
அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் “சுபீட்சத்தின் நோக்கு" என்ற திட்டத்தின் கீழ் கிராமிய தொழிற்துறையை விருத்தி செய்யும் நோக்குடன் 500 சௌபாக்கிய உற்பத்திக்கிராமங்கள் அங்குராப்ர்பணம் செய்யப்படுவதோடு, யாழ்ப்பாண மாவட்டத்தில் இந்த வருடம் 16 சௌபாக்கிய உற்பத்திக் கிராமங்கள் அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் திரு. கணபதிப்பிள்ளை மகேசன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண மாவட்டத்தின் சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பிரான்பற்று கிராமத்தில் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத்தலைவருமான கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சௌபாக்யா உற்பத்திக் கிராமத்தினை இன்றைய தினம் (01.07.2021) அங்குரார்பணம் செய்து வைத்துள்ளார். இந் நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி), மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர், பிரதேச செயலாளர், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், சண்டிலிப்பாய் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பயனாளிகள் ஆகியோர் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வில் கலந்து கொண்ட மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் அவர்கள் கருத்து தெரிவிக்கையில் " யாழ்ப்பாண மாவட்டத்தில் சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவில் பிரான்பற்று கிராமத்தில் சௌபாக்ய உற்பத்திக்கிராமத்தினை இன்றைய தினம் அங்குரார்ப்பணம் செய்துவைத்துள்ளோம் .இவ் சௌபாக்ய திட்டமானது சுபீட்சத்தின் நோக்கு என்கின்ற எமது அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுடைய தேசிய கொள்கைக்கு அமைவாக ஸ்தாபிக்கப்பட்டது ஆகும். இக் கொள்கை நோக்கின் அடிப்படையில் அரசாங்கம் பல்வேறுபட்ட செயற்திட்டங்களை அமுல்படுத்தி வருகின்றது. அதன் அடிப்படையில் கிராமத்தையும், கிராம பொருளாதாரத்தையும் தன்னிறைவு மிக்க ஒரு கிராம பொருளாதாரமாக உருவாக்கி மக்களும், நாடும் சுபீட்சத்தினை அடைய வேண்டும் என்ற இலக்கினை அடிப்படையாக கொண்டு இத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளார்.
மேலும் " இலங்கையில் 500 சௌபாக்கிய உற்பத்திக்கிராமங்கள் அங்குரார்ப்பணம் செய்யப்படுவதோடு, யாழ்ப்பாண மாவட்டத்தில் இந்த வருடம் 16 சௌபாக்கிய உற்பத்திக் கிராமங்கள் அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ளது. கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஏனைய மாவட்டங்களை போன்று எமது மாவட்டத்திலும் உற்பத்திக் கிராமங்களை அதிகரிக்க வேண்டும் எனக் கூறினார். நாங்கள் அந்த கோரிக்கைகளை முன்வைத்து அதனை பெற இருக்கின்றோம். அத்தோடு எதிர் வரும் ஏழாம் திகதிக்கு இடையே 16 சௌபாக்ய உற்பத்திக் கிராமங்களும் அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ளது. இந்த உற்பத்திக் கிராமம் நாங்கள் அங்குரார்ப்பணம் செய்யும் இன்றைய நிலையிலிருந்து இன்னும் வளர்ச்சியடைந்து தன்னிறைவு மிக்கதாக இக் கிராமம் மாற வேண்டும். அதற்கு நீங்கள் ஒவ்வொருவரும் ஒத்துழைக்க வேண்டும்.
அதே போன்று, சிறிய நடுத்தர கூட்டு மேம்பாட்டின் மூலம் வேலைவாய்ப்பினை வழங்கி சுயதொழில் ஊடாக அவர்களை நல்லதொரு முயற்சியாளர்களாக, முதலாளிகளாக மாற்றுவதற்கு இவ் சௌபாக்ய உற்பத்திக் கிராம செயற்திட்டம் நல்லதொரு வாய்ப்பை வழங்கியுள்ளது.
மேலும் உள்ளூரில் கிடைக்கும் வளங்களை பயன்படுத்தல் பிரதான இலக்காக காணப்படுகிறது.தேசிய மட்டத்தில் கௌரவ பிரதமர் தலைமையில் இந் நிகழ்வு இன்றைய தினம் நடைபெறுகிறது. அதே போல் பிரான்பற்று கிராமத்திலும் நாங்கள் சுகாதார வழிமுறை பின்பற்றி அங்குரார்ப்பணம் செய்துவைத்துள்ளோம்.
இவ் சௌபாக்ய உற்பத்திக் கிராம செயற்திட்டத்திற்காக 87.71 மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளது. 2021 ஆம் வரவு செலவுத் திட்டத்தில் இதற்குரிய நிதி ஒதுக்கப்பட்டு தற்போது அந் நிதி கிடைக்கப்பெற்று விடுவித்துள்ளோம்.
அத்தோடு தேசிய மட்டத்தில் இரண்டு இலட்சம் குடும்பங்களை வலுப்படுத்தும் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாண மாவட்டத்தில் 6352 குடும்பங்கள் வலுப்படுத்தப்படவுள்ளது. அதனடிப்படையில் பிரான்பற்று கிராமத்தில் 117 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு 5.78 மில்லியன் வழங்கப்பட்டுள்ளது" என மேலும் தெரிவித்துள்ளார்.






