உலக வாழ்விட தினத்தை முன்னிட்டு, வீட்டுத்திட்ட நிர்மாணப் பணிகளைப் பூர்த்தி செய்த 257 பயனாளிகளுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்று (14.10.2026) பி. ப. 03.00 மணிக்கு யாழ்ப்பாண மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும், யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு, பயனாளிகளுக்கான சான்றிதழ்களை வழங்கி வைத்தார்.
வரவேற்புரை :
இந்நிகழ்வில் கௌரவ அமைச்சர் உள்ளிட்ட அதிதிகளை வரவேற்று, யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு. பா. ஜெயகரன் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.
தலைமையுரை :
தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், பிரதம விருந்தினராக கலந்து கொண்ட கெளரவ அமைச்சர் உள்ளிட்டவர்களை வரவேற்று, ஒவ்வொரு மனிதனினதும் அடிப்படைத் தேவைகளில் வீடு மிகவும் முக்கியமானது எனவும், கடந்த காலங்களில் வீடமைப்புத் திட்டங்களின் கீழ் 6 இலட்சம், 10 இலட்சம் மற்றும் 15 இலட்சம் ரூபா என வெவ்வேறு அளவுகளில் நிதி வழங்கப்பட்ட நிலையில், இம்முறை 20 இலட்சம் ரூபாவாக நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது மகிழ்ச்சியான விடயம் எனவும் தெரிவித்தார். அதிமேதகு ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கு அமைவாகவும், அமைச்சரவை அனுமதியின் அடிப்படையிலும் இந்த அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக மாவட்ட மக்களின் சார்பில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என்றார். கடந்த காலங்களில் போதிய நிதியின்மையால் வீடுகளை அமைப்பதில் பயனாளிகள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டனர். வாடகை வீடுகளிலும் தற்காலிக குடியிருப்புகளிலும் வாழ்ந்த குடும்பங்கள், குறிப்பாகப் பிள்ளைகளின் கல்வி மற்றும் அன்றாட வாழ்க்கையில் பல்வேறு சவால்களைச் சந்தித்தனர். இத்தகைய துன்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து, பயனாளிகள் தமக்கென வீடுகளை அமைத்து மகிழ்ச்சியாக வாழ்வதற்கான வாய்ப்பை இத்திட்டம் ஏற்படுத்தும் என நம்புகின்றேன். வீடமைப்புத் திட்டங்களை உரிய காலத்தில் நிறைவு செய்வதற்காகப் பிரதேச செயலாளர்கள், திட்டமிடல் உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றனர். பயனாளிகளுக்கு வீடுகளைப் பெற்றுக்கொடுப்பது முதல் நிர்மாணப் பணிகளின் முன்னேற்றத்தைக் கண்காணிப்பது வரை பல்வேறு நடவடிக்கைகளை அவர்கள் மேற்கொள்கின்றனர். மாவட்ட மட்டத்தில் நடைபெற்ற முன்னேற்ற மீளாய்வுக் கூட்டங்களிலும் திட்டங்களை உரிய காலத்தில் நிறைவு செய்வதன் அவசியம் வலியுறுத்தப்பட்டு வந்துள்ளது. இதற்காக உழைத்த அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். மேலும், யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்நாட்டு யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து மீளக்குடியமர்ந்த அண்ணளவாக 3,300 குடும்பங்களுக்கு வீடமைப்புத் தேவை காணப்படுகின்றது. இதுவரை கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்களின் அடிப்படையில் 2,000 இற்கும் மேற்பட்ட குடும்பங்களின் தேவைகள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியுள்ளன. குறிப்பாக, காணியற்ற குடும்பங்கள் மற்றும் யுத்தத்தினால் வீடுகளையும் வாழ்வாதாரங்களையும் இழந்த மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டியுள்ளது. இறுதியாக, இத்திட்டத்தின் மூலம் பயனடையும் அனைத்து குடும்பங்களும் தமது வீடுகளை நிறைவு செய்து, குடும்பத்தினருடனும் பிள்ளைகளுடனும் பாதுகாப்பான, மகிழ்ச்சியான வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும் என வாழ்த்துகின்றேன் எனத் தெரிவித்தார்.
பிரதம விருந்தினர் உரை:
வீடற்ற மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தி, அனைவருக்கும் கௌரவமான வாழ்க்கையை உறுதிப்படுத்துவதே அரசாங்கத்தின் இலக்காகும் என கெளரவ அமைச்சர் தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றிய அவர், வீடு என்பது ஒவ்வொரு குடும்பத்தினதும் அடிப்படைத் தேவையாகும். ஒரு குடும்பம் சொந்த வீடின்றி வாழும்போது, சமூகத்தில் பல்வேறு நெருக்கடிகளையும் மனவேதனைகளையும் எதிர்கொள்கின்றது. அண்மையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீடுகளின் திறப்பு விழாக்களில் கலந்துகொண்டபோது, சொந்த வீட்டைப் பெற்ற மக்களின் முகங்களில் காணப்பட்ட மகிழ்ச்சியும் ஆனந்தக் கண்ணீரும் தமக்கும் பெரும் மகிழ்ச்சியை அளித்ததாகக் குறிப்பிட்டார் கடந்த மூன்று தசாப்தங்களாக வடக்கு, கிழக்கு மக்கள் பல்வேறு நெருக்கடிகளையும் இழப்புகளையும் எதிர்கொண்டுள்ளனர். யுத்தம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வீடுகளையும் சொத்துக்களையும் உடைமைகளையும் இழந்த மக்களின் வாழ்க்கையில் மீண்டும் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவது அரசாங்கத்தின் முக்கிய நோக்கமாகும். மீள்குடியேற்ற வீடமைப்புத் திட்டத்தின் கீழ், 13,000 இற்கும் அதிகமான வீடுகளை நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எதிர்வரும் காலங்களில் அனைவருக்கும் வீடுகளை வழங்கி, மீள்குடியேற்றம் என்ற தேவை இல்லாத நிலையை உருவாக்குவதே ஜனாதிபதியின் இலக்காகும். அதேவேளை, வீட்டுத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் படிப்படியாக அதிகரிக்கப்பட்டுள்ளன. முன்னர் ஐந்து இலட்சம் ரூபாவாக இருந்த வீட்டுத் திட்ட நிதி பின்னர் பத்து இலட்சம் ரூபாவாகவும், அதனைத் தொடர்ந்து பதினைந்து இலட்சம் ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டு, தற்போது இருபது இலட்சம் ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்கள் தமது சொந்த வீடுகளை நிர்மாணிப்பதற்கான வாய்ப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. யாழ்ப்பாண மாவட்டத்தில் இருபது இலட்சம் ரூபா வீட்டுத் திட்டத்தின் கீழ் 833 வீடுகள் அமைக்கப்படுகின்றன. அவற்றில் வீட்டின் நிர்மாண வேலைகளை பூர்த்தி செய்த 257 வீடுகளுக்கான சான்றிதழ்களை வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பயனாளிகள் தமது வீடமைப்புப் பணிகளை விரைவாக நிறைவு செய்து, இவ்வாண்டின் இறுதிக்குள் வீடுகளில் குடியேறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு மாகாணத்தில் எதிர்வரும் ஆண்டிலும் ஆயிரக்கணக்கான வீடுகளை நிர்மாணிப்பதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. இருப்பினும், குறிப்பாக யாழ்ப்பாண நகரப் பகுதிகளில் காணிப் பற்றாக்குறை பெரும் சவாலாக உள்ளது. இதற்குத் தீர்வாக, நகர எல்லைக்குள் வாழும் மக்களின் வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் பல்மாடிக் குடியிருப்புத் திட்டங்களை அமைப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது. நாட்டின் பொருளாதார நிலைமையைப் பொறுத்தவரையில், கடன் திருப்பிச் செலுத்த முடியாத நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அண்மையில் ஏற்பட்ட டித்வா புயலினால் நாட்டின் பொருளாதாரத்திற்குப் பெரும் பாதிப்பு ஏற்பட்ட போதிலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கான நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டன. வீடுகள் மற்றும் காணிகளை இழந்த மக்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்குவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஜனாதிபதியின் தலைமையில் நாட்டைக் கட்டியெழுப்பும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், போலிப் பிரசாரங்கள், அவதூறுகள் மற்றும் இனவாத, மதவாத நடவடிக்கைகள் மூலம் இந்தப் பயணத்தைத் தடுக்க முடியாது. மக்களின் நலனையும் நாட்டின் முன்னேற்றத்தையும் இலக்காகக் கொண்ட அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு மக்கள் தொடர்ந்து ஆதரவளிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. மேலும், சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த இலங்கையர் திரு. அனுஜனின் தண்டனை நீக்கப்பட்டமை தொடர்பிலும் அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். ஜனாதிபதியின் நேரடித் தலையீடும் சட்டத்தரணிகள் குழுவின் நடவடிக்கைகளும் இதற்குப் பங்களித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், திரு. அனுஜன் விரைவில் நாடு திரும்ப வேண்டும் எனத் தாம் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். இறுதியாக, வீட்டுத் திட்டத்தின் பயனாளிகள் தமது வீடமைப்புப் பணிகளைத் திட்டமிட்ட முறையில் முன்னெடுத்து, தமது பிள்ளைகளுக்கு பாதுகாப்பானதும் கௌரவமானதுமான எதிர்காலத்தை உருவாக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். யாழ்ப்பாண மாவட்டத்தில் 1,114 வீடுகளின் நிர்மாணப் பணிகள் முன்னெடுப்பு : வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வளங்கள் அமைச்சின் நிதியுதவியுடன், இடம்பெயர்ந்து மீள்குடியமர்ந்த மக்களுக்காக 2026ஆம் ஆண்டில் தலா 20 இலட்சம் ரூபா பெறுமதியில் 833 வீடுகளை நிர்மாணிக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தின் கீழ் தற்போது வீடமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், குறித்த அமைச்சின் நிதியுதவியுடன் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் யாழ்ப்பாண மாவட்டத்தில் மேலும் 281 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு முன்னெடுக்கப்படும் வீட்டுத்திட்டங்களில், தமது வீடமைப்புப் பணிகளை முழுமையாகப் பூர்த்தி செய்த பயனாளிகளில் முதற்கட்டமாக 257 பேருக்கு, உலக வாழ்விட தினத்தை முன்னிட்டு இன்றைய நிகழ்வில் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.
நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் :
இந் நிகழ்வில், உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ. தர்ஷினி, யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர் திரு. எஸ். கபிலன், பிரதேச செயலாளர்கள், உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள், வீட்டுத்திட்டப் பயனாளிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.







