4vadaeast2வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மணல்பிட்டிகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று( 04.10.2021) காலை 10 மணிக்கு யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திரு. க.மகேசன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடலில், மணல் வழங்கல் தொடர்பாக மாவட்ட செயலகம், பிரதேச செயலகம், பாரவூர்திச்சங்கம், மற்றும் கிராம அபிவிருத்தி சங்கங்கங்களின் பங்கு , மணல் அகழ்ந்து எடுப்பதற்குரிய மண்பிட்டிகள் என அடையாளப்படுத்தப்பட்ட கிராம அலுவலர் பிரிவுகள் என்பன தொடர்பாக விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.
 
குறித்த கலந்துரையாடலின் பின் கருத்துரைத்த யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள், யாழ்ப்பாண மாவட்டத்திலே கட்டுமான நடவடிக்கைகள் மற்றும் ஏனைய விசேட தேவைகளுக்காக மணலைப் பெறுவதில் பல்வேறுபட்ட சிக்கல்கள் காணப்படுகின்றன. சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்று வரும் இந்நிலையில், மணல் விலையும் அதிகரித்து காணப்படுகின்றது. பலதரப்பட்ட கலந்துரையாடல்களை சம்பந்தப்பட்ட தரப்பினருடன் நடாத்தி சில தீர்மானங்களை இன்றைய தினம் எட்டப்பட்டதாக தெரிவித்தார்.
 
மேலும் தெரிவிக்கையில், அதனடிப்படையில் மருதங்கேணி பிரதேசத்தில் காணப்படுகின்ற மணல் திட்டுக்கள் ஒரு சிலவற்றை அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. சூழலைப் பாதிக்காதவாறு அவற்றைப் பெற்று அபிவிருத்தி திட்டங்களுக்கும் தனியார் கட்டுமாண திட்டங்களுக்கும் பயன்படுத்துவதற்குரிய ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
 
இதிலே காணப்பட்ட பல விடயங்கள் பல பிரச்சினைகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் ஆராய்ந்து அதன் அடிப்படையில் இவற்றை தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்குரிய நடவடிக்கை எடுத்துள்ளோம் .
 
மாவட்ட செயலகம், மருதங்கேணி பிரதேச செயலகம் மற்றும் அதனுடைய தொடர்புடைய திணைக்களங்கள் மற்றும் அந்த கிராமங்களில் உள்ள கிராம அபிவிருத்தி சங்கத்துடன் இணைந்து பாரவூர்தி சங்கத்தினருடனும் இணைந்த வகையில் இந்த மணலை பெற்று பயன்படுத்தக் கூடிய ஒரு பொறிமுறையும் அதற்குரிய திட்டங்களை ஏற்பாடு செய்து இருக்கின்றோம் .அதனடிப்படையில் மணல் கோரிக்கை விடுத்துள்ளவர்களுடைய கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு அவர்களுக்குரிய மணல் வழங்கக்கூடிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இந்த செயற்பாட்டில் அனைத்து தரப்பினரும் ஒத்துழைத்து செயற்பட வேண்டும் என தெரிவித்தார்.
 
குறித்த கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர்(காணி), உதவி மாவட்டச்செயலாளர், மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர், மருதங்கேணி பிரதேச செயலாளர்,வனவள திணைக்கள அதிகாரிகள், கரையோர பாதுகாப்புச்சபை அதிகாரிகள்,பிரதேச சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் , மற்றும் கிராம அபிவிருத்தி சங்க பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
 
4vadaeast1   4vadaeast2   4vadaeast3