எந்த உயர்ந்த பதவியை அடைந்தாலும், தனது சிறுவயதில் வழிகாட்டிய ஆசிரியர்களின் தாக்கத்தை மறக்க முடியாது எனக் குறிப்பிட்டார். இதேவேளை, சாரணர் இயக்கத்தின் ஊடாக முன்பள்ளி பிள்ளைகளிடையே தலைமைத்துவம், ஒழுக்கம், பொறுப்புணர்வு மற்றும் சமூகப் பண்புகளை வளர்ப்பதற்கான புதிய செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவது வரவேற்கத்தக்கது எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார். 2027ஆம் ஆண்டு முதல் முன்பள்ளி மட்டத்திலேயே சாரணியச் சிந்தனைகள் மற்றும் தலைமைத்துவப் பண்புகளை வளர்ப்பதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாகக் குறிப்பிட்டதுடன், இத்தகைய செயற்பாடுகள் பிள்ளைகளின் ஆளுமை வளர்ச்சிக்கு பயனுள்ளதாக அமையும் எனவும் தெரிவித்தார்.
முன்பள்ளி மட்டத்திலேயே மழலைகள் சாரணர்களை (சுப்பிப்பி) உருவாக்க நடவடிக்கை
அரசாங்க அதிபரின் ஒழுங்குபடுத்தலின் கீழ், யாழ்ப்பாண மாவட்ட சாரணர் சங்கத்தின் உதவி மாவட்ட ஆணையாளர் திரு. ஞானசம்பந்தன் அவர்கள், முன்பள்ளி மட்டத்திலிருந்தே மழலைகள் சாரணர்களை உருவாக்கி, அவர்களிடையே சாரணப் பண்புகள், ஒழுக்கம், பொறுப்புணர்வு மற்றும் தலைமைத்துவப் பண்புகளை வளர்ப்பதற்கான வழிமுறைகள் தொடர்பாக முன்பள்ளி ஆசிரியர்களுக்கு விளக்கமளித்தார்.
இவ் விழிப்புணர்வு நிகழ்வின் பிரதான நோக்கம்
பிள்ளைகளின் உடல், உள மற்றும் நடத்தை சார்ந்த பிரச்சினைகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிதல், வீட்டிலும் முன்பள்ளியிலும் நேர்மறையான ஒழுக்கத்தை உருவாக்குதல், சிறுவர் பாதுகாப்புச் சட்டங்கள் தொடர்பில் ஆசிரியர்களை தெளிவூட்டுதல் மற்றும் தண்டனையற்ற நேர்மறை ஒழுக்க முறைகள் மூலம் பிள்ளைகளின் நல்ல பழக்கவழக்கங்களையும் பொறுப்புணர்வையும் வளர்த்தல் தொடர்பாக விழிப்புணர்வு வழங்கப்பட்டது. அத்துடன், பிள்ளைகளின் வளர்ச்சியில் பெற்றோரின் பங்கு மற்றும் பெற்றோருக்கு ஆசிரியர்கள் விழிப்புணர்வூட்ட வேண்டியதன் அவசியம் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
வளவாளர்கள்:
“பிள்ளைகளிடம் ஏற்படும் சமூக பிறழ்வு நடத்தைகளை கட்டுப்படுத்துதல்” தொடர்பான வளவாளர் பகிர்வை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி S. ஜீவசுதன் வழங்கினார். மேலும், “நேர்மறை ஒழுக்கக் கட்டுப்பாட்டினை பிள்ளைகளிடையே வளர்த்தல்” என்ற தலைப்பில் மாவட்ட முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு. இ. அமலன் விளக்கமளித்தார். இவ் விழிப்புணர்வு ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்ட வர்கள் : யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு கே. சிவகரன், உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ. தர்சினி, மாவட்ட சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் திரு. இ. செந்தூரன் மற்றும் சிறுவர் மற்றும் பெண்கள் தொடர்பான அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.






