சமூக பாதுகாப்பிற்கான தேசிய விருது வழங்கும் நிகழ்வு இலங்கை சமூக பாதுகாப்பு சபையினால் இன்றைய தினம் (30.09.2026) காலை 10.30 மணிக்கு வவுனியாவில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் தமதுரையில், இன்றைய நிகழ்வு எமக்கு மிகவும் மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிக்கின்ற ஒரு நிகழ்வாகும். குறிப்பாக, சமூகப் பாதுகாப்புத் திட்டத்தை மக்களிடம் கொண்டு செல்வதில் வடக்கு மாகாணமும், குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டமும் முன்னிலை வகித்திருப்பது பாராட்டுக்குரிய விடயமாகும். சமூகப் பாதுகாப்புத் திட்டத்தில் அதிகளவான மக்களை இணைத்துக்கொள்வதற்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றிய மாவட்ட அரசாங்க அதிபர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் இலங்கை சமூகப் பாதுகாப்புச் சபையின் சார்பிலும், எமது சார்பிலும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன். தேசிய ரீதியாக சமூகப் பாதுகாப்புத் திட்டத்தில் யாழ்ப்பாண மாவட்டம் முதலாவது இடத்தைப் பெற்றிருப்பதுடன், உற்பத்தித்திறன் போட்டியிலும் யாழ்ப்பாண மாவட்டம் முதலாவது இடத்தைப் பெற்றிருப்பது எமக்கு பெருமை அளிக்கின்றது. யாழ்ப்பாண மாவட்டத்தில் பணியாற்றுகின்ற அனைத்து அரச உத்தியோகத்தர்களுக்கும் பெருமையையும் கௌரவத்தையும் அளிக்கின்ற ஒரு சாதனையாகும். அதேவேளை, ஏனைய மாவட்டங்களின் பங்களிப்பையும் நாம் மதிக்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அதன் தனித்துவமான சமூக, பொருளாதார மற்றும் மக்கள் தொகைச் சூழ்நிலைகள் உள்ளன. எனவே, இந்தப் போட்டியை வெற்றிக்கான ஒரு அளவுகோலாக மட்டும் பார்க்காமல், அனைத்து மாவட்டங்களும் ஒன்றுக்கொன்று சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொண்டு முன்னேறுவதற்கான வாய்ப்பாகப் பார்க்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
சமூகப் பாதுகாப்பு மக்களுக்கு நம்பிக்கையளிக்கும் திட்டம் :
சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் பிரதான நோக்கம் மிகவும் முக்கியமானது. வாழ்க்கையில் எதிர்கொள்ளக்கூடிய எதிர்பாராத சவால்கள் தொடர்பில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு பாதுகாப்பு உணர்வும், எதிர்காலம் தொடர்பான நம்பிக்கையும் ஏற்படுத்துவதே இதன் முக்கியத்துவமாகும். குறிப்பாக வறுமையில் வாழ்கின்ற குடும்பங்கள், நிரந்தரமான தொழில் வாய்ப்பின்றி வாழ்கின்றவர்கள், சிறு தொழில்களில் பணியாற்றுகின்றவர்கள் மற்றும் எதிர்காலத்தில் சமூக அல்லது பொருளாதாரப் பாதுகாப்பு தேவைப்படக்கூடிய பல்வேறு தரப்பினருக்கும் இத்திட்டம் முக்கியமானதாக அமைகின்றது. பிள்ளைகள் இல்லாத முதியவர்கள், பிள்ளைகளை இழந்தவர்கள், விதவைகள் உள்ளிட்ட சமூகத்தில் பாதுகாப்பு தேவைப்படுகின்ற பல்வேறு தரப்பினரையும் இத்திட்டத்தின் பயனாளர்களாக அடையாளம் கண்டு அவர்களிடம் இந்தத் திட்டத்தை கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு எமக்கு உள்ளது எனவும் தெரிவித்தார். வடக்கு மாகாணத்தில் சுமார் 11 முதல் 12 இலட்சம் வரையான மக்கள் வாழ்கின்ற நிலையில், இவர்களில் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தில் இன்னும் இணைக்கப்பட வேண்டிய பெருமளவான மக்கள் உள்ளனர். எனவே, இந்தத் திட்டத்தின் பயன்கள் தொடர்பில் கிராம மட்டம் வரை விழிப்புணர்வை ஏற்படுத்துவது மிகவும் அவசியமாகும். வறுமையின் உண்மையான நிலையை அடையாளம் காண வேண்டும் வடக்கு மாகாணத்தின் பொருளாதார நிலைமையை நாம் மேலோட்டமாக மட்டும் மதிப்பிடக்கூடாது. யாழ்ப்பாண நகரத்தையும் அதன் சுற்றுப்புறங்களையும் பார்க்கும்போது பெரிய கட்டடடங்கள், வர்த்தக நிலையங்கள், நவீன சேவைகள் என பொருளாதார முன்னேற்றம் காணப்படுவது உண்மை. ஆனால் கிராம மட்டத்திற்குச் சென்று, பாடசாலைகளில் உள்ள மாணவர்களின் நிலைமையைப் பார்க்கும்போது, இன்னும் பல குடும்பங்கள் அடிப்படைத் தேவைகளைக்கூட நிறைவேற்ற முடியாத நிலையில் இருப்பதை காணக்கூடியதாக உள்ளது. காலணி வாங்க முடியாத மாணவர்கள், பாடசாலைப் பையைப் பெற்றுக்கொள்ள முடியாத குடும்பங்கள், கல்வியைத் தொடர்வதற்கு பொருளாதார ரீதியாக சிரமப்படுகின்ற பிள்ளைகள் இன்னும் இருக்கின்றனர். எனவே, சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் பயன்கள் மேல்மட்டத்தில் மட்டும் நின்றுவிடாமல், உண்மையாக உதவி தேவைப்படுகின்ற மக்களை அடையாளம் கண்டு கீழ்மட்டம் வரை சென்றடைய வேண்டும்.
அரச அதிகாரிகளின் பொறுப்பு மிகவும் முக்கியமானது :
அரசாங்கம் என்ற வகையில் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை முன்னெடுப்பதற்கு தேவையான ஒத்துழைப்பை நாம் வழங்கி வருகின்றோம். எதிர்காலத்திலும் அந்த ஒத்துழைப்பு தொடரும். அதேவேளை, பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகளுக்கு முக்கியமான பொறுப்பும் கடமையும் உள்ளது. மக்களின் பிரச்சினைகளை உரிய அதிகார மட்டத்திலேயே தீர்ப்பதற்கான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், அவற்றை உரிய முறையில் பயன்படுத்தி, தேவையற்ற காலதாமதங்களைத் தவிர்த்து மக்களுக்கு விரைவான சேவையை வழங்க வேண்டும். மக்களின் முறைப்பாடுகள் தொடர்ச்சியாக மேல்மட்டத்திற்கு வரக்கூடிய நிலை ஏற்படாமல், பிரதேச மட்டத்திலேயே பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதற்கான செயற்பாட்டு அணுகுமுறை அவசியமாகும்.
ஒருங்கிணைந்த செயற்பாடே எமது பலம் :
அரசியல்வாதிகள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட அரசாங்க அதிபர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் என அனைவரும் ஒருமுகமாக இணைந்து செயற்பட வேண்டும். எமது மக்களின் நலன் மற்றும் எமது பிரதேசத்தின் எதிர்கால அபிவிருத்தி ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி செயல்பட வேண்டும். யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு மாகாணத்தின் எதிர்காலத்தை வலுப்படுத்துவது எமக்கு முன்னுள்ள மிகப்பெரிய பொறுப்பாகும். மக்கள் தொகை குறைதல், இளைஞர்கள் மற்றும் யுவதிகள் வெளிநாடுகளுக்கும் நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் இடம்பெயர்வது போன்ற சவால்களை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். எமது இளைஞர்களுக்கு இங்கேயே கல்வி, தொழில், வாழ்வாதாரம் மற்றும் எதிர்காலம் தொடர்பில் நம்பிக்கையை உருவாக்கக்கூடிய சூழலை ஏற்படுத்த வேண்டும். அதற்காகவே மாவட்ட மற்றும் பிரதேச மட்டங்களில் பாரிய அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். இந்த அபிவிருத்திப் பணிகள் வெறும் உட்கட்டமைப்பு அபிவிருத்தியாக மட்டும் இருக்காமல், இளைஞர்களின் எதிர்கால நம்பிக்கையை கட்டியெழுப்பும் வகையிலும் அமைய வேண்டும்.
கிராமம் மட்டத்தில்விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் :
இலங்கையில் சுமார் 2 கோடியே 20 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் வாழ்கின்ற நிலையில், சமூகப் பாதுகாப்புத் திட்டத்தில் இணைந்துள்ளவர்களின் எண்ணிக்கை இன்னும் குறைவாகவே உள்ளது. வடக்கு மாகாணத்திலும் இத்திட்டத்தின் கீழ் இணைக்கப்பட வேண்டிய பெருமளவான மக்கள் உள்ளனர். எனவே, சமூகப் பாதுகாப்புத் திட்டம் தொடர்பான விழிப்புணர்வை கிராமம் கிராமமாகவும், குடும்பம் குடும்பமாகவும் கொண்டு சென்று, தகுதியுடைய அனைவரையும் இத்திட்டத்தின் கீழ் இணைப்பதற்கான நடவடிக்கைகளை நாம் வலுப்படுத்த வேண்டும். இந்தப் பணியை நடைமுறைப்படுத்துவதில் இங்கு பணியாற்றுகின்ற உத்தியோகத்தர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. இன்றைய தினம் விருதுகளைப் பெறுகின்ற முதலாவது, இரண்டாவது, மூன்றாவது இடங்களைப் பெற்ற மாவட்டங்களுக்கும், தங்கம், வெள்ளி உள்ளிட்ட விருதுகளைப் பெறுகின்ற அனைத்து மாவட்டங்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன். உங்களுடைய அர்ப்பணிப்பு, உழைப்பு மற்றும் பொறுப்புணர்வு இல்லாமல் இந்தச் சாதனைகளை அடைய முடியாது. எதிர்காலத்தில் இன்னும் அதிகமான மக்களை சமூகப் பாதுகாப்புத் திட்டத்திற்குள் இணைத்து, எமது மக்களின் வாழ்க்கையில் நம்பிக்கையையும் பாதுகாப்பையும் ஏற்படுத்துவதற்காக அனைவரும் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன் என அமைச்சர் தெரிவித்தார். இறுதியாக, இன்றைய விருது வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டுள்ள அனைவருக்கும் தமது நன்றியைத் கெளரவ அமைச்சர் தெரிவித்துக்கொண்டார்.







