ஒன்றுபட்டு எழுச்சி பெற்ற ஓராண்டு – ‘அகன்று செல்’ செயற்பாட்டின் ஓராண்டு மதிப்பீட்டு சர்வமத மாநாடு அலரி மாளிகையில் நடைபெற்றது! போதைப்பொருள் அச்சுறுத்தலை நாட்டிலிருந்து முற்றாக ஒழிக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் “அகன்று செல்” தேசிய செயற்பாட்டின் ஓராண்டு நிறைவையொட்டிய மதிப்பீட்டு சர்வமத மாநாடு, அதிமேதகு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களின் தலைமையில் இன்று (05.11.2026) பிற்பகல் அலரி மாளிகையில் நடைபெற்றது. 'ஒன்றுபட்டு எழுச்சி பெற்ற ஓராண்டு' எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற இம்மாநாட்டில் உரையாற்றிய அதிமேதகு ஜனாதிபதி அவர்கள், இன, மத, வயது வேறுபாடுகளைக் கடந்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சமூகத்தின் அனைத்துத் தரப்பினரையும் போதைப்பொருள் அச்சுறுத்தல் பாதித்துள்ளதாகச் சுட்டிக்காட்டினார். சமூகத்தில் மரியாதைக்குரியவர்களாகவும் வழிபாட்டுக்குரியவர்களாகவும் கருதப்படுபவர்கள் மத்தியிலும் இவ்வச்சுறுத்தல் பரவியுள்ளமை கவலைக்குரிய விடயமாகும் எனக் குறிப்பிட்ட அவர், போதைப்பொருள் அச்சுறுத்தலை முறியடிப்பது இன்றைய தேசத்தின் முன்னுள்ள முதன்மையான பொறுப்பாகும் என்றும் வலியுறுத்தினார். போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் முன்னுரிமை வழங்கி வருவதுடன், கைது நடவடிக்கைகளுக்கான பொறிமுறையை வலுப்படுத்துதல், தேவையான சட்டத் திருத்தங்களை மேற்கொள்ளுதல் மற்றும் பலமான நிறுவனக் கட்டமைப்பை உருவாக்குதல் போன்ற நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். அதேவேளை, இப்பேரழிவை முறியடிப்பதற்கு சமூகத்தின் சிந்தனை மற்றும் மனப்பாங்கில் மாற்றத்தை ஏற்படுத்துவது அவசியம் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அதில் மதத் தலைவர்களுக்கும் மத வழிபாட்டுத் தலங்களுக்கும் மிக முக்கியமான பங்களிப்பு உண்டு எனத் தெரிவித்தார். பல வருடங்களாகத் தொடர்ச்சியாகவும் தளராது ஒருங்கிணைந்து செயற்பட்டால் போதைப்பொருள் பேரழிவிலிருந்து நாட்டை மீட்டெடுக்க முடியும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தினார். எதிர்காலச் சந்ததியினர் பெருமையுடனும் பாதுகாப்புடனும் வாழக்கூடிய நாட்டைக் கட்டியெழுப்பும் நோக்கில், போதைப்பொருள் ஒழிப்புக்கான இந்தத் தேசியச் செயற்பாட்டில் தீவிரமான பங்காளிகளாக இணையுமாறு அனைத்து மதத் தலைவர்களுக்கும் ஜனாதிபதி கௌரவமான அழைப்பு விடுத்தார்.
 
 
1 2 3 4 5 6 7 8 11 16 18 14 12 17 20