நலன்புரி நன்மைகள் வகைப்படுத்தப்பட்ட கொடுப்பனவு தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (22.09.2026) மு. ப. 10.00 மணிக்கு யாழ்ப்பாண மாவட்ட செயலக செயலமர்வு மண்டபத்தில் நடைபெற்றது.
அரசாங்க அதிபரின் தலைமையுரை
அஸ்வெசும திட்டத்தை யாழ்ப்பாண மாவட்டத்தில் சிறப்பாக நடைமுறைப்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வரும் பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்தார். அஸ்வெசும திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் யாழ்ப்பாண மாவட்டம் தேசிய மட்டத்தில் தொடர்ச்சியாக சிறந்த முன்னேற்றத்தை வெளிப்படுத்தி வருவதாகவும், அரச அதிகாரிகளுக்கான மாநாடுகள் மற்றும் இணையவழிக் கலந்துரையாடல்களிலும் மாவட்டத்தின் செயற்பாடுகள் பாராட்டப்பட்டுள்ளதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார். தகுதியுடையவர்களுக்கு உரிய நன்மைகள் சென்றடைவதையும், தகுதியற்றவர்கள் நன்மைகளைப் பெறுவதைத் தடுப்பதையும் உறுதி செய்வதே அஸ்வெசும போன்ற நலன்புரித் திட்டங்களின் அடிப்படை நோக்கமாகும் என அவர் சுட்டிக்காட்டினார். அதேவேளை, தகுதியுடைய ஒருவர் நலன்புரிக் கொடுப்பனவைப் பெற முடியாத நிலை ஏற்படாதவாறும் அதிகாரிகள் உரிய கவனம் செலுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினார். முறைப்பாடுகள் கிடைக்கப்பெறும் சந்தர்ப்பங்களில் அவற்றை உரிய முறையில் ஆராய்ந்து, கணினி முறைமையில் காணப்படும் தகவல்களுடன் கள நிலவரங்களையும் பரிசீலித்து, சாத்தியமான தீர்வுகளை விரைவாக வழங்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
அஸ்வெசுமவை வெறுமனே கொடுப்பனவு வழங்கும் திட்டமாகக் கருதாமல், வறுமை ஒழிப்பு மற்றும் சமூக வலுவூட்டலின் பரந்த நோக்கத்துடன் அணுக வேண்டும் எனக் குறிப்பிட்ட அரசாங்க அதிபர், ஒரு குடும்பத்தின் வறுமை நிலையை வருமானத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்க முடியாது எனவும் தெரிவித்தார். குடிநீர், கல்வி, சுகாதாரம், வாழ்வாதாரம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளையும் உள்ளடக்கிய பல்பரிமாண வறுமையை கருத்திற்கொண்டு செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். அஸ்வெசும போன்ற திட்டங்களின் இறுதி நோக்கம் மக்களை நிரந்தரமாக நலன்புரிக் கொடுப்பனவுகளில் தங்கியிருக்கச் செய்வது அல்ல, அவர்களை படிப்படியாக வறுமையிலிருந்து மீட்டு, பொருளாதார ரீதியாக வலுவூட்டுவதாகும் என அரசாங்க அதிபர் தெரிவித்தார். மேலும், அரச சேவையில் நாம் வகிக்கும் பதவிகள் எமக்குக் கிடைத்துள்ள பொறுப்பும் வாய்ப்பும் ஆகும். அந்த வாய்ப்பை பொதுமக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் பயன்படுத்துவதே எமது கடமை. எமது காலப்பகுதியில் மக்களுக்குச் செய்யக்கூடிய நல்ல பணிகளைச் செய்து முடிப்பதே அரச சேவையின் உண்மையான பெறுமதியாகும் எனவும் குறிப்பிட்டார். அஸ்வெசும திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் காணப்படும் இடர்பாடுகளை அடையாளம் கண்டு அவற்றுக்குத் தீர்வு காணும் வகையில் மாவட்டச் செயலக மட்டத்தில் தொடர்ச்சியான வழிகாட்டல்களும் ஒருங்கிணைப்பும் வழங்கப்படும் எனவும் அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.
அஸ்வெசும வகைப்படுத்தப்பட்ட கொடுப்பனவு – நடைமுறை மற்றும் தொழில்நுட்ப சவால்கள் குறித்து ஆராய்வு :
நலன்புரி நன்மைகள் ஊடாக வழங்கப்படும் வகைப்படுத்தப்பட்ட கொடுப்பனவுகளான முதியோர் கொடுப்பனவு, மாற்றுத்திறனாளிகளுக்கான கொடுப்பனவு மற்றும் சிறுநீரக நோயாளர்களுக்கான கொடுப்பனவு ஆகியவற்றுக்கான பயனாளர்களின் தரவுகளை சமூகப் பதிவேட்டு தரவுத்தளத்தில் உள்ளீடு செய்யும் பணியில் எதிர்நோக்கப்படும் நடைமுறைச் சிக்கல்கள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. இதன்போது, தரவு உள்ளீட்டுச் செயற்பாடுகளில் காணப்படும் நடைமுறைச் சிக்கல்களைத் தீர்ப்பதற்கான வழிமுறைகள், நலன்புரி நன்மைகள் தொடர்பான கணினிமயப்படுத்தப்பட்ட செயற்பாடுகளில் ஏற்படும் தொழில்நுட்ப ரீதியான பிரச்சினைகள் மற்றும் அவற்றைத் தீர்ப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டன. மேலும், கொடுப்பனவு நடவடிக்கைகளை வினைத்திறனுடனும் துரிதமாகவும் முன்னெடுப்பதற்குத் தேவையான ஒருங்கிணைப்பு, தகவல் பரிமாற்றம் மற்றும் பிரதேச செயலக மட்டத்தில் எதிர்நோக்கப்படும் நடைமுறைச் சவால்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
இக் கலந்துரையாடலில் பங்குபற்றியவர்கள் விபரங்கள் :
யாழ்ப்பாண மாவட்டச் செயலக மேலதிக அரசாங்க அதிபர் திரு. க. சிவகரன், உதவி மாவட்ட செயலாளர் செல்வி உ. தர்சினி, நலன்புரி நன்மைகள் சபையின் வடமாகாண இணைப்பாளர் திருமதி. மோகனநாதன், நலன்புரி நன்மைகள் சபையின் மாவட்ட உத்தியோகத்தர், மாவட்ட தொழில்நுட்ப உத்தியோகத்தர், பிரதேச செயலகங்களின் உதவி பிரதேச செயலாளர்கள், பிரதேச செயலக நலன்புரி விடய உத்தியோகத்தர்கள், முதியோர் மேம்பாட்டு மாவட்ட உத்தியோகத்தர் மற்றும் சமூக சேவைகள் உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.






