யாழ்ப்பாண மாவட்டத்தில் சிறுதானியங்களை உற்பத்தி செய்வதற்கும், அவற்றை அடிப்படையாகக் கொண்டு ஆரோக்கியமான பெறுமதி சேர் உற்பத்திப் பொருட்களைத் தயாரிப்பதற்குமான முதலீட்டு வாய்ப்புகள் தொடர்பாக இந்தியாவிலிருந்து வருகை தந்த இந்திய முதலீட்டாளரான தத்தோ திரு. எஸ். சுந்தர் அவர்கள், மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களை இன்றைய தினம் (02.11.2026) அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து, யாழ்ப்பாண மாவட்டத்தில் சிறுதானிய உற்பத்தியை மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடினார். இதன்போது, இலங்கையில் சிறுதானியங்களை உற்பத்தி செய்து, அவற்றின் மூலம் பல்வேறு ஆரோக்கியமான உணவுப் பொருட்களைத் தயாரிப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக அவர் தெரிவித்தார். இவ்வாறான உற்பத்திகளை ஊக்குவிப்பதன் மூலம் மக்களின் ஆரோக்கியமான வாழ்வியலுக்கு பங்களிப்பு வழங்குவதுடன், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகளுக்கான ஏற்றுமதி வாய்ப்புகளையும் உருவாக்க முடியும் எனக் குறிப்பிட்டார். சிறுதானியங்களுக்குத் தேவையான தரமான விதைகளை இந்தியாவிலிருந்து பெற்றுக்கொண்டு, சிறுபோக காலங்களில் அவற்றைப் பயிரிடுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக, பயிரிடப்படாமல் காணப்படும் மற்றும் வறட்சி அதிகம் நிலவும் பகுதிகளிலும் சில வகையான சிறுதானியங்களைப் பயிரிடுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
மேலும், யாழ்ப்பாண மாவட்டத்தில் சிறுதானியங்களை அடிப்படையாகக் கொண்ட பெறுமதி சேர் உற்பத்திப் பொருட்களைத் தயாரிப்பதற்கான தொழிற்சாலையொன்றை நிறுவுவதன் மூலம், மாவட்ட ரீதியில் புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதன் ஊடாக கம்பு, கேழ்வரகு, தினை, சாமை, வரகு, குதிரைவாலி மற்றும் பனிவரகு உள்ளிட்ட சிறுதானியங்களைப் பயன்படுத்தி பல்வேறு ஆரோக்கியமான உற்பத்திப் பொருட்களைத் தயாரித்து, அவற்றை வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்வதற்கான சந்தர்ப்பங்கள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிறுதானியங்கள் நார்ச்சத்து, புரதம், வைட்டமின்கள் மற்றும் பல்வேறு தாதுச்சத்துக்கள் நிறைந்த பாரம்பரிய உணவுகளாகக் காணப்படுகின்றன. அவை சமச்சீர் உணவுமுறையின் ஒரு பகுதியாகச் சேர்க்கப்படும்போது, செரிமான ஆரோக்கியம், உடல் எடை மேலாண்மை மற்றும் பொதுவான ஊட்டச்சத்து தேவைகளை ஆதரிக்கக்கூடியவை என்பதும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது. இம்முயற்சியின் ஊடாக உள்ளூர் விவசாயிகள், தொழில் முயற்சியாளர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கான புதிய வாழ்வாதார மற்றும் பொருளாதார வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் நடவடிக்கை எடுக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்குத் தேவையான ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்களை வழங்கத் தயாராக இருப்பதாக இந்திய முதலீட்டாளர் தெரிவித்தார். இதன்போது கருத்துத் தெரிவித்த மாவட்ட அரசாங்க அதிபர், யாழ்ப்பாண மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும், தொழில் வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் பங்களிப்பு வழங்கக்கூடிய பயன்தரக்கூடிய முதலீட்டுத் திட்டங்களை முன்னெடுப்பதற்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வழங்கக்கூடிய ஒத்துழைப்புகள் தொடர்பில் ஆராய்ந்து தேவையான உதவிகளை வழங்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் கே.சிவகரன், திட்டமிடல் பணிப்பாளர் இ.சுரேந்திரநாதன், Biz Net நிறுவன இயக்குநர் F. சியான் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
 
1 2 3 4 5 6