யாழ்ப்பாண மாவட்டத்தின் கடலோர சமூகங்களை சுனாமி அனர்த்தங்களுக்கு முகங்கொடுக்கக்கூடிய வகையில் தயார்படுத்துவதற்கான 'UNESCO-IOC சுனாமி தயார்நிலை அங்கீகாரத் திட்டம் (TRRP) தொடர்பான விசேட மாவட்டப் பங்குதாரர்கள் கூட்டம் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் இன்றைய தினம் (21.10.2026) காலை 09.30 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்தின் அறிமுகவுரையினை யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் திரு.ஏ.எம்.ஆர்.என். கே.அழககோன் அவர்களால் நிகழ்த்தப்பட்டது.
அரசாங்க அதிபர் அவர்களின் தலமையுரை :
சுனாமி உள்ளிட்ட அனர்த்தங்களை எதிர்கொள்ள முன்னாயத்தமும் ஒருங்கிணைந்த செயற்பாடுகளும் அவசியம் – அரசாங்க அதிபர் 2004 ஆம் ஆண்டு சுனாமிப் பேரனர்த்தத்தின் அனுபவங்களிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டு, எதிர்காலத்தில் சுனாமி உள்ளிட்ட இயற்கை அனர்த்தங்களை எதிர்கொள்வதற்கான முன்னாயத்த நடவடிக்கைகளை வலுப்படுத்த வேண்டும் என யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் வலியுறுத்தினார். 2004 டிசம்பர் 26 ஆம் திகதி இடம்பெற்ற சுனாமிப் பேரனர்த்தம் பல உயிர்களையும் உடைமைகளையும் காவுகொண்டதுடன், பல குடும்பங்களின் வாழ்க்கையையும் புரட்டிப்போட்டது. யாழ்ப்பாண மாவட்டத்திலும் வடமராட்சி, தெல்லிப்பழை உள்ளிட்ட பகுதிகள் பாதிக்கப்பட்டதுடன், பல துயரச் சம்பவங்கள் இடம்பெற்றதாக அவர் நினைவுகூர்ந்தார். அனர்த்தங்களுக்கு முன்னர் மக்களைத் தயார்படுத்துதல், பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துதல், நம்பகமான முன்னெச்சரிக்கைத் தகவல்களை உரிய நேரத்தில் வழங்குதல் மற்றும் பாதுகாப்பான வெளியேற்றத் திட்டங்களை நடைமுறைப்படுத்துதல் ஆகியவற்றின் அவசியத்தையும் வலியுறுத்தினார். யாழ்ப்பாண மாவட்டத்தில் காணப்படும் ஐந்து சுனாமி எச்சரிக்கை நிலையங்களின் செயற்பாட்டுத் தயார்நிலையை உறுதிப்படுத்துவதுடன், அதிக மழை, வெள்ளம் உள்ளிட்ட அனர்த்தங்களை எதிர்கொள்ள மாவட்டச் செயலகம், பிரதேச செயலகங்கள், முப்படையினர், பொலிஸார், அனர்த்த முகாமைத்துவப் பிரிவு மற்றும் சமூகமட்ட அமைப்புகள் இணைந்து செயற்பட வேண்டும் என்றும் தெரிவித்தார். அனைத்துத் தரப்பினரினதும் ஒருங்கிணைந்த பங்களிப்பின் மூலம் உயிரிழப்புகளையும் சொத்து இழப்புகளையும் குறைத்து, அனர்த்தங்களால் பாதிக்கப்படும் மக்களின் பாதுகாப்பையும் வாழ்வாதார மீட்சியையும் உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், இக்கலந்துரையாடலை ஏற்பாடு செய்த அனர்த்த முகாமைத்துவப் பிரிவு உள்ளிட்ட தொடர்புடைய தரப்பினருக்கும் நன்றிகளைத் தெரிவித்தார்.
கலந்துரையாடல் :
இக் கலந்துரையாடலில், நெறிப்படுத்தல் அதிகாரிகளாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் (யுனெஸ்கோ) திட்ட முகாமையாளர் திரு. சுனில் ஜெயவீர மற்றும் உதவிப் பணிப்பாளர் திரு. சமில ஆகியோர் கலந்துகொண்டு, கலந்துரையாடலை நெறிப்படுத்தினர். கடலோர சமூகங்களின் பாதுகாப்பு மற்றும் அவசரகால தயார்நிலையை மேம்படுத்தும் நோக்கில் இக்கூட்டம் நடைபெற்றது. இதில் பின்வரும் முக்கிய விடயங்கள் ஆராயப்பட்டன : திட்ட அறிமுகம்: யுனெஸ்கோ அமைப்பின் சுனாமி தயார்நிலை அங்கீகார திட்டத்தை (Tsunami Ready Recognition Programme) மாவட்ட மட்டத்தில் அறிமுகப்படுத்துதல்.
செயற்பாட்டு திட்டங்கள்:
திட்டத்தை கடலோரப் பகுதிகளில் நடைமுறைப்படுத்துவதற்கான முதற்கட்ட ஏற்பாடுகள் மற்றும் நிறுவனங்களின் பொறுப்புகளைப் பகிர்ந்தளித்தல். கள நிலவரம்: தற்போதைய அவசரகால எச்சரிக்கை வழிமுறைகள், மக்களுக்கான விழிப்புணர்வு மற்றும் அனர்த்த மேலாண்மையில் உள்ள பலங்கள் மற்றும் குறைபாடுகளைக் கண்டறிதல். கூட்டு நடவடிக்கை: யாழ்ப்பாண மாவட்டத்தின் கடலோரக் கிராமங்கள் இந்த சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்கான கூட்டுச் செயல்முறைகளை முன்னெடுத்தல். இக்கூட்டத்தில் அரச அதிகாரிகள், அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிநிதிகள் மற்றும் துறைசார் பங்குதாரர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு தமது ஆலோசனைகளை வழங்கினர். இக் கலந்துரையாடலில் , பிரதேச செயலாளர்கள், முப்படையினர், பொலிஸ் உத்தியோகத்தர்கள், வர்த்தக மற்றும் கைத்தொழில் சங்கத்தின் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், மாவட்ட பிரதேச செயலக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.







