யாழ்ப்பாணம் உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் யாழ்ப்பாணப் பிராந்திய ஆணையாளர் திரு. A. P. குணதுங்ஹ அவர்கள், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களை நேற்று (04.11.2026) மாவட்டச் செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது, வரி செலுத்துநர் அடையாள இலக்கமான (TIN) இலக்கத்தைப் பெற்றுக்கொள்வதற்காக அண்மைய நாட்களாகப் பொதுமக்கள் மீண்டும் நீண்ட வரிசைகளில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளமை தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. இதன்போது, TIN இலக்கத்தைப் பெற்றுக்கொள்ளும் நடைமுறைகள் தொடர்பாக யாழ்ப்பாணப் பிராந்திய ஆணையாளர் பின்வரும் மேலதிக விபரங்களைத் தெரிவித்தார். நவம்பர் 01 ஆம் திகதி முதல் TIN சான்றிதழைச் சமர்ப்பிப்பது குறிப்பிட்ட எட்டு வகையான பரிவர்த்தனைகளுக்கு மாத்திரமே கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பிராந்திய ஆணையாளர் திரு. A. P. குணதுங்ஹ தெரிவித்துள்ளார். எனவே, அவசரமான அல்லது அத்தியாவசியமான தேவை இல்லாதவர்கள் உள்நாட்டு இறைவரித் திணைக்கள அலுவலகங்களுக்கு நேரில் வருகை தந்து சிரமங்களுக்கு உள்ளாவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அவர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
TIN சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ள எட்டு பரிவர்த்தனைகள்
2026 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்கத் திருத்தச் சட்டத்தின் பிரகாரம், கீழ்வரும் எட்டு வகையான நடவடிக்கைகளின்போது மாத்திரமே செல்லுபடியாகும் TIN சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும்.
1.வங்கி அல்லது நிதி நிறுவனமொன்றில் புதிய கணக்கொன்றைத் திறத்தல்.
2.கடன் அட்டையொன்றைப் (Credit Card) பெற்றுக்கொள்ளுதல்.
3.கட்டட நிர்மாணத் திட்டத்திற்கு அனுமதி பெற்றுக்கொள்ளுதல்.
4.மோட்டார் வாகனமொன்றைப் பதிவு செய்தல்.
5.மோட்டார் வாகன வருமான அனுமதிப்பத்திரத்தைப் புதுப்பித்தல்.
6.காணி அல்லது காணி உரிமையைப் பதிவு செய்தல்.
7.வியாபாரமொன்றைப் பதிவு செய்தல்.
8.நிறுவனமொன்றின் பங்குகளைப் பரிமாற்றம் செய்தல்.
இதன்போது பங்குகளைப் பரிமாற்றம் செய்பவர் மற்றும் பெற்றுக்கொள்பவர் ஆகிய இரு தரப்பினரும் TIN சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும்.
மேற்குறிப்பிட்ட நடவடிக்கைகளைத் தவிர, அன்றாட வாழ்க்கையில் மேற்கொள்ளப்படும் ஏனைய பொதுவான நடவடிக்கைகளுக்கு TIN சான்றிதழைச் சமர்ப்பிப்பது கட்டாயமல்ல.
18 வயதைப் பூர்த்தி செய்த அனைவரும் TIN பெற வேண்டும் :
உள்நாட்டு இறைவரிச் சட்டம் மற்றும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்களின் பிரகாரம், 18 வயதைப் பூர்த்தி செய்த அனைத்து வதிவிடப் பிரஜைகளும் TIN இலக்கத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும். எனினும், TIN இலக்கத்தைப் பெற்றிருப்பதனால் ஒருவர் வரி செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுவதில்லை. சட்டத்தினால் நிர்ணயிக்கப்பட்ட வருடாந்த வருமான வரம்பை மீறும் வருமானம் பெறுபவர்களிடமிருந்தே வரி அறவிடப்படும். TIN இலக்கம் என்பது வரி தொடர்பான பதிவுகளில் ஒருவரை அடையாளம் காண்பதற்காக வழங்கப்படும் இலக்கமாகும். இது வரி செலுத்துவதற்கான கட்டாயத்தைத் தானாகவே ஏற்படுத்துவதில்லை. வீட்டிலிருந்தே TIN இலக்கத்தைப் பெற்றுக்கொள்ளலாம் TIN இலக்கத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டிய தேவை உள்ளவர்கள் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ மின்னணுச் சேவை (e-Services) இணையத்தளத்தின் ஊடாக இலகுவாக விண்ணப்பித்துப் பெற்றுக்கொள்ள முடியும். அத்துடன், ஏற்கனவே தமக்கு TIN இலக்கம் வழங்கப்பட்டுள்ளதா என்பதையும் குறித்த இணையத்தளத்தின் ஊடாகச் சரிபார்த்துக் கொள்ள முடியும். இதனை உறுதிப்படுத்திய பின்னர், தேசிய அடையாள அட்டை இலக்கம் (NIC) மற்றும் TIN இலக்கம் ஆகியவற்றைக் கொண்ட அச்சுப் பிரதியைப் பெற்றுக்கொள்ளலாம். குறித்த எட்டு வகையான பரிவர்த்தனைகளுக்கும் இந்த அச்சுப் பிரதி செல்லுபடியாகும் ஆவணமாக ஏற்றுக்கொள்ளப்படும். எனவே, சட்ட மாற்றங்கள் தொடர்பில் பொதுமக்கள் குழப்பமடையாமல், டிஜிட்டல் சேவைகளைப் பயன்படுத்தி வீட்டிலிருந்தே இச்சேவைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், இதுவரை TIN இலக்கத்தைப் பெற்றுக்கொள்ளாதவர்கள் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் மின்னணுச் சேவையின் ஊடாக விண்ணப்பித்து TIN இலக்கத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் பிராந்திய ஆணையாளர் திரு. A. P. குணதுங்க அவர்கள் மேலும் தெரிவித்துள்ளார்.
TIN சான்றிதழ் இல்லாவிட்டாலும் வாகன வருமான அனுமதிப்பத்திரத்தைப் புதுப்பிக்க முடியும்!
TIN (வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்) சான்றிதழைப் பெறுவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தைக் கருத்திற்கொண்டு, TIN சான்றிதழ் இல்லாத காரணத்தால் வாகன வருமான அனுமதிப்பத்திரத்தைப் புதுப்பிப்பதைத் தாமதப்படுத்தவோ அல்லது நிராகரிக்கவோ கூடாது என வருமான வரித் திணைக்களம் அறிவித்துள்ளதாக வும் பிராந்திய ஆணையாளர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே TIN இலக்கத்தைப் பெற்றுக்கொண்டுள்ள வாகன உரிமையாளர்கள், அதன் சான்றிதழின் பிரதியை (கடதாசி வடிவிலோ அல்லது மென்பிரதியாகவோ) சமர்ப்பிக்க அனுமதிக்கப்பட வேண்டும். அசல் TIN சான்றிதழைப் பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. மாற்றாக, TIN இலக்கத்தை உறுதிப்படுத்தும் திரை அச்சுப் பிரதியையும் (Screen Printout) ஏற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.