தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சினால், மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் யாழ்.மாவட்ட கலைஞர்களுடன் கலந்துரையாடல் இன்றையதினம் (06.11.2021) மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் கௌரவ விதுர விக்ரமநாயக்க அவர்களும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும்,யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவருமான கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்களும் கலந்து கொண்டதோடு, குறித்த அமைச்சின் செயலாளர் நிஷாந்தி ஜெயசிங்க, தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அனுர மானதுங்க, மேலதிக அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் மற்றும் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், உதவி மாவட்டச் செயலாளர், கலாசார உத்தியோகத்தர்கள், மத குருமார்கள், பேராசிரியர்கள், கலைஞர்கள்,எழுத்தாளர்கள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.
கௌரவ இராஜாங்க அமைச்சர் கலைஞர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை கேட்டறிந்து கொண்டதோடு, கலைக்கு யாரும் எல்லை வகுக்க முடியாது அது மனிதத்தோடு இணைந்திருப்பது ஆகும். மனிதன் கலையிலிருந்து விலகியிருப்பதனால் பல பிரச்சனைகள் உருவாகியுள்ளதாகவும் கலைக்கு ஊடாக சமூகத்தை கட்டியெழுப்புவோமெனவும் அதற்காக எமது அமைச்சு எந்த நேரமும் தயாராகவுள்ளது எனவும் தெரிவித்தார்.
மேலும், அரசாங்க அதிபர் உரையாற்றும் போது, கௌரவ இராஜாங்க அமைச்சர் கலைஞர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை அறிய விஜயம் செய்துள்ளார். எங்களுடைய மாவட்டத்தில் பலதரப்பட்ட கலைஞர்கள் காணப்படுகின்றார்கள். எமது கலைஞர்கள் பல்வேறு தேசிய விருதுகளை பெற்றதோடு ஆறு கலைஞர்களுக்கு கலாபூசன விருதுகிடைத்துள்ளது. அத்தோடு சில கலைகள் அழிவடைந்து செல்வதை காணமுடிகிறது. எனினும் அரசாங்கம் தேசிய கொள்கை மூலம் அவற்றிற்கு புத்துயிர் அளிக்க செயற்படுவதாகவும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.







