அரசசார்பற்ற நிறுவனங்களுக்கு இடையிலான கலந்தாய்வு அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (07.10.2026) காலை 9.00 மணி தொடக்கம் 01.00 மணி வரை தனியார் விடுதியில் நடைபெற்றது. இக் கலந்தாய்வில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு. பா.ஜெயகரன் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.
தலைமையுரை :
அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒருங்கிணைந்த பங்களிப்புடன் மாவட்ட அபிவிருத்தி முன்னெடுக்கப்பட வேண்டும் – அரசாங்க அதிபர் யாழ்ப்பாண மாவட்டத்தின் அபிவிருத்தி என்பது கட்டுமானப் பணிகள் மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்திகளுடன் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட முடியாது. மனித வள அபிவிருத்தி, சமூக நலன், பொருளாதார முன்னேற்றம் உள்ளிட்ட அனைத்து துறைகளையும் உள்ளடக்கியதாகவே மாவட்டத்தின் ஒட்டுமொத்த அபிவிருத்தி முன்னெடுக்கப்பட வேண்டும் என அரசாங்க அதிபர் தெரிவித்தார். யாழ்ப்பாணம் மாவட்ட அபிவிருத்திக்கு இவ்வாண்டு 4,500 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான அரச நிதி :
யாழ்ப்பாண மாவட்டத்திற்கு கடந்த ஆண்டு அரசாங்கத்தினால் ரூ.2,500 மில்லியன் அபிவிருத்தி நிதி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், இவ்வாண்டு மாவட்டத்தின் பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக ரூ.4,500 மில்லியனுக்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார். அதேவேளை, மாவட்டத்தில் செயற்பட்டு வருகின்ற அரச சார்பற்ற நிறுவனங்கள் அபிவிருத்திப் பணிகளுக்காக கணிசமான நிதி மற்றும் வளங்களைத் தொடர்ச்சியாகப் பயன்படுத்தி வருகின்றன. இதன்படி, ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான நிதி இவ்வாறான அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக செலவிடப்பட்டு வருவதாகவும். எனவே, அரசாங்கத்தின் நிதி வளங்களுடன் அரச சார்பற்ற நிறுவனங்களின் நிதி, தொழில்நுட்ப அறிவு மற்றும் மனிதவளப் பங்களிப்புகளையும் முறையாக ஒருங்கிணைத்து, மாவட்டத்தின் முன்னுரிமைத் தேவைகளுக்கு ஏற்ப திட்டமிட்ட அடிப்படையில் பயன்படுத்துவதன் மூலம் அபிவிருத்திப் பணிகளின் பயனையும் தாக்கத்தையும் மேலும் அதிகரிக்க முடியும் எனவும் அரசாங்க அதிபர் சுட்டிக்காட்டினார். குறிப்பாக, அரச சார்பற்ற நிறுவனங்கள் மனித வள அபிவிருத்திக்கு வழங்கிவரும் முக்கியத்துவம் பாராட்டத்தக்கது எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
அரச சார்பற்ற நிறுவனங்களின் பங்களிப்பு பாராட்டத்தக்கது :
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாண மாவட்டத்தின் மீள்கட்டமைப்பு, சமூக மேம்பாடு மற்றும் மக்களின் வாழ்வாதார முன்னேற்றத்துக்கு அரச சார்பற்ற நிறுவனங்கள் நீண்டகாலமாக வழங்கிவரும் பங்களிப்புகளுக்கு அரசாங்க அதிபர் நன்றி தெரிவித்தார். மக்களின் தேவைகளை அடிப்படையாகக் கொண்டு இந்நிறுவனங்கள் முன்னெடுக்கும் திட்டங்கள் மாவட்டத்தின் அபிவிருத்திக்கு பெறுமதியான பங்களிப்பாக அமைவதாகவும் அரசாங்க அதிபர் குறிப்பிட்டார்.
அரச சார்பற்ற நிறுவனங்களிடையே ஒருங்கிணைப்பு அவசியம் :
ஒரே பிரதேசத்தில் ஒரே வகையான திட்டங்கள் மீண்டும் மீண்டும் முன்னெடுக்கப்படுவதைத் தவிர்த்து, மக்களின் உண்மையான தேவைகளை அடையாளம் கண்டு வளங்களைச் சிறந்த முறையில் பயன்படுத்துவதற்கு அரச சார்பற்ற நிறுவனங்களிடையே வலுவான ஒருங்கிணைப்பு அவசியம் என அரசாங்க அதிபர் வலியுறுத்தினார். மாவட்ட நிர்வாகம், பிரதேச செயலகங்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் தமது திட்டங்களை பரஸ்பரம் அறிந்து கொண்டு செயற்படுவதன் மூலம் வளங்களின் வீண்விரயத்தைத் தவிர்த்து, அதிக பயனாளிகளை சென்றடைய முடியும் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
அபிவிருத்தியில் வெளிப்படைத்தன்மை பேணப்பட வேண்டும் :
அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான தகவல்கள் உரிய தரப்பினருடன் தெளிவாகப் பகிரப்பட வேண்டும் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார். திட்டங்களின் நோக்கம், பயனாளிகள், நடைமுறைப்படுத்தப்படும் பிரதேசங்கள் மற்றும் எதிர்பார்க்கப்படும் பெறுபேறுகள் தொடர்பான தகவல்களைப் பகிர்வதன் மூலம் வெளிப்படைத்தன்மையையும் பொறுப்புக்கூறலையும் மேலும் வலுப்படுத்த முடியும் என அரசாங்க அதிபர் சுட்டிக்காட்டினார்.
காலாண்டு கலந்துரையாடல்கள் தொடர வேண்டும் :
அரச சார்பற்ற நிறுவனங்களுடனான இத்தகைய கலந்துரையாடல்கள் காலாண்டுக்கு ஒருமுறை தொடர்ச்சியாக நடத்தப்பட வேண்டும் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார். அனைத்து தரப்பினரும் தமது அனுபவங்கள், தேவைகள், சவால்கள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பாக சுதந்திரமாகக் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளும் வகையில் திறந்த கலந்துரையாடல்களுக்கான தளமாக இக்கலந்தாய்வுகள் அமைய வேண்டும் எனவும் தெரிவித்தார். அரச சார்பற்ற நிறுவனங்கள் எதிர்காலத்திலும் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து ஒருங்கிணைந்த முறையில் செயற்பட்டு, மக்களின் தேவைகளை முன்னுரிமைப்படுத்திய அபிவிருத்தியை முன்னெடுக்குமாறும் அரசாங்க அதிபர் கேட்டுக்கொண்டார்.
அரச சார்பற்ற நிறுவனங்களின் திட்டங்கள் தொடர்பில் மீளாய்வு :
இவ்வாண்டு அரச சார்பற்ற நிறுவனங்களால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு, 2026 ஆம் ஆண்டு யாழ்ப்பாண மாவட்டத்தில் அரச சார்பற்ற நிறுவனங்களால் நடைமுறை ப்படுத்தவுள்ள திட்டங்கள் தொடர்பாகவும், பிரதேச செயலாளர்களின் கோரிக்கை தொடர்பாகவும் நடைமுறைப்படுத்தப்படவுள்ள திட்டங்களில் காணப்பட்ட சமநிலையின்மை தொடர்பாகவும் ஆராயப்பட்டது. மேலும், இன்றைய கலந்தாய்வில் 9 சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களும் 24 உள்ளூர் அரச சார்பற்ற நிறுவனங்களும் என மொத்தம் 33 அரச சார்பற்ற நிறுவனங்கள் தங்களது திட்ட முன்னேற்ற அறிக்கைகள் மற்றும் எதிர்காலச் செயற்பாடுகளை முன்வைப்புக்கள் (Presentation) ஊடாக சமர்ப்பித்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கலந்தாய்வில் பங்குபற்றியவர் விபரங்கள் :
இக் கலந்தாய்வில் மேலதிக அரசாங்க அதிபர் திரு கே. சிவகரன், திட்டமிடல் பணிப்பாளர் இ.சுரேந்திரநாதன், உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ தர்சினி, அரச சார்பற்ற நிறுவனங்களின் இணைப்பாளர் திரு. ந. தயாபரன், பிரதேச செயலாளர்கள், பிரதி உதவி திட்டமிடல் பணிப்பாளர்கள், தொடர்புடைய திணைக்களத் தலைவர்கள், சர்வதேச மற்றும் உள்ளூர் அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகள் மற்றும் மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தார்கள்.
 
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 16 19 20