பொருளாதாரத் தொகைமதிப்பு – விவசாய நடவடிக்கைகள் தொடர்பான தரவு சேகரிப்பு நடவடிக்கையின் தேசிய அங்குரார்ப்பண நிகழ்வு, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இன்று (01.10.2026) வியாழக்கிழமை காலை 10.00 மணிக்கு உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. அரசாங்க அதிபரும் மாவட்டத் தொகைமதிப்பு ஆணையாளருமான திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில், புள்ளிவிபரத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திருமதி சாமினி கருணாரட்ண அவர்களின் பங்குபற்றுதலுடன், யாழ்ப்பாணம், அரியாலைப் பகுதியில் தேசிய ரீதியிலான முதலாவது தரவு சேகரிப்பு ஆரம்ப நிகழ்வு நடைபெற்றது. இந் நிகழ்வில் வரவேற்புரையை மாவட்டப் பிரதிப் பணிப்பாளர் திரு. எம். வித்தியானந்தநேசன் அவர்கள் நிகழ்த்தினார்.
அரசாங்க அதிபரின் தலைமையுரை :
விவசாய தொகை மதிப்பு தரவுகள் தேசிய திட்டமிடலுக்கு அவசியமானது - அரசாங்க அதிபர் இந் நிகழ்வில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள், அண்மையில் முன்னெடுக்கப்பட்ட குடிசனத் தொகைமதிப்பு நடவடிக்கையின்போது குறிப்பிடப்பட்ட காலப்பகுதிக்குள் தேசிய ரீதியில் யாழ்ப்பாண மாவட்டம் தரவுகளை இற்றைப்படுத்துவதில் முன்னிலை வகித்தமையை நினைவுகூர்ந்தார். அத்துடன், தொகைமதிப்பு நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக விவசாய நடவடிக்கைகள் தொடர்பான பொருளாதாரத் தொகைமதிப்பின் தேசிய அங்குரார்ப்பண நிகழ்வு யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆரம்பிக்கப்படுவது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும் எனவும் தெரிவித்தார். விவசாய நடவடிக்கைகள் தொடர்பான இவ் பொருளாதாரத் தொகைமதிப்பு பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை முன்னெடுக்கப்படுவதால், இதன்மூலம் சேகரிக்கப்படும் தரவுகள் தேசிய மட்டத்தில் முக்கியமான கொள்கைத் தீர்மானங்கள் மற்றும் திட்டமிடல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முக்கிய பங்களிப்பை வழங்கும் எனவும் அரசாங்க அதிபர் சுட்டிக்காட்டினார். எனவே, விவசாய நடவடிக்கைகளின் வகை, அளவு மற்றும் ஏனைய தொடர்புடைய விடயங்கள் குறித்த துல்லியமான தரவுகளை உரிய காலத்திற்குள் அல்லது அதற்கு முன்னதாகச் சேகரித்து சமர்ப்பிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், இத்தரவு சேகரிப்பு நடவடிக்கையை வினைத்திறனுடனும் துல்லியத்துடனும் முன்னெடுப்பதற்கு அனைத்து தரப்பினரினதும் ஒத்துழைப்பை வழங்குமாறும் கேட்டுக்கொண்டார். மேலும், விவசாய நடவடிக்கைகள் தொடர்பான பொருளாதாரத் தொகைமதிப்பு தரவு சேகரிப்பு நடவடிக்கையின் தேசிய அங்குரார்ப்பண நிகழ்வு முதன்முறையாக ஒரு விவசாயத்தில் ஈடுபடுபவர் இல்லத்தில் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்ற தீர்மானத்திற்கு அமைய, யாழ்ப்பாண மாவட்டத்தின் முன்னாள் அரசாங்க அதிபர் திரு. செல்லையா பத்மநாதன் அவர்களின் இல்லம் தெரிவுசெய்யப்பட்டமை சிறப்புக்குரியதாகும் எனவும் தெரிவித்தார்.
ஓய்வுபெற்றதன் பின்னரும் கடந்த 22 ஆண்டுகளாக தொடர்ச்சியாக விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் முன்னாள் அரசாங்க அதிபர் திரு. செல்லையா பத்மநாதன் அவர்கள், விவசாயத் துறையின் தொடர்ச்சியான ஈடுபாட்டிற்கு ஒரு முன்மாதிரியானவராக திகழ்கின்றார் எனவும் அரசாங்க அதிபர் குறிப்பிட்டார். இவ் கணக்கெடுப்பு நடவடிக்கைகள் 2026.10.01 முதல் 2026.12.15 வரை நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந் நிகழ்வில் புள்ளிவிபரத் திணைக்களத்தின் விவசாயப் பணிப்பாளர் திருமதி ஜே. கே. வி. எல். நயனஹரி ஜெயக்கொடி, தகவல் தொழில்நுட்பப் பணிப்பாளர் திரு. பி. டி. டி. பிரீஷ், வெளிக்களப் பணிப்பாளர் திரு. ஏ. யு. வி. வீரதுங்க, மாவட்ட இணைப்பாளர் திரு. ஜே. எம். எஸ். யு. ப. ஜெயமக, திரு. யுவ்ராஜ் பூசல்(உணவு மற்றும் விவசாய அமைப்பின் ஆலோசகர்), திரு. லக்மாலி ஜெயரத்ன(பொருளாதார மக்கள் தொகை கணக்கெடுப்பு 2025/26 இன் விளம்பரக் குழுத் தலைவர்), திரு. S. தினேஷ் (துணை இயக்குநர் - தகவல் தொடர்பு தொழில்நுட்பம்), திரு. T.திருஞானதீபன்(வலய மேற்பார்வையாளர் - யாழ்ப்பாண மாவட்டம்) உள்ளிட்ட அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், புள்ளிவிபரத் திணைக்களத்தின் மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களின் உத்தியோகத்தர்கள், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.







