யாழ்ப்பாண மாவட்ட இறப்பு பதிவாளர்களுக்கான புற்றுநோய் இறப்பு கண்காணிப்பு தொடர்பான பயிற்சிச் செயலமர்வு, யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஆறுமுகம் கேதீஸ்வரன் தலைமையில் இன்று (09.10.2026) காலை 09.00 மணிக்கு நடைபெற்றது.
தொடக்கவுரை :
இந் நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தொடக்க உரையாற்றினார். புற்றுநோய் மரணங்கள் தொடர்பில் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம் - அரசாங்க அதிபர் அரசாங்க அதிபர் தமது தொடக்கவுரையில், பிறப்பு, திருமணம், இறப்பு ஆகிய மூன்று முக்கிய நிகழ்வுகளையும் உரிய சட்ட நடைமுறைகளுக்கு அமைவாகப் பதிவு செய்வது பதிவாளர்களின் முக்கிய பொறுப்பாகும். குறிப்பாக, இறப்புப் பதிவுகள் தொடர்பில் சில பின்தங்கிய பிரதேசங்களில் பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாத நிலை காணப்படுகின்றது. எனவே, இவ்விடயம் தொடர்பில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியமாகும் எனத் தெரிவித்தார். தினமும் சுமார் 100 பேர் புதிதாகப் புற்றுநோயாளர்களாக அடையாளம் காணப்படுவதுடன், நாளொன்றுக்கு சுமார் 45 பேர் புற்றுநோயால் உயிரிழக்கின்றனர் என்ற தகவல் மிகவும் கவலைக்குரியதாகும் எனத் தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்டத்திலும் புற்றுநோயின் தாக்கம் காணப்படுகின்ற நிலையில், புற்றுநோயால் ஏற்படும் மரணங்களைச் சரியான முறையில் பதிவு செய்வது தொடர்பான இத்தகைய பயிற்சிகள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன. புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் மரணங்களைப் பதிவு செய்யும்போது பதிவாளர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், இறப்புச் சான்றிதழில் தகவல்களைச் சரியாகப் பதிவு செய்தல் மற்றும் அதனுடன் தொடர்புடைய சட்டரீதியான பொறுப்புகள் குறித்து தெளிவுபடுத்துவதே இச்செயலமர்வின் முக்கிய நோக்கமாகும் எனத் தெரிவித்தார். கொழும்பு மாவட்டத்தில் முதலாவது பயிற்சிச் செயலமர்வு நடைபெற்றதைத் தொடர்ந்து, இரண்டாவது செயலமர்வு யாழ்ப்பாண மாவட்டத்தில் நடைபெறுவது மகிழ்ச்சியளிக்கின்றது. இதற்காகக் கொழும்பிலிருந்து வருகைதந்த வைத்தியர்கள் குழுவினருக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார். மேலும், யாழ்ப்பாண மாவட்டத்தில் புற்றுநோயாளர்களுக்குச் சிகிச்சை வழங்குவதில் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் புற்றுநோய் விசேட வைத்திய நிபுணர்களின் சேவையையும் இச்சந்தர்ப்பத்தில் பாராட்டுவதாகவும், எமது மாவட்டத்திலிருந்து பல நோயாளர்கள் மேலதிக சிகிச்சைக்காக மகரகம புற்றுநோய் வைத்தியசாலைக்குச் செல்ல வேண்டிய நிலை காணப்படுகின்றது எனவும் தெரிவித்தார். இந்நிலையில், மாவட்டத்திலேயே புற்றுநோய் சிகிச்சைச் சேவைகளை வழங்கிவரும் வைத்திய நிபுணர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாகும் எனவும் தெரிவித்தார். இன்றைய முழுநாள் பயிற்சியில் பங்கேற்கும் பதிவாளர்கள், தமது சந்தேகங்களைக் கேட்டு, இறப்புப் பதிவுகளைச் சரியாகவும் முறையாகவும் மேற்கொள்வதற்குத் தேவையான தெளிவைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என அரசாங்க அதிபர் தெரிவித்தார். இப்பயிற்சியில் பெறும் அறிவைத் தமது பணிகளில் நடைமுறைப்படுத்துவதுடன், பொதுமக்களிடையேயும் உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த முன்வர வேண்டும் எனத் தெரிவித்தார். இச் செயலமர்வை ஏற்பாடு செய்த யாழ்ப்பாணப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டாக்டர் கேதீஸ்வரன் உள்ளிட்ட அனைத்து வைத்திய அதிகாரிகளுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன் எனத் தெரிவித்தார். இப் பயிற்சியானது பதிவாளர்களின் அறிவையும் திறனையும் மேம்படுத்துவதுடன், புற்றுநோயால் ஏற்படும் மரணங்களைச் சரியாகப் பதிவு செய்வதற்கும், இது தொடர்பில் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் உதவும் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
செயலமர்வின் விபரங்கள் :
தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் பணிப்பாளர் டாக்டர் செனக்க தலகல, தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டுத் திட்டம் தொடர்பான அறிமுகத்தை வழங்கினார். புற்றுநோயியல் நிபுணர் டாக்டர் கவிதா இந்திரநாத், யாழ்ப்பாணத்தில் புற்றுநோய் பராமரிப்பு தொடர்பான தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். புற்றுநோயின் சுமை, புற்றுநோய் பதிவேடு மற்றும் இறப்பு கண்காணிப்பின் முக்கியத்துவம் தொடர்பாக டாக்டர் சுராஜ் பெரேரா விளக்கமளித்தார். யாழ்ப்பாணத்தில் புற்றுநோய் இறப்பு கண்காணிப்பின் ஆரம்பகால அனுபவங்கள் குறித்து டாக்டர் ஜி. ராஜீவ் எடுத்துரைத்ததுடன், இக்கண்காணிப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. தொடர்ந்து, புற்றுநோய் இறப்பு கண்காணிப்பு தொடர்பாக டாக்டர் திருமகள் உரையாற்றினார். டாக்டர் ராஜீவ், டாக்டர் ஜெசிதரன் உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் பங்கேற்ற குழுக் கலந்துரையாடலும் இடம்பெற்றது. பங்கேற்பாளர்களின் கருத்துப் பரிமாற்ற அமர்வை டாக்டர் கேதீஸ்வரன் வழிநடத்தினார். மார்பகப் புற்றுநோய் மற்றும் பொதுவான புற்றுநோய் வகைகள் தொடர்பாக டாக்டர் தனேந்திரன் த விளக்கமளித்ததுடன், பெண்களுக்கான புற்றுநோய்கள் குறித்து டாக்டர் தனுயா மகாதேவன் உரையாற்றினார். மேலும், யாழ்ப்பாண மாவட்டத்தில் புற்றுநோய் இறப்பு கண்காணிப்பை மேம்படுத்துவதற்கான எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. நிகழ்வின் இறுதியில் டாக்டர் ஜெசிதரன் நன்றியுரை நிகழ்த்தினார்.







