பால்நிலை சமத்துவம் தொடர்பான தேசிய மற்றும் சர்வதேச சட்டங்கள், கொள்கை ரீதியான கடப்பாடுகள் மற்றும் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறைகள் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு, யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு. கே. சிவகரன் அவர்களின் தலைமையில் இன்று (06.10.2026) மாவட்டச் செயலக செயலமர்வு மண்டபத்தில் நடைபெற்றது. பால்நிலை சமத்துவத்தை மேம்படுத்துதல், பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளைத் தடுத்தல் மற்றும் அவற்றினால் ஏற்படும் பிரச்சினைகளை உரிய முறையில் கையாள்வதற்கான அறிவையும் புரிதலையும் உத்தியோகத்தர்களிடையே மேம்படுத்தும் நோக்கில் இச்செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
தலமையுரை :
இதன்போது கருத்துத் தெரிவித்த மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் அவர்கள் பால்நிலை சமத்துவம் தொடர்பாக மாவட்ட மற்றும் பிரதேச மட்டங்களில் பல்வேறு செயற்றிட்டங்களும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். கிராம மட்டங்களில் பால்நிலை சமத்துவம் தொடர்பான பல்வேறு பிரச்சினைகளை மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எதிர்கொண்டு வருவதுடன், அவற்றுக்கான பொருத்தமான தீர்வுகளையும் வழங்கி வருவதாகக் குறிப்பிட்ட அவர், இத்தகைய பிரச்சினைகளை சட்ட ரீதியாகவும் நடைமுறை ரீதியாகவும் எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பான தெளிவான அறிவு உத்தியோகத்தர்களுக்கு அவசியமானது எனவும் தெரிவித்தார். தேசிய மற்றும் சர்வதேச சட்டங்கள் மற்றும் கொள்கை ரீதியான கடப்பாடுகளை பிரதேச மற்றும் மாவட்ட மட்டங்களில் மக்களுக்குப் பயனளிக்கும் வகையில் எவ்வாறு பயன்படுத்துவது, நிலையான செயற்பாடுகளை முன்னெடுப்பது மற்றும் முரண்பாடுகளைத் தவிர்த்து பிரச்சினைகளை திறம்படக் கையாள்வது போன்ற விடயங்களில் இச்செயலமர்வு பயனுள்ள அறிவைப் பெற்றுக்கொள்ள உதவும் எனவும் அவர் தெரிவித்தார். மேலும், பிரதேச மட்டங்களில் பால்நிலை சமத்துவம் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் முரண்பாடுகள் ஏற்படும் சந்தர்ப்பங்களில் அவற்றை உரிய முறையில் அடையாளம் கண்டு, சட்டரீதியான மற்றும் நடைமுறை ரீதியான அணுகுமுறைகளின் ஊடாக இலகுவாகக் கையாள்வதற்குத் தேவையான அறிவையும் திறன்களையும் இச்செயலமர்வின் மூலம் பெற்றுக்கொள்ளுமாறு அவர் உத்தியோகத்தர்களைக் கேட்டுக்கொண்டார்.
வளவாளர்கள் :
இச் செயலமர்வில், பால்நிலை வன்முறைகளால் ஏற்படும் உளவியல் பாதிப்புகள் மற்றும் அவற்றுக்கான வழிகாட்டல்கள் தொடர்பாக உளநல மருத்துவர் வைத்தியர் ஏ. வினோதா, பால்நிலை வன்முறைகளால் ஏற்படும் உடல் ரீதியான பாதிப்புகள் மற்றும் அவற்றை அடையாளம் காணும் முறைகள் தொடர்பாக சட்ட வைத்திய நிபுணர் வைத்தியர் எஸ். பிரணவன், பால்நிலை சமத்துவம் தொடர்பான தேசிய மற்றும் சர்வதேச சட்டங்கள் மற்றும் கொள்கை ரீதியான கடப்பாடுகள் தொடர்பாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டபீட சிரேஷ்ட விரிவுரையாளர் திருமதி கோசலை மதன் ஆகியோர் வளவாளர்களாகக் கலந்துகொண்டு கருத்துரைகளை வழங்கினர். இச் செயலமர்வில் உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ. தர்சினி, மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், உளவளத்துணை உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்டச் செயலக சிறுவர் மற்றும் பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.







