பாரி அறக்கட்டளை கல்விக்கான சமூகப்பணி அமையத்தினால் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் ஊடாக பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட பொருளாதார ரீதியில் நலிவுற்ற மாணவியின் கற்றல் மேம்பாட்டிற்காக 22.11.2021 அன்று மாவட்டச் செயலகத்தில் மடிக் கணனி வழங்கிவைக்கப்பட்டது.
இம் மடிக்கணனி வழங்கல் நிகழ்வில் அரசாங்க அதிபர் கருத்துரைக்கும் போது " மடிக் கணனியைப் பெற்று கற்றல் செயற்பாட்டை வினைத்திறனாக்க வேண்டும். அத்தோடு எதிர்காலத்தில் இத்தகைய அறப்பணிகளில் நீங்களும் ஈடுபடவேண்டுமென குறிப்பிட்டதோடு, நன்கொடை வழங்கிய நிறுவனத்திற்கும் நன்றிகளை தெரிவித்தார்.
மேலும் பாரி அறக்கட்டளை கல்விக்கான சமூகப் பணி அமையத்தின் தலைவர் உரையாற்றும் போது " பெற்றோர் இருவரையும் இழந்தும், பொருளாதார ரீதியில் நலிவுற்றும் வாழும் குடும்பங்களில் வசித்து ,கல்வியில் ஆர்வம் கொண்டுள்ள மாணவர்களிற்கு அவர்களின் கற்றல் மேம்பாட்டை நோக்காகக்கொண்டு செயற்படும் எமது நிறுவனத்தினால் ஒரு இலட்சத்து இருபதாயிரம் ரூபா பெறுமதியான மடிக்கணனி வழங்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும் எமது நிறுவனத்தினால் பொருளாதார ரீதியில் நலிவுற்றும் வாழும் குடும்பங்களில் வசித்துவரும்
க.பொ.த சாதாரண தர மாணவர்களின் இணையவழி நிகழ் நிலை கற்றலிற்காக மடிக்கணனி வழங்கப்படுவதோடு, பெற்றோரை இழந்து கல்வி கற்கும் மாணவர்களிற்கு மாதாந்தம் 5000 ரூபா வழங்குகின்றோம். மேலும் பொருளாதார ரீதியில் நலிவடைந்த தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கும் நான்காயிரம் தொடக்கம் ஐயாயிரம் ரூபாவரை வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், இம் மடிக்கணனி வழங்கல் நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.ம.பிரதீபன் அவர்களும், பாரி அறக்கட்டளை கல்விக்கான சமூகப்பணி அமையத்தின் கருத்திட்ட அலுவலர் திரு.ரவிராஜ், குறித்த மாணவி மற்றும் பெற்றோர் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.





