இலங்கை நிர்வாக சேவைக்கு திறந்த போட்டிப் பரீட்சை மூலம் தெரிவு செய்யப்பட்டு யாழ்.மாவட்ட செயலகத்தில் பயிற்சிகளுக்காக இணைக்கப்பட்டுள்ள நிர்வாகசேவை அதிகாரிகளை அறிமுகம் செய்யும் ஆரம்ப நிகழ்வு இன்று (04.10.2021) காலை 9 மணிக்கு மாவட்டச் செயலாளர் திரு. க.மகேசன் அவர்களின் தலைமையில் மாவட்டச் செயலகத்தில் சுகாதார விதிமுறைகளுக்கு அமைய ஆரம்பிக்கப்பட்டது.மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமான குறித்த நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி), உதவி மாவட்ட செயலாளர், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் , மாவட்ட செயலக பிரதம கணக்காளர், நிர்வாக உத்தியோகத்தர் மற்றும் இலங்கை நிர்வாக சேவைக்கு தெரிவு செய்யப்பட்டு பயிற்சிகளுக்காக வருகைதந்திருந்த நிர்வாக சேவை அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
குறித்த நிகழ்வின் அறிமுக நிகழ்வினை தொடர்ந்து , புதிதாக இலங்கை நிர்வாக சேவைக்கு தெரிவு செய்யப்பட்டு பயிற்சிக்காக மாவட்டச்செயலகத்தில் இணைந்துள்ள நிர்வாக சேவை அதிகாரிகளை வாழ்த்தி வரவேற்று அவர்களுக்கான முதன்மை அறிவுரைகளை மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள் வழங்கினார்.
தொடர்ந்து, நிகழ்வின் நோக்க உரை தொடர்பாக கருத்து தெரிவித்த மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள் தெரிவிக்கையில், "சேவைக்கு முதலிடம்" என்ற இலங்கை நிர்வாக சேவையின் மகுட வாசகத்திற்கு இணங்க மக்கள் சேவைக்கு முதலிடம் வழங்கி , சரியான விடயங்களை இனங்கண்டு, ஏற்படும் சவால்களை எதிர்கொண்டு பிரச்சினைகளுக்கு விரைவாக, உரிய தீர்வு காணப்படல் வேண்டுமென தெரிவித்தார்.







