மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, அவர்களைப் பொருளாதார ரீதியாக வலுவூட்டும் நோக்கில் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்த நிறுவனங்கள், தனிநபர்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்களையும், வேலைவாய்ப்புகளைப் பெற்றுக்கொண்ட மாற்றுத்திறனாளிகளையும் பாராட்டிக் கௌரவிக்கும் வடக்கு மாகாண மட்ட விருது வழங்கும் விழா, யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு. கே. சிவகரன் தலைமையில் இன்று (12.11.2026) காலை 9.30 மணிக்கு யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.
பிரதம விருந்தினர் :
இந்நிகழ்வில் சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் திருமதி தர்ஷனி கருணாரத்ன பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார்.
நிகழ்வின் நோக்கம் :
மாற்றுத்திறனாளிகளின் திறமைகளையும் ஆற்றல்களையும் அங்கீகரித்து, அவர்களுக்குச் சமமான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதுடன், பொருளாதார ரீதியாகச் சுயாதீனமாகச் செயற்படுவதற்கு ஊக்குவிப்பதும் இந்நிகழ்வின் பிரதான நோக்கமாக அமைந்தது.
வரவேற்புரை :
மாவட்டச் செயலக உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ. தர்ஷினி வரவேற்புரையாற்றினார்.
தலைமையுரை :
மாற்றுத்திறனாளிகளும் பொருளாதாரத்தில் பங்களிப்பவர்களாகவும் தொழில் முயற்சியாளர்களாகவும் உருவாக வேண்டும் – மேலதிக அரசாங்க அதிபர் மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய தொழில் வாய்ப்புகளையும் ஊக்குவிப்பையும் ஏற்படுத்திக் கொடுத்து, அவர்களின் சொந்த உழைப்பின் மூலம் வருமானம் ஈட்டி, சுயமரியாதையுடனும் கௌரவத்துடனும் வாழ்வதற்கான சூழலை உருவாக்குவது சமூகத்தின் முக்கிய பொறுப்பாகும் என யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே. சிவகரன் தெரிவித்தார். இன்று நாம் ஒன்றுகூடியிருப்பது வெறுமனே விருதுகளையும் சான்றிதழ்களையும் வழங்குவதற்காக மட்டுமல்ல. மாற்றுத்திறனாளிகளின் மனிதநேயம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி மற்றும் அவர்களுக்கான சமூக அங்கீகாரம் ஆகியவற்றைக் கொண்டாடுவதற்காகவுமேயாகும். வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 102 மாற்றுத்திறனாளிகள் தனியார் நிறுவனங்களில் தொழில் வாய்ப்புகளுடன் இணைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 68 பேர் யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இவ்வெண்ணிக்கை அதிகரித்து வருவது சமூக சேவை உத்தியோகத்தர்களின் அர்ப்பணிப்பையும் முயற்சியையும் வெளிப்படுத்துகின்றது. கடந்த ஆண்டு யாழ்ப்பாண மாவட்டத்தில் 40 இற்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் இத்திட்டத்தின் ஊடாகத் தொழில் வாய்ப்புகளைப் பெற்றிருந்தனர். அதற்கு முந்தைய காலப்பகுதியில் 30 இற்கும் மேற்பட்டோர் இவ்வாறு தொழில்களுடன் இணைக்கப்பட்டிருந்தனர். ஆண்டுதோறும் அதிகரித்து வரும் இவ்வெண்ணிக்கை வரவேற்கத்தக்க முன்னேற்றமாகும். மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குவது அவர்களுக்கு வருமானத்தை ஏற்படுத்திக் கொடுப்பதுடன் மட்டுப்படுத்தப்படுவதில்லை. அது அவர்களின் தன்னம்பிக்கை, சுயமரியாதை, சுயாதீனமான வாழ்க்கை மற்றும் சமூக அங்கீகாரம் ஆகியவற்றையும் உறுதிப்படுத்துகின்றது. பல்வேறு உட்கட்டமைப்பு மற்றும் நடைமுறைச் சவால்களுக்கு மத்தியிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்புகளை வழங்க முன்வந்த தொழில் வழங்குநர்களின் மனிதநேயத்தையும் சமூகப் பொறுப்புணர்வையும் அவர் பாராட்டினார். அதேவேளை, பல்வேறு சவால்களைக் கடந்து உழைத்து முன்னேறுகின்ற மாற்றுத்திறனாளிகளின் முயற்சிகளும் பாராட்டுக்குரியவை எனக் குறிப்பிட்டார்.
உடல் ரீதியான குறைபாடு என்பது ஒருவருடைய வாழ்க்கையின் முற்றுப்புள்ளி அல்ல. உரிய வாய்ப்புகளும் ஊக்குவிப்பும் கிடைத்தால் மாற்றுத்திறனாளிகளாலும் பல்வேறு துறைகளில் சாதிக்க முடியும். அவர்கள் உதவி பெறுபவர்களாக மட்டும் இல்லாமல், தமது திறமைகளையும் ஆற்றல்களையும் பயன்படுத்திப் பொருளாதாரத்தில் பங்களிப்பவர்களாகவும் தொழில் முயற்சியாளர்களாகவும் உருவாக வேண்டும் என வலியுறுத்தினார். கடந்த காலங்களில் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவரகத்தின் (JICA) நிதி அனுசரணையுடன் முன்னெடுக்கப்பட்ட இத்திட்டம், இவ்வாண்டு சமூக சேவைகள் திணைக்களத்தின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவது பாராட்டத்தக்க விடயமாகும். இத்திட்டத்தை வெற்றிகரமாகச் செயற்படுத்தி வரும் சமூக சேவைகள் திணைக்களம், வேலைவாய்ப்பு ஆதரவு அலகு மற்றும் தொடர்புடைய உத்தியோகத்தர்களுக்கும் அவர் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார். மாற்றுத்திறனாளிகள் சமூகத்தில் சமமான வாய்ப்புகளைப் பெற்று, சுயமரியாதையுடனும் சுயாதீனமாகவும் வாழ்வதற்கான உள்ளடக்கிய சமூகச் சூழலை உருவாக்குவதற்கு அரச நிறுவனங்கள், தனியார் துறையினர் மற்றும் பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் மேலதிக அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
பிரதம விருந்தினர் உரை:
மாற்றுத்திறனாளிகளைத் தொழிற்படையில் இணைத்து, அவர்களின் திறன்களை மேம்படுத்தி, சுயமாக வருமானம் ஈட்டக்கூடியவர்களாகவும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குப் பங்களிப்புச் செய்பவர்களாகவும் உருவாக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் செயற்திட்டத்தின் கீழ், தேசிய ரீதியாக இதுவரை சுமார் 1,260 மாற்றுத்திறனாளிகள் தொழில் வாய்ப்புகளுடன் இணைக்கப்பட்டுள்ளனர் என சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் திருமதி தர்ஷனி கருணாரத்ன தெரிவித்தார். மேலும், 2022ஆம் ஆண்டு 18 வெற்றிகரமான தொழில் இணைப்புகளுடன் காணப்பட்ட இச்செயற்பாடு, 2023ஆம் ஆண்டு 123 ஆகவும், 2024ஆம் ஆண்டு 257 ஆகவும், 2025ஆம் ஆண்டு 337 ஆகவும் வளர்ச்சியடைந்து, 2026ஆம் ஆண்டில் 525 என்ற இலக்கை எட்டியுள்ளதாகக் குறிப்பிட்டார். தொழிற்பயிற்சி நிறுவனங்கள் மற்றும் தொடர்புடைய 10 திணைக்களங்களின் பங்களிப்புடன் மாற்றுத்திறனாளிகளுக்குத் தொழில்சார் பயிற்சிகள் வழங்கப்பட்டு, அவர்களின் ஆற்றலுக்கும் திறமைக்கும் பொருத்தமான தொழில்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்காக மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்கள், பிரதேச செயலாளர்கள், மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சமூக சேவை உத்தியோகத்தர்கள் ஆகியோர் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளனர். அவர்களின் ஒருங்கிணைந்த பங்களிப்பே இவ்வளர்ச்சிக்கான அடிப்படையாக அமைந்துள்ளதாகப் பணிப்பாளர் சுட்டிக்காட்டினார். மேலும், யாழ்ப்பாண மாவட்டம் இத்திட்டத்தின் கீழ் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளதுடன், வடக்கு மாகாணத்தில் முதலிடத்தைப் பெற்றுத் திகழ்கின்றது. அதேவேளை, வடக்கு மாகாணத்தின் ஏனைய மாவட்டங்களான கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களின் பங்களிப்புகளும் பாராட்டப்பட்டன. தேசிய ரீதியாக சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவு கடந்த வருடம் அதிகளவிலான தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திய பிரிவாக அடையாளம் காணப்பட்டுள்ளது. அதன் செயற்பாடுகள் ஏனைய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் முன்மாதிரியாக அமைய வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
இத் திட்டத்தின் ஊடாகத் தொழிலில் ஈடுபடும் ஒவ்வொருவரும் மாதாந்தம் சராசரியாக 26,000 ரூபாய் வருமானம் ஈட்டுவதாகக் கணக்கிடப்பட்டுள்ளதுடன், இதன் மூலம் ஆண்டுக்கு சுமார் 263 மில்லியன் ரூபாய் பொருளாதாரப் பங்களிப்பு நாட்டுக்குக் கிடைப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. பொருளாதாரப் பயனைத் தாண்டி, மாற்றுத்திறனாளிகளின் சுயமரியாதை, தன்னம்பிக்கை மற்றும் சமூக அந்தஸ்தை மேம்படுத்துவதிலும் இத்திட்டம் முக்கியத்துவம் பெறுகின்றது. எதிர்காலத்தில் தொழிற்பயிற்சி வாய்ப்புகளை விரிவுபடுத்துதல், புதிய தொழில் வழங்குநர்களை இணைத்தல், இதுவரை இத்திட்டத்தில் உள்வாங்கப்படாத மாற்றுத்திறனாளிகளை அடையாளம் கண்டு பயிற்சியளித்தல் மற்றும் அவர்களுக்கான தொழில் வாய்ப்புகளை அதிகரித்தல் போன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. மாற்றுத்திறனாளிகள் சமூகத்தின் சுமையல்லர், நாட்டின் பொருளாதாரத்திற்கும் சமூக வளர்ச்சிக்கும் பங்களிப்புச் செய்யக்கூடிய ஆற்றல்மிக்க பிரஜைகள் என்பதை நடைமுறையில் உறுதிப்படுத்துவதே இச்செயற்திட்டத்தின் பிரதான நோக்கமாகும் எனப் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.
கௌரவிப்பு :
இந்நிகழ்வில் தொழில் வாய்ப்புகளைப் பெற்றுக்கொண்ட மாற்றுத்திறனாளிகள், அவர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கிய நிறுவனங்கள் மற்றும் வேலைவாய்ப்புகளைப் பெற்றுக்கொடுப்பதற்கான ஒருங்கிணைப்புப் பணிகளில் ஈடுபட்ட அரச உத்தியோகத்தர்கள் என மூன்று தரப்பினரும் சான்றிதழ்கள் வழங்கிப் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர். அந்தவகையில், தொழில் வாய்ப்புகளைப் பெற்றுக்கொண்ட 102 மாற்றுத்திறனாளிகள் கௌரவிக்கப்பட்டனர். இவர்களில் யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த 68 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 10 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த 4 பேரும், மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த 12 பேரும், வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த 8 பேரும் அடங்குகின்றனர். அத்துடன், மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கிய 75 நிறுவனங்களும் கௌரவிக்கப்பட்டன.
மாற்றுத்திறனாளி ஊழியருக்கு ஒரு இலட்சம் ரூபாய் ஊக்குவிப்பு வழங்கிய நிறுவன உரிமையாளர் :
இந்நிகழ்வில், வவுனியாவைச் சேர்ந்த ஜீவன் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையத்தின் உரிமையாளர் திரு. செபஸ்டியாம்பிள்ளை ஜீவகுமார், தனது நிறுவனத்தில் கணக்காளராகப் பணியாற்றும் மாற்றுத்திறனாளி ஊழியர் ஒருவருக்கு ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான காசோலையை வழங்கி ஊக்குவித்தார். மாற்றுத்திறனாளிகளின் திறமைகளையும் உழைப்பையும் மதித்து, அவர்களின் தொழில் முன்னேற்றத்துக்கு ஆதரவளிக்கும் இச்செயல் நிகழ்வில் பாராட்டப்பட்டது.
வேலைவாய்ப்பு வழங்குநரின் சார்பில் கருத்துரை :
யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் ஆரோக்கிய உணவகம் நடாத்தி வரும் அல்லை விவசாயி திரு. மகேசன் கிரிசன், மாற்றுத்திறனாளி ஒருவருக்கு வேலைவாய்ப்பை வழங்கி, அவருக்குச் சிறந்த ஊதியத்தையும் வழங்கி வருகின்றார். தனது அனுபவப் பகிர்வின்போது, மாற்றுத்திறனாளிகளும் ஏனையவர்களைப் போன்று திறமையுடனும் அர்ப்பணிப்புடனும் பணியாற்றக்கூடியவர்கள் என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதற்கு தான் முன்வந்துள்ளதாகவும் தெரிவித்தார். இத்தகைய சமூக அக்கறையுடன் மாற்றுத்திறனாளிகளுக்குத் தொழில்வாய்ப்புகளை வழங்கி, அவர்களின் பொருளாதாரத் தன்னிறைவுக்கு வழிவகுக்கும் நிறுவனங்கள், தொழில் முயற்சியாளர்கள் மற்றும் தனிநபர்கள் ஏனையோருக்கும் முன்னுதாரணமாகத் திகழ்கின்றனர்.
நன்றியுரை :
யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தின் சமூக சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு. தி. உமாசங்கர் நன்றியுரையாற்றினார்.
பங்குபற்றியவர்கள் :
இந்நிகழ்வில் சமூக சேவைகள் திணைக்களத்தின் வேலைவாய்ப்பு ஆதரவுப் பிரிவின் அதிகாரிகள், வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள், சமூக சேவை உத்தியோகத்தர்கள், மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், தொழில்வாய்ப்புகளை வழங்கிய நிறுவனங்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 
1 2 3 4 6 7 8 10 14 17 18 20