தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் 2025/2026 (National Productivity Awards) போட்டியில் பொதுத்துறைப் பிரிவில் யாழ்ப்பாண மாவட்டச் செயலகம் முதலாம் இடத்தைப் பெற்று தேசிய ரீதியில் சாதனை படைத்துள்ளது. இதற்கான விருது வழங்கும் நிகழ்வு இன்று (08.11.2026) பிற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) நடைபெற்றது. இதன்போது, யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்திற்கான முதலாம் இடத்திற்குரிய விருதினை அதிமேதகு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவர்கள், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களிடம் வழங்கி வைத்தார். இதன்போது கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கௌரவ சுனில் ஹந்துன்நெத்தி அவர்களும் உடனிருந்தார். மேலும், இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர், பிரதம கணக்காளர், திட்டமிடல் பணிப்பாளர், உதவி மாவட்டச் செயலாளர் மற்றும் மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோரும் அரசாங்க அதிபருடன் இணைந்து விருதினைப் பெற்றுக்கொண்டனர். இந்தச் சாதனையானது யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தின் சிறந்த தலைமைத்துவம், ஒருங்கிணைந்த முயற்சி, அர்ப்பணிப்பான உழைப்பு மற்றும் மக்களுக்கான சிறந்த சேவை வழங்கலுக்குக் கிடைத்துள்ள தேசிய அங்கீகாரமாகும்.
 
1 2 3 4 5 6 7 8 9