யாழ்ப்பாணத்திற்கான ஒருங்கிணைந்த நகரப் போக்குவரத்து முதன்மைத் திட்டத்திற்கான பணிக்குரிய ஆய்வுக்கான விடயங்களை (ToR) ஆராய்வு செய்வதற்கான பங்குதாரர்களுடனான கலந்துரையாடல், பாராளுமன்ற உறுப்பினரும் யாழ்ப்பாண மாவட்ட போக்குவரத்து ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ கருணநாதன் இளங்குமரன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (02.10.2026) காலை 10.00 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
தலைமையுரை :
யாழ்ப்பாணத்திற்கான ஒருங்கிணைந்த நகர மற்றும் போக்குவரத்துத் திட்டம் அடுத்த தலைமுறையையும் கருத்திற்கொண்டு அமைய வேண்டும் – பாராளுமன்ற உறுப்பினர் கருணாநாதன் இளங்குமரன் யாழ்ப்பாண மாவட்டத்திற்கான ஒருங்கிணைந்த நகர மற்றும் போக்குவரத்துத் திட்டம், அனைத்து திணைக்களங்களையும் ஒருங்கிணைத்து, அறிவுசார் நிபுணர்களின் கருத்துக்களையும் உள்வாங்கி, எதிர்காலத் தலைமுறையினரின் தேவைகளைக் கருத்திற்கொண்டு நீண்டகாலப் பயனளிக்கும் வகையில் திட்டமிடப்பட வேண்டும் என தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்டத்தில் அதிகரித்து வரும் போக்குவரத்துத் தேவைகளைக் கருத்திற்கொண்டு, யாழ்ப்பாணம் – பலாலி, யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை, மானிப்பாய் உள்ளிட்ட பிரதான போக்குவரத்துப் பாதைகள் தொடர்பில் ஒருங்கிணைந்த முறையில் திட்டமிடல் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.குறிப்பாக விமான நிலையம் மற்றும் காங்கேசன்துறை துறைமுகம் போன்ற முக்கிய இணைப்புகளின் எதிர்கால வளர்ச்சியையும் கருத்திற்கொண்டு போக்குவரத்து கட்டமைப்புகள் திட்டமிடப்பட வேண்டும் என் குறிப்பிட்டார். யாழ்ப்பாண நகரில் தற்போதுள்ள பேருந்து நிலையம் மற்றும் போக்குவரத்து வசதிகள் எதிர்காலத் தேவைகளுக்கு போதுமானதாக இல்லை எனக் குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினர் நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக புதிய பேருந்து நிலையங்கள் மற்றும் முறையான வாகனத் தரிப்பிடங்களை அமைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும் எனத் தெரிவித்தார். குறிப்பாக வைத்தியசாலை வீதியில் அதிகளவில் இருசக்கர வாகனங்கள் பயன்படுத்தப்படுவதைக் கருத்திற்கொண்டு, மாவட்டச் செயலகம் பகுதியிலிருந்து இருசக்கர வாகனங்களுக்கு தனியான பாதையை ஏற்படுத்துவதுடன், நடைபாதை மற்றும் வாகனப் பாதைகளை முறையாகப் பிரித்து அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார். அத்துடன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு வருகை தரும் பொதுமக்களின் வாகனங்களை முறையாக நிறுத்துவதற்கான தரிப்பிட வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும். இதன் மூலம் வைத்தியசாலை வீதியில் ஏற்படும் வாகன நெரிசலைக் குறைத்து, வீதியின் பயன்பாட்டுத் திறனை மேம்படுத்த முடியும் எனவும் தெரிவித்தார். நகரப் பகுதிகளில் முச்சக்கர வண்டிகளுக்கு தனித்தனியான ஒழுங்குபடுத்தப்பட்ட தரிப்பிடங்களை அமைத்து, தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அவற்றை நிர்வகிப்பதற்கான பொறிமுறையொன்றை உருவாக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
மேலும், மானிப்பாய், மருதனார்மடம், காங்கேசன்துறை போன்ற முக்கிய நகர மையங்களில் புதிய பேருந்து நிலையங்களை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்பட வேண்டும். குறிப்பாக மானிப்பாய் பகுதியில் பேருந்து நிலையம் அமைப்பதற்கான இடவசதிகள் தொடர்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் நகரங்களாகவும் முக்கிய போக்குவரத்து மையங்களாகவும் வளரக்கூடிய பகுதிகளை முன்கூட்டியே அடையாளம் கண்டு திட்டமிட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.நகர அபிவிருத்தியின் போது சிறிய அளவிலான தனித்தனி அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதை விட, வர்த்தக நிலையங்கள், பேருந்து நிலையங்கள், வாகனத் தரிப்பிடங்கள், நடைபாதைகள் மற்றும் போக்குவரத்துக் கட்டமைப்புகள் அனைத்தையும் ஒருங்கிணைத்த முழுமையான நகர அபிவிருத்தித் திட்டமொன்று அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டார். மேலும், தற்போதுள்ள பழைய வர்த்தகக் கட்டடங்களை எதிர்காலத் தேவைகளுக்கு ஏற்ற வகையில் நவீன வர்த்தக மற்றும் குடியிருப்புத் தொகுதிகளாக அபிவிருத்தி செய்வதற்கான வாய்ப்புகளும் ஆராயப்பட வேண்டும். இவ்வாறான அபிவிருத்திகள் மேற்கொள்ளப்படும் போது வர்த்தகர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் திட்டமிடல் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம் எனவும் அவர் தெரிவித்தார். அதேவேளை, எதிர்காலத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய பேருந்து சேவைகள், குளிரூட்டப்பட்ட பேருந்துகள், மினி பேருந்துகள் மற்றும் ஊரகப் போக்குவரத்து சேவைகளின் தேவைகளையும் தற்போதைய திட்டமிடலில் உள்வாங்க வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ கருணாநாதன் இளங்குமரன் தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்டத்தில் தேவையான நிலவளங்கள் காணப்படுவதால், அவற்றை முறையாக அடையாளம் கண்டு, விஞ்ஞான ரீதியான ஆய்வுகளின் அடிப்படையில் நீண்டகாலத் திட்டமிடலை மேற்கொள்ள வேண்டும். உரிய திட்ட முன்மொழிவுகள் தயாரிக்கப்பட்டு அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்படும் பட்சத்தில், அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான நிதி மற்றும் தேவையான ஆதரவைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அரசாங்க அதிபர் கருத்துக்கள் :
இக் கலந்துரையாடலுக்கு தலைமைதாங்கும் கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் உள்ளிட்டவர்களை வரவேற்று, நகர அபிவிருத்தி திட்டம் (10 City Programme) யாழ்ப்பாண மாவட்டத்தின் அபிவிருத்திப் பயணத்தில் முக்கியத்துவம் வாய்ந்த செயற்திட்டமாகும் எனக் குறிப்பிட்டதுடன், இத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் அனைத்து தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவும், மாவட்டத்தின் எதிர்காலத் தேவைகளுக்கு பொருத்தமானதாகவும் அமைய வேண்டுமென தெரிவித்தார். மேலும், யாழ்ப்பாண மாவட்டம் தரைவழி, புகையிரத, கடல்வழி மற்றும் விமானப் போக்குவரத்து என நான்கு முக்கிய போக்குவரத்து மார்க்கங்களையும் கொண்டுள்ளதால், அவற்றுக்கிடையிலான ஒருங்கிணைப்பை அடிப்படையாகக் கொண்ட போக்குவரத்து திட்டமிடல் அவசியம் எனவும் சுட்டிக்காட்டினார். குறிப்பாக, காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் விமான நிலையம் சார்ந்த போக்குவரத்து வாய்ப்புகள் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்களில் உரிய முறையில் உள்வாங்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார். நான்கு வகையான போக்குவரத்து வசதிகளுடனும் தொடர்புடைய முக்கிய பிரதேசமாக விளங்கும் வலிகாமம் வடக்கு பிரதேச செயலகப் பிரிவின் புவியியல் மற்றும் உட்கட்டமைப்பு வாய்ப்புகளும் திட்டமிடலில் கருத்தில்கொள்ளப்பட வேண்டுமென குறிப்பிட்டார். யாழ்ப்பாண நகரில் தனியார் பேருந்து நிலையம் மற்றும் இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்து நிலையம் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து வசதிகள் தொடர்பில் பொதுமக்களால் முன்வைக்கப்படும் குறைபாடுகளுக்கு தீர்வு காணும் வகையில், நகர அபிவிருத்தியுடன் இணைந்த ஒருங்கிணைந்த பொதுப் போக்குவரத்து முறைமை உருவாக்கப்பட வேண்டும் என அரசாங்க அதிபர் தெரிவித்தார். அதேவேளை, இரவு நேரப் பொதுப் போக்குவரத்து சேவைகளையும் விரிவுபடுத்த வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். குறிப்பாக இரவு 8 மணிக்குப் பின்னர் பொதுப் போக்குவரத்து சேவைகள் குறைவடைவதால் பொதுமக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை கருத்தில்கொண்டு, தற்போதைய சமூக மற்றும் பொருளாதாரத் தேவைகளுக்கு ஏற்ப புதிய போக்குவரத்து அணுகுமுறைகள் உருவாக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார். முச்சக்கர வண்டி சேவைகள் மற்றும் கட்டண முறைமை தொடர்பில் பொதுமக்களிடமிருந்து முன்வைக்கப்படும் கருத்துக்களும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் எனக் குறிப்பிட்ட அரசாங்க அதிபர், பொதுப் போக்குவரத்தை அதிகளவில் பயன்படுத்தும் மக்களின் பயணச் செலவு, பாதுகாப்பு, வசதி மற்றும் பொருளாதார நிலை ஆகியவற்றை மையமாகக் கொண்டே போக்குவரத்துத் திட்டமிடல் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
கலந்துரையாடப்பட்ட விடயங்கள் :
யாழ்ப்பாண நகரத்தின் எதிர்கால போக்குவரத்து தேவைகள், நகர அபிவிருத்தி மற்றும் மக்களின் அன்றாட போக்குவரத்து வசதிகளை கருத்திற்கொண்டு ஒருங்கிணைந்த நகரப் போக்குவரத்து திட்டத்தை தயாரிப்பதற்கான தொடர்பில் முன்வைப்புக்கள் மூலம் கலந்துரையாடப்பட்டது. யாழ்ப்பாணத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள இத்திட்டம் அனைத்து தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையிலும், எதிர்கால சந்ததியினரின் தேவைகளையும் கருத்திற்கொண்டு நீண்டகாலப் பயன்பாட்டை உறுதி செய்யும் வகையிலும் அமைய வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது. இத்திட்டம் மேலதிக ஆய்வுகளுக்காக மொறட்டுவ பல்கலைக்கழகத்திற்கு சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், திட்டத்தின் நடைமுறைச் சாத்தியப்பாடுகள் மற்றும் எதிர்காலத் தேவைகள் தொடர்பில் புத்திஜீவிகள், கல்வியாளர்கள், துறைசார் நிபுணர்கள் மற்றும் ஏனைய பங்குதாரர்களிடமிருந்து மக்களை மையப்படுத்திய ரீதியில் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் இக் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டது.
இக் கலந்துரையாடலில் முன்வைக்கப்பட்ட முக்கிய ஆலோசனைகள் :
யாழ்ப்பாண நகரத்தின் போக்குவரத்து நெரிசலைக் குறைத்தல், பாதுகாப்பான போக்குவரத்தை உறுதி செய்தல் மற்றும் எதிர்கால நகர வளர்ச்சிக்கு ஏற்ற போக்குவரத்து கட்டமைப்பை உருவாக்குதல் தொடர்பில் பல்வேறு ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டன. வைத்தியசாலை வீதி, பல்கலைக்கழக வீதி, பாடசாலை வீதிகள் உள்ளிட்ட பிரதான வீதிகளை எதிர்கால போக்குவரத்து தேவைகளுக்கு ஏற்ப அகலப்படுத்துதல். வைத்தியசாலைகள் மற்றும் முக்கிய பொது இடங்களை அண்மித்த பகுதிகளில் வாகனத் தரிப்பிட வசதிகளை முறையாக ஒழுங்கமைத்தல். பல்கலைக்கழகங்கள் மற்றும் பாடசாலைகளை அண்மித்த வீதிகளில் பாதுகாப்பான நடைபாதைகள் மற்றும் துவிச்சக்கர வண்டிப் பாதைகளை தனியாக அமைத்தல். கனரக வாகனங்கள் நகரப் பிரவேசத்திற்கான நேர அட்டவணையை ஒழுங்குபடுத்துதல். வீதி விபத்துக்களைத் தடுக்கும் வகையில் வீதி ஒழுங்குகள், போக்குவரத்துச் சின்னங்கள் மற்றும் சிறந்த தெருவிளக்கு வசதிகளை முறையாக ஏற்படுத்துதல். போக்குவரத்து விதிமீறல்களை கட்டுப்படுத்தும் வகையில் சாரதி அனுமதிப் பத்திரத்தில் புள்ளி அடிப்படையிலான தண்டனை முறைமையை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஆராய்தல். வீதிகளை அகலப்படுத்தும் போது தேவையாகும் காணி பெற்றுக்கொள்வதில் ஏற்படக்கூடிய சவால்கள், அதற்கான தீர்வுகள் மற்றும் மக்களின் நலன்களை கருத்திற்கொண்டு திட்டமிடுதல். மொறட்டுவ பல்கலைக் கழகத்தினர் இப் பங்குதாரர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட நடவடிக்கை எடுத்தல். மேலும், போக்குவரத்து முகாமைத்துவம், பொது போக்குவரத்து மற்றும் எதிர்கால நகர அபிவிருத்தி உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் துறைசார் அதிகாரிகள் மற்றும் பங்குதாரர்களால் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
கலந்துரையாடலில் பங்கு பற்றிய வர்கள் :
இக்கலந்துரையாடலில் நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் திரு. டி.எஸ்.பி.கே. திசாநாயக்க, உள்ளூராட்சி ஆணையாளர் திரு. எஸ். சுதர்சன், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு. க. சிவகரன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு. பா. ஜெயகரன், திட்டமிடல் பணிப்பாளர் திரு. இ. சுரேந்திரநாதன், மாவட்டப் பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் திரு.எஸ். சிவகுமாரன்
உதவி மாவட்ட செயலாளர் செல்வி உ. தர்ஷினி, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் யாழ்ப்பாண மாவட்ட இணைப்பாளர் திரு. எஸ். சிறிவாகீசன், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உறுப்பினரும் சிரேஷ்ட பேராசிரியருமான வைத்திய கலாநிதி கே. ரவிராஜ், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எஸ். அறிவழகன், நகர அபிவிருத்தி அதிகார சபையின் மேலதிக பணிப்பாளர் திரு. ரி. பிரேம்நாத், வர்த்தக சங்க தலைவர் திரு. ஜனத்குமார், நகர அபிவிருத்தி அதிகார சபையின் பிரதிப் பணிப்பாளர், தெல்லிப்பழை, பிரதேச செயலாளர்கள், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதம பொறியியலாளர், வர்த்தக சங்கத் தலைவர், யாழ்ப்பாணப் பிரதேச செயலகப் பிரதித் திட்டமிடல் பணிப்பாளர், யாழ்ப்பாணப் போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் துறைசார் திணைக்களங்களின் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 
1 2 3 4 5 6 7