இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சினால் ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின் (UNFPA) தொழில்நுட்ப அனுசரணையுடன் தயாரிக்கப்பட்டுள்ள தேசிய இளைஞர் கொள்கையின் வரைவு தொடர்பான வடமாகாண மட்ட விழிப்புணர்வு மற்றும் கருத்துப் பரிமாற்றக் கலந்துரையாடல் மேலதிக அரசாங்க அதிபர் திரு. கே. சிவகரன் தலைமையில், பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ஜெயசந்திரமூர்த்தி றஜீவன் அவர்களின் பங்கேற்புடன் இன்றைய தினம் (10.11.2026) காலை 9.00 மணிக்கு யாழ்ப்பாண மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. மேலும், இக் கலந்துரையாடலில் சர்வமதத் தலைவர்களும் பங்குபற்றினார்கள்.
நோக்கம்:
தேசிய இளைஞர் கொள்கையின் இறுதி வடிவத்தைத் தயாரிப்பதற்குத் தேவையான கருத்துக்கள், ஆலோசனைகள் மற்றும் முன்மொழிவுகளைப் பல்வேறு தரப்பினரிடமிருந்து பெற்றுக்கொள்வதுடன், இக்கொள்கை தொடர்பில் அரசியல் பிரதிநிதிகள், இளைஞர் அமைப்புகள், அரசாங்க அதிகாரிகள் மற்றும் ஏனைய பங்காளிகள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இக்கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும், தேசிய இளைஞர் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர் அனைத்துத் தரப்பினரதும் கருத்துக்களையும் உள்வாங்கி, இளைஞர்களின் தேவைகள், எதிர்பார்ப்புகள், சவால்கள் மற்றும் எதிர்கால அபிலாஷைகளைப் பிரதிபலிக்கும் வகையில் கொள்கையைச் செம்மைப்படுத்தி, நடைமுறைச் சாத்தியமுள்ளதாக்குவதே இத்தகைய மாகாண மட்டக் கலந்துரையாடல்களின் பிரதான நோக்கமாகும்.
வரவேற்புரை :
இக் கலந்துரையாடலில் வரவேற்புரையை இளைஞர் விவகாரப் பணிப்பாளர் திரு. எரங்க தயரத்ன வழங்கினார்.
தலைமையுரை :
மேலதிக அரசாங்க அதிபர் கே. சிவகரன் அவர்களின் தொடக்கவுரையில், இன்றைய கலந்துரையாடலில் கலந்துகொண்டுள்ள கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் உள்ளிட்டவர்களை வரவேற்றதுடன், இக் கலந்துரையாடலின் முக்கிய நோக்கம், தேசிய இளைஞர் கொள்கை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், இளைஞர்களின் தேவைகள், எதிர்பார்ப்புகள், சவால்கள் மற்றும் கருத்துக்களை உள்வாங்கி, அவர்களின் பங்களிப்புடன் ஒரு வலுவான தேசிய இளைஞர் கொள்கையை உருவாக்குவதாகும். இலங்கையின் சனத்தொகையில் சுமார் 21.9 வீதமானோர் இளைஞர்களாக உள்ளனர். நாட்டின் பொருளாதார, சமூக மற்றும் கலாசார அபிவிருத்தியில் இவர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாகும். இளைஞர்களின் ஆற்றல், திறமை, புத்தாக்கச் சிந்தனை மற்றும் தலைமைத்துவப் பண்புகளைச் சரியான முறையில் வழிநடத்துவதன் மூலம் நாட்டின் எதிர்காலத்தை வலுப்படுத்த முடியும் எனத் தெரிவித்தார். குறிப்பாக, கிராமப்புற இளைஞர்கள், இளைஞர் யுவதிகள், தொழில்வாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் பல்வேறு சவால்களை எதிர்கொள்ளும் இளைய தலைமுறையினரின் தேவைகளும் இக்கொள்கையில் உரிய முறையில் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சி, குறிப்பாக செயற்கை நுண்ணறிவின் விரைவான முன்னேற்றம், இளைஞர்களுக்குப் புதிய வாய்ப்புகளையும் சவால்களையும் உருவாக்கியுள்ளது. எனவே, மாறிவரும் உலகிற்கு ஏற்றவாறு இளைஞர்களின் திறன்களை மேம்படுத்துவதற்கான திட்டங்களும் கொள்கைகளும் அவசியமாகின்றன. அரசாங்கத்தினால் மாத்திரம் இளைஞர்களுக்கான கொள்கைகளைத் தீர்மானிக்காமல், இளைஞர்களின் நேரடிப் பங்கேற்பு, அனுபவங்கள் மற்றும் ஆலோசனைகளின் அடிப்படையில் அவை உருவாக்கப்பட வேண்டும். அந்த வகையில், இன்றைய கலந்துரையாடலில் முன்வைக்கப்படும் ஆக்கபூர்வமான கருத்துக்கள் தேசிய இளைஞர் கொள்கையை மேலும் வலுப்படுத்தும் என நம்புகின்றேன் எனத் தெரிவித்தார். எனவே, இங்கு கலந்துகொண்டுள்ள அனைவரும் தங்களது அனுபவங்களையும் பயனுள்ள ஆலோசனைகளையும் திறந்த மனதுடன் முன்வைத்து, இளைஞர்களின் எதிர்கால வளர்ச்சிக்கான சிறந்த கொள்கை உருவாக்கத்தில் பங்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
விளக்கவுரை, கருத்துரை மற்றும் திறந்த கலந்துரையாடல் :
தேசிய இளைஞர் கொள்கை தொடர்பான முதலாவது விளக்கவுரையை இளைஞர் விவகாரப் பணிப்பாளர் திரு. எரங்க தயரத்ன அவர்களும், இரண்டாவது விளக்கவுரையை உதவிப் பணிப்பாளர் திரு. நிமேஷா திவங்கரவும் நிகழ்த்தினர். தொடர்ந்து, ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின் (UNFPA) ஆய்வு மற்றும் கொள்கை அலுவலர் திரு. ஃபஹீம் அஸ்லாம் கருத்துரை வழங்கினார். மேலும், யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயசந்திரமூர்த்தி றஜீவன் அவர்கள் உரை நிகழ்த்தினார். இதனைத் தொடர்ந்து இடம்பெற்ற திறந்த கலந்துரையாடலில் பங்கேற்றவர்கள் தேசிய இளைஞர் கொள்கையின் வரைவு தொடர்பான தமது கருத்துக்கள், ஆலோசனைகள் மற்றும் முன்மொழிவுகளை முன்வைத்தனர். இளைஞர்களின் தற்போதைய தேவைகள், எதிர்கொள்ளும் சவால்கள், அவர்களுக்கான வாய்ப்புகள் மற்றும் எதிர்கால அபிவிருத்தி தொடர்பான பல்வேறு விடயங்களும் ஆராயப்பட்டன.
நன்றியுரை :
இந்நிகழ்வின் இறுதியில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் (NYSC) மாகாணப் பணிப்பாளர் திரு. கே.டி.சி. காமினி நன்றியுரை வழங்கினார். இக் கலந்துரையாடலில் வடமாகாண கல்வி அமைச்சின் விளையாட்டு துறையின் பிரதிப் பணிப்பாளர், உதவி மாவட்டச் செயலாளர், உதவிப் பிரதேச செயலாளர்கள், இளைஞர் சேவைகள் மன்றத்தின் வட மாகாண மாவட்ட உதவிப் பணிப்பாளர்கள், வட மாகாண மாவட்டங்களின் விளையாட்டு துறை உத்தியோகத்தர்கள், கலாசார உத்தியோகத்தர்கள், இளைஞர் சேவைகள் மன்றத்தின் உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.







