யாழ்ப்பாணம் மாவட்டச் செயலக நலன்புரிக் கழகத்தின் ஏற்பாட்டில் வாணி விழா கழகத்தின் தலைவரும் கணக்காளருமான வ. ரதீஸ் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (20.10.2026) மாவட்டச் செயலகத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. பூஜையினைத் தொடர்ந்து, வரவேற்பு நடனம், உத்தியோகத்தரின் மழழையின் தனிப் பாடல் மற்றும் உத்தியோகத்தர்களின் குழுப்பாட்டு, பல்லியம் போன்ற நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
அரசாங்க அதிபர் உரை :
யாழ்ப்பாண மாவட்டச் செயலக நலன்புரிச் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட வாணி விழா நிகழ்வில், நவராத்திரி விழாக்கள் உத்தியோகத்தர்களிடையே ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் பரஸ்பர புரிந்துணர்வை வளர்ப்பதுடன், தமிழர் பண்பாட்டு மரபுகளைப் பேணிப் பாதுகாப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன என யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார். கடந்த ஒன்பது நாட்களாக முன்னெடுக்கப்பட்ட நவராத்திரி பூஜை நிகழ்வுகளையும், வாணி விழாவை முன்னிட்டு உத்தியோகத்தர்களுக்கிடையில் நடத்தப்பட்ட பல்வேறு கலை மற்றும் கலாசாரப் போட்டிகளையும் பாராட்டினார். இத்தகைய நிகழ்வுகள் வெறுமனே விழாக்களாக அமையாமல், அலுவலகங்களுக்கிடையிலான நட்புறவையும் ஒற்றுமையையும் வலுப்படுத்தும் தளங்களாகவும், தமிழர் பண்பாட்டு கலைப் களையும் மறக்காமல் வலுப்படுத்துவதாகவும் அமைய வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும், யாழ்ப்பாண மாவட்டச் செயலகம் தேசிய உற்பத்தித்திறன் போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்றமை மாவட்டத்திற்குப் பெருமை சேர்க்கும் சாதனை எனத் தெரிவித்த அவர், இந்த வெற்றியானது அனைத்து உத்தியோகத்தர்களினதும் கூட்டு முயற்சி, அர்ப்பணிப்பு மற்றும் ஒருங்கிணைந்த செயற்பாட்டின் வெளிப்பாடாகும் எனக் குறிப்பிட்டார். அத்துடன், மேலும், சுற்றாடல் விருதில் நல்லூர் பிரதேச செயலகம் தங்க விருதையும், சண்டிலிப்பாய் பிரதேச செயலகம் வெள்ளி விருதையும் பெற்றமைக்கும் பாராட்டுத் தெரிவித்தார். அரச உத்தியோகத்தர்கள் தமது அன்றாடக் கடமைகளைப் புதுப்பிக்கப்பட்ட அர்ப்பணிப்புடன் முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்திய அரசாங்க அதிபர், நீண்டகாலமாக ஒரே பணியில் ஈடுபடுவதால் ஏற்படக்கூடிய சலிப்பைத் தவிர்த்து, ஒவ்வொரு நாளும் புதிய பொறுப்புணர்வுடன் கடமையாற்ற வேண்டும் என்றார். அதன் மூலமே பொதுமக்களுக்குத் தரமான, வினைத்திறனான மற்றும் பயனுள்ள அரச சேவைகளை வழங்க முடியும் எனவும் தெரிவித்தார். ஒவ்வொரு உத்தியோகத்தரும் தமக்குரிய பொறுப்புகளை உணர்ந்து, மக்களின் நலனையும் மாவட்டத்தின் அபிவிருத்தியையும் முன்னிறுத்திச் செயற்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். இறுதியாக, வாணி விழாவைச் சிறப்பாக ஏற்பாடு செய்த நலன்புரிச் சங்கத்தின் தலைவர், நிர்வாகக் குழுவினர், அங்கத்தவர்கள் மற்றும் பங்கேற்ற அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
சிறப்பு சொற்பொழிவு :
சைவப் புலவர் திரு கமலநாதன் அவர்களின் சிறப்பு சொற்பொழிவு இடம்பெற்றது. மேலும், நவராத்திரி நாட்களில் மாவட்டச் செயலக உத்தியோகத்தர்களுக்கிடையில் தோரணம் பின்னுதல், மாலை கட்டுதல், சைவ வினாவிடைப் போட்டி, கோலமிடுதல், கவிதை ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன. இப் போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்குப் பரிசில்களும் வழங்கப்பட்டன. வாணி விழாவின் இறுதியில் நலன்புரிக் கழகம் செயலாளர் கே. கருணாகரன் அவர்களால் நன்றியுரையாற்றப்பட்டது.







