பிரதேச செயல உள்ளக அலுவலர் பிரிவு உத்தியோகத்தர்களுக்கான செயலமர்வு யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு. கே. சிவகரன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (02.10.2026) யாழ்ப்பாண மாவட்டச் செயலக செயலமர்வு மண்டபத்தில் நடைபெற்றது.
அரசாங்க அதிபரின் கருத்துரை :
இச் செயலமர்வின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துரையாற்றிய யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள், அரச நிறுவனங்களில் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் நேர்மையான நிர்வாகத்தை உறுதிப்படுத்துவதில் உள்ளக அலுவல்கள் பிரிவுகள் முக்கிய பங்காற்ற வேண்டுமெனத் தெரிவித்தார். மேலும், தேசிய நேர்மை விருது போட்டித் தொடரை ஒரு போட்டியாக மாத்திரம் கருதாமல், அரச சேவையில் நேர்மை மற்றும் ஊழல் தடுப்பு நடைமுறைகளை வலுப்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். இலஞ்சம் மற்றும் ஊழலைத் தடுப்பதுடன், மக்களுக்கு நியாயமானதும் வெளிப்படையானதுமான அரசாங்க நிர்வாகத்தை உறுதிப்படுத்துவதில் ஒவ்வொரு பிரதேச செயலகத்திலும் ஸ்தாபிக்கப்பட்டுள்ள உள்விவகார அலகுகள் முக்கிய பங்காற்ற வேண்டும் என அரசாங்க அதிபர் வலியுறுத்தினார். பிரதேச செயலகங்களில் உதவி பிரதேச செயலாளர், கணக்காளர் அல்லது பதவி நிலை உத்தியோகத்தர் ஒருவரின் தலைமையில் உள்விவகார அலகுகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், அவற்றுடன் இணைந்து செயற்படுவதற்காக உத்தியோகத்தர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த அலகுகளுக்குக் கிடைக்கப்பெறும் தகவல்கள் மற்றும் முறைப்பாடுகளை முறையாகப் பதிவு செய்து, அவற்றை இற்றைப்படுத்துவதுடன், தேவையான விசாரணைகளை மேற்கொண்டு உரிய அறிக்கைகளைச் சமர்ப்பிப்பது உள்விவகார அலகுகளின் முக்கிய பொறுப்பாகும் என அரசாங்க அதிபர் தெரிவித்தார். இலஞ்சம் பெறுதல், இலஞ்சம் வழங்குதல் மற்றும் ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடுதல் தொடர்பில் பொதுமக்களுக்கும் அரச உத்தியோகத்தர்களுக்கும் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இவ்வலகுகளின் முக்கிய பணிகளில் ஒன்றாகும் எனவும் அவர் குறிப்பிட்டார். பொதுமக்களிடமிருந்து கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளை எவ்வித பக்கச்சார்புமின்றி ஆராய்ந்து, அவற்றின் அடிப்படையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் மக்களை மையப்படுத்திய நிர்வாகத்தை வலுப்படுத்த முடியும் எனவும் தெரிவித்தார். இதேவேளை, மாவட்ட மட்டத்திலும் அரசாங்க அதிபர் தலைமையில் உள்விவகார அலகு செயற்பட்டு வருவதுடன், அதற்கென உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். உள்விவகார அலகுகளுக்குப் பொறுப்பான உத்தியோகத்தர்கள் உரிய தலைமைத்துவப் பண்புகளுடன் செயற்பட்டு, தங்களுடன் இணைந்து பணியாற்றும் உத்தியோகத்தர்களை முறையாக வழிநடத்த வேண்டும் எனவும் அரசாங்க அதிபர் வலியுறுத்தினார். இவ்விடயம் தொடர்பான பயிற்சிகள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் காலங்களிலும் மேலதிக பயிற்சிகள் மற்றும் வழிகாட்டல்கள் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மக்களின் நலனை முன்னிறுத்திய, நீதியான, பொறுப்புக்கூறல் மிக்க மற்றும் வெளிப்படையான நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்குவதற்கு உள்விவகார அலகுகளின் உத்தியோகத்தர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என அரசாங்க அதிபர் கேட்டுக்கொண்டார்.
போட்டித் தொடர் தொடர்பான விளக்கங்களும் தெளிவுபடுத்தல்களும் :
இலங்கை அரசின் தேசிய நோக்கத்திற்கேற்ப “ஊழலற்ற, நேர்மையான அரச சேவையை வழங்குதல்” என்ற நோக்குடன் இலஞ்சம் அல்லது ஊழல் தொடர்பான குற்றங்களை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் (CIABOC) ஏற்பாடு செய்யப்படும் தேசிய நேர்மை விருது போட்டித் தொடர் – 2026, எதிர்வரும் டிசம்பர் 8ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு, இலங்கையிலுள்ள அரச நிறுவனங்களுக்கிடையே தேசிய நேர்மை விருது போட்டி நடத்தப்படவுள்ளதுடன், போட்டிக்கான வினாக்கொத்துக்கள் வழங்கப்பட்டு, மொத்தம் 1,000 புள்ளிகளின் அடிப்படையில் நிறுவனங்களின் செயற்பாடுகள் மதிப்பீடு செய்யப்படவுள்ளன. மதிப்பீட்டின் அடிப்படையில் சிறந்த நிறுவனமாகத் தெரிவு செய்யப்படும் நிறுவனங்களுக்கு தேசிய நேர்மை விருதுகள் வழங்கப்படவுள்ளன. யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள ஒவ்வொரு பிரதேச செயலகப் பிரிவிலிருந்தும் தெரிவு செய்யப்பட்ட பதவி நிலை உத்தியோகத்தர் ஒருவரும், உள்ளக அலுவல்கள் பிரிவில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களும் இச் செயலமர்வில் பங்கேற்றனர். இச் செயலமர்வில் மேலதிக அரசாங்க அதிபரால் தேசிய நேர்மை விருது போட்டித் தொடருடன் தொடர்புடைய விடயங்கள், போட்டியின் நிபந்தனைகள் மற்றும் மதிப்பீட்டு நடைமுறைகள் தொடர்பில் பங்கேற்பாளர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது. அத்துடன், பிரதேச செயலகங்களில் புதிதாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள உள்ளக அலுவல்கள் பிரிவின் கடமைகள், பொறுப்புக்கள் மற்றும் அப்பிரிவினால் முன்னெடுக்கப்பட வேண்டிய செயற்பாடுகள் தொடர்பிலும் விரிவாக விளக்கமளிக்கப்பட்டது. மேலும், இச் செயலமர்வில் உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ. தர்சினி மாவட்ட உள்ளக அலுவல்கள் பிரிவில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களான திருமதி. மேகலா மற்றும் திருமதி. டினோசாமலின் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
1 2 3 4 5 6 7 8 9 10 11 12