யாழ்ப்பாண மாவட்டம் பல்வேறு விருதுகளைப் பெற்றுத் தனது சாதனையைப் பதிவு செய்தது.வட மாகாணத்தில் இயங்கிவரும் கிராம அபிவிருத்திச் சங்கங்கள் மற்றும் மாதர் கிராம அபிவிருத்திச் சங்கங்களின் செயற்பாடுகளை மதிப்பீடு செய்து, அவற்றின் வினைத்திறன் மற்றும் வினைவிளைதிறனை மேம்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட 2026ஆம் ஆண்டுக்கான கிராம அபிவிருத்திச் சங்கங்களின் தரப்படுத்தல் விருது வழங்கும் விழா இன்று (04.11.2026) புதன்கிழமை யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. வட மாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் திருமதி பி. கஜனி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வட மாகாண பிரதம செயலாளர் திருமதி தனுஜா முருகேசன் மற்றும் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் துணைத் தூதுவர் மாண்புமிகு ஸ்ரீ சாய் முரளி ஆகியோர் பிரதம விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். மேலும், உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் திரு. ஏ. சோதிநாதன் கௌரவ விருந்தினராகவும், யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் ம. பிரதீபன் மற்றும் மன்னார் மாவட்டச் செயலாளர் கே. கனகேஸ்வரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்துகொண்டனர்.
நோக்கம் :
வட மாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வின் பிரதான நோக்கம், கிராம அபிவிருத்திச் சங்கங்களின் செயற்பாடுகளை முறையாக மதிப்பீடு செய்து, அவற்றின் நிர்வாகக் கட்டமைப்பு, செயற்பாட்டுத் திறன் மற்றும் சமூகப் பங்களிப்பை மேலும் வலுப்படுத்துவதாகும். குறிப்பாக, வட மாகாணத்தில் பதிவு செய்யப்பட்டு இயங்கிவரும் கிராம அபிவிருத்திச் சங்கங்கள் மற்றும் மாதர் கிராம அபிவிருத்திச் சங்கங்களின் செயற்பாடுகளைத் தரப்படுத்துவதன் மூலம் அவற்றின் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளை அடையாளம் காண்பதுடன், சிறந்த முறையில் செயற்படும் சங்கங்களை ஊக்குவித்து, ஏனைய சங்கங்களுக்கும் முன்னுதாரணமாக விளங்கச் செய்வதும் இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும். சங்கங்களின் செயற்பாடுகள் நிர்வாகம், கணக்குப் பராமரிப்பு, ஒழுங்கமைப்பு, அபிவிருத்தி, சுகாதாரம், சமூக நலன், கல்வி, சமய, பண்பாட்டு, கலை, விளையாட்டு மற்றும் வாழ்வாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு அளவுகோல்களின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படுகின்றன. இதன் அடிப்படையில் சங்கங்கள் A, B, C, D என நான்கு தரங்களாக வகைப்படுத்தப்பட்டு, அவற்றின் செயற்பாட்டுத் திறனுக்கேற்ப அங்கீகாரமும் ஊக்குவிப்பும் வழங்கப்படுகின்றன.
வட மாகாணத்தில் 47 விருதுகள் – யாழ்ப்பாண மாவட்டத்திற்கு 11 விருதுகள்
வட மாகாணம் மொத்தமாக 47 விருதுகளைப் பெற்றுள்ளது. அவற்றில் யாழ்ப்பாண மாவட்டம் 11 விருதுகளைப் பெற்றுள்ளது.
யாழ்ப்பாண மாவட்ட மட்டத்தில் பெற்ற விருதுகள் :
கிராம அபிவிருத்திச் சங்கங்கள் :
* முதலாம் இடம் – புதிய சோனகத்தெரு கிராம அபிவிருத்திச் சங்கம் (யாழ்ப்பாணம்).
* இரண்டாம் இடம் – அல்வாய் தெற்கு கிராம அபிவிருத்திச் சங்கம் (கரவெட்டி).
* மூன்றாம் இடம் – வித்தகபுரம் கிராம அபிவிருத்திச் சங்கம் (தெல்லிப்பழை).
மாதர் கிராம அபிவிருத்திச் சங்கங்கள் :
* முதலாம் இடம் – கொழும்புத்துறை கிழக்கு மாதர் கிராம அபிவிருத்திச் சங்கம் (யாழ்ப்பாணம்).
* இரண்டாம் இடம் – இமையாணன் மத்தி மாதர் கிராம அபிவிருத்திச் சங்கம் (கரவெட்டி).
* மூன்றாம் இடம் – ஈச்சமோட்டை மாதர் கிராம அபிவிருத்திச் சங்கம் (யாழ்ப்பாணம்).
மாகாண மட்டத்தில் பெற்ற விருதுகள்
* முதலாம் இடம் – கொழும்புத்துறை கிழக்கு மாதர் கிராம அபிவிருத்திச் சங்கம் (யாழ்ப்பாணம்).
* மூன்றாம் இடம் – புதிய சோனகத்தெரு கிராம அபிவிருத்திச் சங்கம் (யாழ்ப்பாணம்).
கிராம அலுவலருக்கான விசேட விருது :
மாகாண மட்டத்தில் கிராம மற்றும் மாதர் கிராம அபிவிருத்திச் சங்கங்களுக்கான தரப்படுத்தல் செயற்பாட்டில், சங்கங்களுக்கு மிகச் சிறந்த முறையில் ஒத்துழைப்பும் ஆதரவும் வழங்கிய கிராம அலுவலருக்கான விருது, கொழும்புத்துறை கிழக்கு கிராம அலுவலர் (J-62) அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மாகாண மட்ட விருதுகளில் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு இரண்டு இரண்டாம் இடங்கள்!
சிறந்த கிராம அபிவிருத்தி உத்தியோகத்தருக்கான விருது :
மாகாண மட்டத்தில் இரண்டாம் இடம் : யாழ்ப்பாண மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்.
கிராம அபிவிருத்திச் சங்கங்களை மிகச் சிறந்த முறையில் வழிப்படுத்திய பிரதேச செயலாளருக்கான விருது :
மாகாண மட்டத்தில் இரண்டாம் இடம்: யாழ்ப்பாணப் பிரதேச செயலாளர். யாழ்ப்பாண மாவட்டத்தின் இந்தச் சாதனையானது, கிராமிய அமைப்புகளின் அர்ப்பணிப்பான செயற்பாடுகளையும், அவற்றுக்கு ஆதரவாகச் செயற்படும் கிராம அலுவலர்களின் பங்களிப்பையும் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. இந் நிகழ்வில், வட மாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள், மாவட்ட மற்றும் பிரதேச மட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர்.







