“வளமான நாடு – அழகான வாழ்க்கை” தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ், வாழ்க்கைக்கான வலிமை (திவியட்ட சவிய) வீட்டுத்திட்ட பயனாளிகளுக்கான முதற்கட்ட காசோலை வழங்கும் நிகழ்வு, அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்று (01.10.2026) யாழ்ப்பாணம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக நிகழ்வில் கடற்றொழில் நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சரும், யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களும், சிறப்பு விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ கருணநாதன் இளங்குமரன் அவர்களும் கலந்து கொண்டு பயனாளிகளுக்கான காசோலைகளை வழங்கி வைத்தனர்.
அரசாங்க அதிபரின் தலைமையுரை :
ஒவ்வொரு குடும்பத்திற்கும் பாதுகாப்பான, கௌரவமான வாழ்விடத்தை உறுதி செய்வதே அரசின் இலக்கு – அரசாங்க அதிபர் இந் நிகழ்விற்கு வருகை தந்துள்ள கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் மற்றும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர், பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ கருணாநாதன் இளங்குமரன் உள்ளிட்ட அதிதிகளை வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன் எனத் தெரிவித்தார். அதிமேதகு சனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களின் எண்ணக்கருவுக்கும், அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்திற்கும் அமைவாக, நாட்டின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் பாதுகாப்பானதும் கௌரவமானதுமான வாழ்விடத்தை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டு தேசிய வீடமைப்புத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன எனத் தெரிவித்தார். அந்த வகையில், சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்து வருகின்ற குடும்பங்களுக்கு நிலையான குடும்ப வாழ்க்கையையும் சிறந்த எதிர்காலத்தையும் உருவாக்குவதற்கான அரசாங்கத்தின் முக்கியமான சமூகப் பாதுகாப்புத் திட்டமாக இவ்வீடமைப்பு உதவித் திட்டம் அமைகின்றது எனத் தெரிவித்தார்.
அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் வழிகாட்டுதலின் வீடமைப்பு திட்டத்திற்கான நிதி அதிகரிப்பு :
முன்னர் 9 இலட்சம் மற்றும் 6 இலட்சம் ரூபாயாக வழங்கப்பட்டு வந்த வீடமைப்பு உதவித் தொகை, தற்போதைய நிர்மாணச் செலவுகள் மற்றும் மக்களின் பொருளாதார நிலைமைகளை கருத்திற்கொண்டு, அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் வழிகாட்டுதலின் அமைச்சரவை பத்திரம் மூலம் 20 இலட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்கள் குறைந்தபட்ச வசதிகளைக் கொண்ட வீடுகளை மாத்திரமன்றி, பாதுகாப்பானதும் தரமானதுமான வீடுகளை நிர்மாணிப்பதற்கான வாய்ப்பைப் பெறுகின்றனர்.
திட்டத்தின் நோக்கம் :
மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சினால், யாழ்ப்பாணம் மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகப் பிரிவுகளில் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு–செலவுத் திட்ட முன்மொழிவுகளின் அடிப்படையில், தமது வாழ்க்கையின் ஏதேனும் ஒரு கட்டத்தில் நிறுவனமயப்படுத்தப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்ட பிள்ளைகளின் குடும்பங்களுக்கு சொந்தமான காணியில் வீடு ஒன்றை நிர்மாணித்துக் கொள்வதற்கும், ஏற்கனவே காணப்படும் வீட்டை மறுசீரமைப்பதற்கும் நிதியுதவி வழங்கும் நோக்கில் இத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. குறிப்பாக, சிறுவர் இல்லங்கள் மற்றும் சமூக மேம்பாட்டு நிறுவனங்களின் பராமரிப்பில் இருந்து முன்னேற்றம் கண்டு, தற்போது தங்களது குடும்ப வாழ்க்கையை முன்னெடுத்து வருகின்றவர்களுக்கு நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதற்கான அரசாங்கத்தின் ஆதரவாக இத்திட்டம் அமைகின்றது.
இது வரை தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் எண்ணிக்கை :
யாழ்ப்பாண மாவட்டத்தில் இத் திட்டத்தின் கீழ் 34 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், முதற்கட்டமாக 23 பயனாளிகளுக்கான காசோலைகள் இன்றைய தினம் வழங்கப்படுகின்றன. மேலும், வீட்டின் நிர்மாணப் பணிகளின் முன்னேற்றத்திற்கு ஏற்ப கட்டங்கட்டமாக வழங்கப்படும். அதன் முதற்கட்டமாக 4 இலட்சம் ரூபாய் இன்று வழங்கப்படுவதுடன், மீதமுள்ள 16 இலட்சம் ரூபாயும் உரிய கட்டங்களில் வழங்கப்படும். காணி வசதி இல்லாத பயனாளிகள் காணியைப் பெற்றுக்கொள்வதற்கும் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், வீடமைப்புக்குத் தேவையான மணலைப் பெற்றுக்கொள்வதற்கான ஒருங்கிணைப்பும் பிரதேச செயலாளர்கள் ஊடாக மாவட்டச் செயலகத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் இந்த உதவியின் மூலம் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் பாதுகாப்பான, நிலையான மற்றும் வளமான எதிர்காலம் உருவாக வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும் என அரசாங்க அதிபர் தெரிவித்தார். இந் நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க. சிவகரன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) பா. ஜெயகரன், திட்டமிடல் பணிப்பாளர் இ. சுரேந்திரநாதன், உதவி மாவட்ட செயலாளர் உ. தர்ஷினி, பிரதேச செயலாளர்கள், மாவட்ட மற்றும் பிரதேச செயலக கணக்காளர்கள், உதவி/பிரதி திட்டமிடல் பணிப்பாளர்கள், தொடர்புடைய உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
 
1 2 3 4 5 6 7 8 9 15