யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டுப் பேரவையும் மாவட்டச் செயலகமும் இணைந்து, வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் அனுசரணையுடன் நடாத்தும் யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டுப் பெருவிழா இன்றைய தினம் (23.10.2026 ) வெள்ளிக்கிழமை பி.ப 1.00 மணிக்கு மாவட்டச் செயலக நுழைவாயிலிருந்து தமிழ்ப் பண்பாட்டு ஊர்வலத்துடன் ஆரம்பமாகி கேட்போர் கூடத்தை வந்ததடைந்தது. யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும், யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டு பேரவைத் தலைவருமான திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில், பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட ஓய்வுநிலை அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் அவர்கள் கலந்து சிறப்பித்தார். மேலும், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சரும், யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள், ஏற்பாட்டாளர்களின் அழைப்பினை ஏற்று விழாவிற்கு வருகைதந்து விழாவை சிறப்பித்திருந்தார். சிறப்பு விருந்தினர்களாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா அவர்களும், வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் பிரதிப் பணிப்பாளர் திருமதி. தர்சினி நிதர்சன் ஆகியோரும் கலந்து சிறப்பித்தார்கள். கௌரவ விருந்தினர்களாக பலாலி ஆசிரியர் கலாசாலை ஓய்வுநிலை அதிபரும் சாகித்திய ரத்னா கவிஞர் திரு.சோ.பத்மநாதன் அவர்களும், யாழ்ப்பாண மாவட்ட ஓய்வுநிலை சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் திருமதி. சுகுணலினி விஜயரத்தினம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வுகள் :
பண்பாட்டு ஊர்வலத்தில் பாரம்பரியக் கலை நிகழ்வுகள் :
பண்பாட்டு ஊர்வலத்தில் பாரம்பரியக் கலை நிகழ்வுகள்
பண்பாட்டு ஊர்வலத்தில் தமிழர் பாரம்பரியத்தையும் கலை மரபுகளையும் பறைசாற்றும் வகையில் பல்வேறு கலை நிகழ்வுகள் இடம்பெற்றன. இதன்போது, மங்கல வாத்தியம், புனித மிக்கேல் திருமுறைக் கலைக்குழுவினரின் ஒயிலாட்டம், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவர்களின் இன்னியம், றபான் மற்றும் கோலாட்டம் ஆகிய கலை நிகழ்வுகள் ஊர்வலத்தைச் சிறப்பித்தன. அத்துடன், மாவை பொதுச்சேவைக் கழகத்தின் கோலாட்டம், கரபி கலை மன்றத்தின் சுளகு நடனம், இணையைய தமிழ்ச்சங்கத்தின் காவடி ஆட்டம் ஆகியனவும் இடம்பெற்றன. மேலும், பொம்மலாட்டம், செப்பு நடனம் உள்ளிட்ட பாரம்பரியக் கலை நிகழ்வுகளும் ஊர்வலத்தில் இடம்பெற்று, தமிழர் பண்பாட்டு விழுமியங்களையும் கலை மரபுகளையும் வெளிப்படுத்தின.
அரங்கு :
நாடகச் சக்கரவர்த்தி பரஞ்சோதி பரராஜசிங்கம் (பாப்பா) அவர்களின் கலைப்பணிகளை நினைவுறுத்தி அமைக்கப்பட்டுள்ள அரங்கில்
அரங்க நிகழ்வுகள் நடைபெற்றன.
தமிழ்த் தாய் வாழ்த்து:
யாழ்ப்பாண மாவட்டச் செயலக உத்தியோகத்தர்களால் முறையாகப் பாடப்பட்டு நிகழ்வு ஆரம்பமானது.
வரவேற்பு நடனம் :
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சேர் பொன் இராமநாதன் காண்மிய ஆற்றுகைக் கலைப்பீட மாணவர்கள் வழங்கிய வரவேற்பு நடனம் இடம்பெற்றது.
வரவேற்புரை :
மேலதிக அரசாங்க அதிபர் கே.சிவகரன் அவர்களால் நிகழ்த்தப்பட்டது. அரங்கத்திறப்புரை : (நாடகச் சக்கரவர்த்தி பரஞ்சோதி பரராஜசிங்கம் - பாப்பா)
பருத்தித்துறை பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் திரு.சி.முகுந்தன் அவர்களால் நிகழ்த்தப்பட்டது.
கோலாட்டம்:
நல்லூர் ஹிமாலயா நடனப் பயிலக மாணவர்களின் பாரம்பரிய கோலாட்ட நிகழ்வு இடம்பெற்றது.
தலைமையுரை :
அரசாங்க அதிபர் அவர்களினால் தலைமையுரை நிகழ்த்தப்பட்டது.
காலிங்க நர்த்தனம்:
தென்மராட்சி, கைதடிப் பகுதியைச் சேர்ந்த இயல் சேஷ்த்திரா கலைமன்றக் கலைஞர்களின் நர்த்தனம் அரங்கேறியது.
கெளரவிப்பு :
பலாலி ஆசிரியர் கலாசாலை ஓய்வுநிலை அதிபரும் சாகித்திய ரத்னா கவிஞர் திரு.சோ.பத்மநாதன் (சோ. ப) அவர்களுக்கான கெளரவிப்பு நிகழ்த்தப்பட்டது.
சிறப்பு விருந்தினர் உரை, பிரதம விருந்தினர் உரை நிகழ்த்தப்பட்டதுடன், பிரதம விருந்தினர் கெளரவிக்கப்பட்டார்.
நூல் வெளியீடும் ஆய்வுரையும் :
யாழ்ப்பாணத்தின் நாட்டார் வழக்காறுகளையும் சமூக அறிவியல் நோக்கிலான ஆய்வுகளையும் உள்ளடக்கிய “யாழ்ப்பாணம் 05 – நாட்டார் வழக்காறுகளும் சமூக அறிவியலும்” எனும் நூல் வெளியீட்டு நிகழ்வு இடம்பெற்றது. இந்நூலின் உள்ளடக்கம் மற்றும் ஆய்வுப் பெறுமதிகள் தொடர்பான ஆய்வுரையை முன்னாள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் என். சண்முகலிங்கம் அவர்கள் நிகழ்த்தினார்.
பாரம்பரிய கூத்திசைப் பாடல்கள்:
ஊர்காவற்றுறையினைச் சேர்ந்த பாரம்பரியக் கலைஞர்கள் ஒன்றிணைந்து இப் பாடல்களைப் பாடினர்.
சிறப்புரை :
கௌரவ அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் சிறப்புரையை நிகழ்த்தினார்.
வீரம் குழுநடனம்:
பருத்தித்துறை பரத சிவாலக் கலை மன்றத்தினரால் இந்த வீர நடனம் உணர்வுப்பூர்வமாக வழங்கப்பட்டது.
கலைஞர்கள் கெளரவிப்பு :
பிரதேச செயலக ரீதியாக மூத்த கலைஞர்களுக்கு "யாழ்முத்து" மற்றும் இளைஞர்களுக்கு "இளங்கலைஞர்" விருதுகள் வழங்கி வழங்கப்பட்டன.
கரகாட்டம் :
இணுவவில் திருநெறிய தமிழ் மறைக் கலாமன்றக் கலைஞர்களின் கண்கவர் கரகாட்டத்துடன் நிகழ்வுகள் நிறைவுற்றன.
மாவட்ட மட்டப் போட்டிகளில் வெற்றிபெற்ற கலை மன்றங்களுக்குச் சான்றிதழ்கள் :
வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட கலை மன்றங்களுக்கிடையில் நடைபெற்ற மாவட்ட மட்டப் போட்டிகளில் கிராமியப்பாடல், இசை நாடகம், கும்மி நடனம், விழிப்புணர்வு வீதி நாடகம் மற்றும் கையெழுத்துச் சஞ்சிகை ஆகிய பிரிவுகளில் வெற்றிபெற்ற கலை மன்றங்களுக்கு சான்றிதழ் வழங்கி கெளரவிக்கப்பட்டன.
அரங்க வடிவமைப்பு :
இயற்கையின் அழகையும் தமிழர் பாரம்பரியக் கலை மரபையும் ஒருங்கே பிரதிபலிக்கும் வகையில், தென்னோலை, மூங்கில், பனை ஓலை உள்ளிட்ட இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்தி இன்றைய அரங்கத்தை இயற்கையோடு ஒன்றிணைந்த அழகிய சூழலில் வடிவமைத்த மாவட்டச் செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு. செல்வரட்ணம் சபேசன் அவர்கள், அவரது கலைநயத்தையும் இயற்கை மீதான பற்றையும் பாராட்டி விருந்தினர்களால் கௌரவிக்கப்பட்டார்.
நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் கெளரவிப்பு :
இன்றைய நிகழ்வினைச் சிறப்பாகவும் நேர்த்தியாகவும் தொகுத்து வழங்கிய சிரேஷ்ட முகாமைத்துவ உதவியாளர் திரு. பரா. ரமேஷ் அவர்களும், வேலணை பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி மாதுரி சிவதர்சன் அவர்களும் விருந்தினர்களால் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர்.
நன்றியுரை :
இறுதியாக, நன்றியுரை மாவட்ட ச் செயலக சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் திருமதி மாலினி கிருஷ்ணானந்தன் அவர்களால் நிகழ்த்தப்பட்டது. இந் நிகழ்வில் கலைஞர்கள், கலா ரசிகர்கள், யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர், மாவட்டச் செயலக அனைத்துத் தர உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், பொதுமக்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.








