புவிசார் வளங்களான கருங்கல், சரளைக் கல், மண், மணல் மற்றும் களிமண் ஆகியவற்றை அகழ்தல், கொண்டு செல்லுதல் மற்றும் விற்பனை செய்தல் தொடர்பான நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவது குறித்த யாழ்ப்பாண மாவட்டக் கண்காணிப்புக் குழுக் கூட்டம், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்று (09.10.2026) யாழ்ப்பாண மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
தலைமையுரை :
புவிசார் வளங்கள் அகழ்வைக் கண்காணிக்க மாவட்ட மட்டத்தில் புதிய ஒருங்கிணைந்த அணுகுமுறை - அரசாங்க அதிபர் புவிசார் வளங்களை அகழ்தல், கொண்டு செல்லுதல் மற்றும் வர்த்தகம் செய்தல் தொடர்பான அனுமதிப்பத்திரங்களை வழங்கும் செயன்முறையை வினைத்திறனுடனும் துரிதமாகவும் முன்னெடுப்பதற்காக, மாவட்ட மட்டக் கண்காணிப்புக் குழுக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது னத் தெரிவித்தார். அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திருமதி கே. எம். திலகரத்ன அவர்களினால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள சுற்றறிக்கைக்கு அமைவாக, புவிசார் வளங்கள் அகழ்வு தொடர்பான மாவட்டக் கண்காணிப்புக் குழுவின் செயற்பாடுகளுக்கான வழிகாட்டல்கள் எமக்குக் கிடைத்துள்ளன. அதற்கமைய, இக்குழுவின் செயற்பாடுகளைச் சீராகவும் திறம்படவும் முன்னெடுப்பது அவசியமாகும். கருங்கல், சரளைக்கல், மண், மணல் மற்றும் களிமண் போன்ற புவிசார் வளங்களை அகழ்தல், அவற்றைக் கொண்டுசெல்லுதல் மற்றும் வர்த்தகம் செய்தல் ஆகியவற்றுக்கான அனுமதிப்பத்திரங்களை வழங்கும் செயன்முறையில் ஏற்படும் தாமதங்களைக் குறைத்து, உரிய நடைமுறைகளுக்கு அமைவாக விரைவான தீர்மானங்களை மேற்கொள்வதே இக்கூட்டத்தின் பிரதான நோக்கமாகும் எனத் தெரிவித்தார். இதற்காக, காணிப் பயன்பாட்டுத் திட்டமிடல் பிரிவு, மத்திய சுற்றாடல் அதிகார சபை, பிரதேச செயலகங்கள், யாழ்ப்பாண மாநகர சபை, உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலகம், புவிசார் வளங்கள் அகழ்வுப் பொறியியல் பிரிவு, வீதி அபிவிருத்தித் திணைக்களம், பொலிஸ் திணைக்களம், தொல்லியல் திணைக்களம், நகர அபிவிருத்தி அதிகார சபை, நீர்ப்பாசனத் திணைக்களம், கமநல சேவைகள் திணைக்களம் மற்றும் விவசாயத் திணைக்களம் உள்ளிட்ட தொடர்புடைய நிறுவனங்களின் பிரதிநிதிகள் அழைக்கப்பட்டுள்ளனர். சுற்றறிக்கைக்கு அமைவாக, மாவட்ட அரசாங்க அதிபர் அல்லது மாவட்டச் செயலாளர் இக்குழுவின் தலைவராகவும், அகழ்வுப் பொறியியலாளர் ஒருங்கிணைப்பாளராகவும் செயற்படுவர். மத்திய சுற்றாடல் அதிகார சபை, தொல்லியல் திணைக்களம், நகர அபிவிருத்தி அதிகார சபை, பிரதேச செயலகங்கள் மற்றும் பொலிஸ் திணைக்களம் உள்ளிட்ட நிறுவனங்கள் இக்குழுவின் செயற்பாடுகளில் முக்கிய பங்காற்றுகின்றன. தேவைக்கேற்ப ஏனைய அரச நிறுவனங்களின் அதிகாரிகளையும் கூட்டங்களுக்கு அழைத்து அவர்களின் கருத்துகளையும் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவித்தார். இதுவரை காலமும், புவிசார் வளங்களை அகழ்வதற்கான விண்ணப்பங்கள் பிரதேச செயலாளர் மற்றும் மாவட்டச் செயலாளரின் பரிந்துரைகளுடன் அகழ்வுப் பொறியியலாளருக்கு அனுப்பப்பட்டு, சம்பந்தப்பட்ட ஏனைய திணைக்களங்கள் மற்றும் தலைமையகத்தின் அனுமதிகளைப் பெற்ற பின்னர் அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டு வந்தன.
தற்போதைய சுற்றறிக்கையின் நோக்கத்திற்கமைவாக, இச் செயன்முறையில் தொடர்புடைய அனைத்து நிறுவனங்களினதும் கருத்துகள், பரிந்துரைகள் மற்றும் இணக்கப்பாடுகளைப் பெற்று, ஒருங்கிணைந்த முறையில் தீர்மானங்களை மேற்கொள்வது முக்கியமாகும் எனத் தெரிவித்தார். குறிப்பாக, சுற்றாடல் பாதுகாப்பு, காணிப் பயன்பாடு, வீதிகளின் நிலை, நீர்வளங்கள், விவசாய நடவடிக்கைகள், தொல்லியல் முக்கியத்துவம் மற்றும் சட்டம் ஒழுங்கு போன்ற விடயங்கள் உரிய முறையில் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். தனித்தனியாகத் திணைக்களங்களின் அனுமதிகளைப் பெறுவதால் ஏற்படும் காலதாமதங்களைக் குறைப்பதுடன், அனுமதி வழங்கும் செயன்முறையில் வெளிப்படைத்தன்மையையும் பொறுப்புக்கூறலையும் உறுதிப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்தார். அதேவேளை, எந்தவொரு தனிப்பட்ட செல்வாக்குக்கும் இடமளிக்காமல், உரிய சட்டங்கள், விதிமுறைகள் மற்றும் தொழில்நுட்ப மதிப்பீடுகளின் அடிப்படையில் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படுவது அவசியமாகும். மேலும், இக்குழுவின் கூட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெறுவதற்கான வருடாந்த அட்டவணையை முன்கூட்டியே தயாரித்து உறுப்பினர்களுக்கு அறிவிக்கத் தீர்மானித்துள்ளோம். அதற்கமைய, 2026ஆம் ஆண்டின் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் இரண்டாவது வியாழக்கிழமைகளில் கூட்டங்களை நடத்துவதற்கான திகதிகள் தீர்மானிக்கப்படும். 2027ஆம் ஆண்டிற்கான கூட்ட அட்டவணையும் முன்கூட்டியே தயாரித்து அறிவிக்கப்படும். அவசரத் தேவைகள் ஏற்படும் சந்தர்ப்பங்களில் அதற்கேற்ப மாற்றங்கள் மேற்கொள்ளப்படும். எனவே, இன்றைய கூட்டத்தில் கலந்துகொண்டுள்ள அனைத்துத் திணைக்களங்களின் பிரதிநிதிகளும் தங்களது நிறுவனங்களின் பொறுப்புகள் மற்றும் தொழில்நுட்பக் கருத்துகளை முன்வைத்து, புவிசார் வளங்களை அகழ்வதற்கான அனுமதிப்பத்திரங்களை வழங்கும் செயன்முறையை வினைத்திறனுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் முன்னெடுப்பதற்கான ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக்கொள்வதாகத் தெரிவித்தார். அனைவரினதும் ஒத்துழைப்புடன் இக்குழுவின் நோக்கங்களை வெற்றிகரமாக நிறைவேற்ற முடியும் என்ற நம்பிக்கையுடன், அனைவருக்கும் தமது நன்றிகளை அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
இக் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டவை :
கட்டட நிர்மாணத்துறையில் பயன்படுத்தப்படும் கனிமங்களை அகழ்தல், கொண்டு செல்லுதல் மற்றும் விற்பனை செய்தல் தொடர்பாக 06.07.2026 ஆம் திகதிய அமைச்சரவைத் தீர்மானத்தின் மூலம் அங்கீகரிக்கப்பட்ட நடைமுறைக் கோவைக்கு அமைவாக, மாவட்டத்தில் புவிசார் வளங்களின் அகழ்வு நடவடிக்கைகளைக் கண்காணித்து, அவற்றைச் சட்டரீதியாகவும் வினைத்திறனுடனும் முன்னெடுப்பது தொடர்பில் இக்கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது. கருங்கல், சரளைக் கல், மண், மணல் மற்றும் களிமண் ஆகியவற்றை அகழ்தல், கொண்டு செல்லுதல் மற்றும் விற்பனை செய்தல் தொடர்பான அனுமதிகள், ஒழுங்குமுறை நடவடிக்கைகள் மற்றும் தீர்மானங்களும் 2009 ஆம் ஆண்டின் 66 ஆம் இலக்கச் சட்டத்தால் திருத்தப்பட்ட 1992 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்கச் சுரங்கங்கள் மற்றும் கனியவளச் சட்டம் மற்றும் அதன் கீழ் இயற்றப்பட்ட விதிகளுக்கு அமைவாக மேற்கொள்ளப்படுவதை உறுதிப்படுத்துதல் ஆகியன கூட்டத்தின் முக்கிய நோக்கங்களாக அமைந்தன.
பங்குபற்றியவர்கள் விபரங்கள் :
இக் கூட்டத்தில் மேலதிக அரசாங்க அதிபர்கள், மேலதிக அரசாங்க அதிபர் (காணி), புவிச்சரிதவியல் அளவைகள் மற்றும் சுரங்கங்கள் பணியகப் பொறியியலாளர், மாவட்டப் பொறியியலாளர், உதவி மாவட்டச் செயலாளர், காணிப் பயன்பாட்டுத் திட்டமிடல் கிளை உதவிப் பணிப்பாளர், மத்திய சுற்றாடல் அதிகாரசபை உதவிப் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், மாநகர ஆணையாளர், பிரதேச சபைச் செயலாளர்கள், உள்ளூராட்சி உதவி ஆணையாளர், கரையோரப் பாதுகாப்புத் திணைக்களப் பொறியியலாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர், தொல்லியல் திணைக்கள உதவிப் பணிப்பாளர், வடக்கு நகர அபிவிருத்தி அதிகாரசபைப் பணிப்பாளர், நீர்ப்பாசனப் பொறியியலாளர், கமநல சேவைகள் திணைக்களப் பிரதிஆணையாளர் மற்றும் சம்பந்தப்பட்ட துறைசார் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.







