கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் ஆசிரியர் மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆசிரியர் தின விழா கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் அதிபர் 'செந்தமிழ்ச் சொல்லருவி' எஸ். லலீசன் அவர்களின் தலைமையில் இன்று(06.10.2026) செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணிக்கு கலாசாலையின் ரதிலட்சுமி மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில், யாழ்ப்பாண மாவட்டச் அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பித்தார். கலாசாலையின் முன்னாள் விரிவுரையாளர் திருமதி பரமேஸ்வரி நாகரத்தினம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
பிரதம விருந்தினர் உரை :
அரசாங்க அதிபர் தமதுரையில், ஆசிரியர் பணி மிகவும் உயர்ந்த சமூகப் பணியாகும் எனத் தெரிவித்த அவர், வைத்தியர் ஒருவர் ஒரு நோயாளியைக் காப்பாற்றுகின்றார், பொறியியலாளர் ஒருவர் ஒரு கட்டிடத்தை உருவாக்குகின்றனர் ஆனால், ஒரு நல்ல ஆசிரியர் ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்குகின்றார். மனிதனின் வளர்ச்சிக்கு அறிவு, திறன், மனப்பான்மை ஆகிய மூன்றும் முக்கியமானவை எனச் சுட்டிக்காட்டிய அரசாங்க அதிபர், ஆசிரியர்கள் இம்மூன்று துறைகளிலும் தொடர்ச்சியாகத் தங்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார். மாறிவரும் நவீன உலகில் மாணவர்கள் தகவல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களின் ஊடாகப் பரந்த அறிவைப் பெற்றுவருகின்றனர். எனவே, அவர்களைக் கற்பிக்கும் ஆசிரியர்களும் தமது அறிவையும் கற்பித்தல் திறன்களையும் தொடர்ச்சியாகப் புதுப்பித்துக்கொள்ள வேண்டியது அவசியம் என வலியுறுத்தினார். பாட அறிவை வழங்குவதுடன் ஆசிரியர்களின் பணி நிறைவடைவதில்லை என்றும், மாணவர்களிடையே சமூக விழுமியங்கள், ஒழுக்கம், பொறுப்புணர்வு மற்றும் சரியான மனப்பான்மையையும் உருவாக்குவது ஆசிரியர்களின் முக்கியமான பொறுப்பு என்றும் தெரிவித்தார். ஆசிரியர் பணி என்பது மிகவும் உன்னதமான, உயர்ந்த ஒரு பணியாகும். அந்த வரமும் வாய்ப்பும் உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதனைச் சரியான முறையில் பயன்படுத்துவதன் மூலம் உங்கள் சமூகத்தை மட்டுமன்றி, தேசிய மற்றும் சர்வதேச மட்டத்திலும் சிறந்த மாணவர்களை உருவாக்குவதற்கு ஆசிரியர்கள் பங்களிக்க முடியும். மேலும், ஆசிரியர் பணி சம்பளத்திற்காகவோ அல்லது ஒரு நியமனத்திற்காகவோ மேற்கொள்ளப்படும் சாதாரண தொழில் அல்ல எனக் குறிப்பிட்ட அவர், 30 ஆண்டுகளுக்கு முன்னர் பெற்ற அறிவை வைத்துக்கொண்டு 30 ஆண்டுகளுக்குப் பின்னர் மாணவர்களை வழிநடத்த முடியாது எனத் தெரிவித்தார். ஆசிரியர்கள் தொடர்ச்சியான கல்வி, உயர்கல்வி, தொழில்முறைப் பயிற்சி மற்றும் சுயமேம்பாட்டில் ஈடுபட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். ஒரு மாணவன் வாழ்க்கையில் உயர்வடையும் போது அதைக் கண்டு முதலில் மகிழ்ச்சியடையும் நபர் ஆசிரியரே எனக் குறிப்பிட்ட அரசாங்க அதிபர், மாணவர்களின் வெற்றியில் ஆசிரியர்களின் பங்களிப்பு அளப்பரியது என்றார். ஆசிரியர்கள் தங்களை முதலில் வளப்படுத்திக்கொண்டால், அவர்கள் கற்பிக்கும் மாணவர் சமுதாயமும் அறிவு, திறன் மற்றும் சிறந்த மனப்பான்மை கொண்ட வளமான சமுதாயமாக உருவாகும் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார். ஆசிரியர்கள் சமூகத்தின் அடித்தளக் கட்டுமான சக்திகளாகவும், இளைய தலைமுறையைச் சரியான பாதையில் வழிநடத்தும் முக்கியமான பொறுப்பை வகிப்பவர்களாகவும் உள்ளனர் எனக் குறிப்பிட்ட அவர், யாழ்ப்பாண மாவட்டம், வடமாகாணம் மற்றும் நாட்டின் முன்னேற்றத்திற்கு ஆசிரியர்களின் முழுமையான பங்களிப்பை எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.
நிகழ்வுகள் :
விழாவின் ஆரம்ப நிகழ்வாக, விருந்தினர்கள் மற்றும் கலாசாலை விரிவுரையாளர்கள், கலாசாலை சிவன் ஆலயத்திலிருந்து மங்கல வாத்திய இசையுடன் விழா மண்டபத்திற்கு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பிரதான நிகழ்வில் ஆசிரியர் தினத்தின் முக்கியத்துவம், ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் சமூகத்தில் ஆசிரியர்களின் பங்களிப்பு தொடர்பான கருத்துரைகள் இடம்பெற்றன. மேலும், கலாசாலை விரிவுரையாளர்கள் மற்றும் வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் பட்டதாரி ஆசிரியர் சேவைப் பயிற்சியாளர்களின் பங்குபற்றுதலுடன் பல்வேறு கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன. தொடர்ந்து ஆசிரியர் கலாசாலையின் ஆசிரியர் மாணவர்களின் விரிவுரையாளர்கள் கெளரவிக்கப்பட்டனர். ஆசிரியர் தொழிலின் மாண்பையும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பையும் எடுத்துரைக்கும் வகையில் நடைபெற்ற இவ்விழாவில், கலாசாலை விரிவுரையாளர்கள், ஆசிரியர் மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.







