வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன், வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச செயலகமும் (கரவெட்டி) பிரதேச பண்பாட்டுப் பேரவையும் இணைந்து நடத்திய “பிரதேச பண்பாட்டு விழா 2026”, இன்று (06.10.2026) செவ்வாய்க்கிழமை பி.ப. 1.30 மணிக்கு கரணவாய் மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில், “எழுத்து சீர்காழி சங்கீதபூஷணம்” செல்லத்துறை குமாரசாமி அரங்கில் பல்வேறு கலை நிகழ்வுகளுடன் கோலாகலமாக நடைபெற்றது. வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச செயலாளரும் பிரதேச பண்பாட்டுப் பேரவைத் தலைவருமான திருவாட்டி. உமாமகள் மணிவண்ணன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் பிரதம விருந்தினராகவும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகவியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் திரு. இராஜேஸ்வரன் இராஜேஸ்கண்ணன் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொண்டனர். கௌரவ விருந்தினர்களாக யாழ்ப்பாண மாவட்ட செயலக சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் திருவாட்டி. மாலினி கிருஷ்ணானந்தன், கரவெட்டி கிழக்கு இசைநாடகக் கலைஞர் “கலாபூஷணம்” காசியன் வீரபுத்திரன் மற்றும் அல்வாய் நாடகக் கலைஞர் “கலாபூஷணம்” மாணிக்கம் அனந்தராசன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
நிகழ்வுகள் :
பண்பாட்டு ஊர்வலத்துடன் விழா ஆரம்பமானதையடுத்து, விருந்தினர்களை வரவேற்றல், மங்கள விளக்கேற்றல் ஆகிய நிகழ்வுகள் இடம்பெற்றன. தொடர்ந்து அமிர்தவாஹினி இசை மன்ற மாணவர்களின் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் குருக்ஷேத்திரம் நடனாலய மாணவர்களின் வரவேற்பு நடனம் ஆகியன இடம்பெற்றன. இதனைத் தொடர்ந்து வடமராட்சி தெற்கு மேற்கு உதவிப் பிரதேச செயலாளர் திரு. செல்வரத்தினம் சாருத்தன் வரவேற்புரையாற்றினார். “கலாபூஷணம்” கே.எஸ். சிவஞானராஜா அவர்களால் அரங்கு உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. பின்னர் கலாசார மத்திய நிலைய மாணவர்களின் நடேச கீர்த்தனம் இடம்பெற்றதுடன், பிரதேச செயலாளரின் தலைமையுரையும் இடம்பெற்றது. தொடர்ந்து கலையக நடனாலய மாணவர்களின் “பாரதியின் பன்முக நடனம்”, கரவெட்டி பிரதேச கலைஞர்களின் “ஏழு பிள்ளை நல்ல தங்காள்” இசை நாடகம், விக்னா இசை மன்ற கலைஞர்களின் வாத்திய சங்கமம், குருக்ஷேத்திரம் நடனாலய மாணவர்களின் அம்மன் கீர்த்தனம் மற்றும் கரவெட்டி பிரதேச கலைஞர்களின் கவியரங்கம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டு பார்வையாளர்களைக் கவர்ந்தன. இதனையடுத்து சிறப்பு விருந்தினர் திரு. இராஜேஸ்வரன் இராஜேஸ்கண்ணன் அவர்களின் சிறப்புரையும், தொடர்ந்து முதன்மை விருந்தினர் யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் உரையும் இடம்பெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வாக, கலைத்துறையின் பல்வேறு பிரிவுகளில் சாதனை படைத்த மூத்த மற்றும் இளம் கலைஞர்களுக்கு சிறப்பு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. அத்துடன் கலைமன்றங்களுக்கு இடையிலான போட்டிகளில் வெற்றியீட்டியவர்களுக்கான பரிசில்களும் வழங்கப்பட்டன.
“கலை ஞான வாருதி” விருது பெற்றவர்கள்:
திருமதி. நாகேந்திரம் மங்கையற்கரசி – நடனம்
திரு. சின்னவன் சின்னராசா – கூத்து
திரு. தம்பு செல்வரத்தினம் – வாத்தியக் கலை (தவில்)
“கலை வாருதி” விருது பெற்றவர்கள்:
திருமதி. நிருஜா ஞானசம்பந்தன் – நடனம்
திருமதி. இந்திராதேவி ஆனந்தராசா – சிறுகதை
திருமதி. ஞானதயாளன் கவிதா – நடனம்
“இளங்கலைஞர்” விருது பெற்றவர்கள்:
திருமதி. விஷ்ணுகா பவித்திரகாந் – நடனம்
திரு. சக்திவேல் கமலகாந்தன் – கவிதை
திரு. ஜெயராசிங்கம் பிரதீசன் – ஓவியம்
நிகழ்வின் நிறைவில் அமிர்தவாஹினி இசை மன்ற மாணவர்களின் தமிழ் மொழி வாழ்த்து இடம்பெற்றதுடன், கரவெட்டி கலாசார உத்தியோகத்தர் திருமதி. ஹரிஹரசுதன் காயத்திரி அவர்களின் நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவுற்றது. வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசத்தின் கலை மற்றும் பண்பாட்டுப் பாரம்பரியங்களைப் பாதுகாத்து, அவற்றை அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு செல்லும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இவ்விழாவில், கலைஞர்கள், கலைமன்ற உறுப்பினர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பண்பாட்டுப் பேரவை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.








