மனித வலு வேலைவாய்ப்புத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் தேசிய தொழில் வழிகாட்டல் வார போட்டி நிகழ்ச்சிகளிற்கான விருதுகள் வழங்கும் நிகழ்வு உதவி மாவட்டச் செயலாளர் திருமதி.எஸ்.சி.என்.கமலராஜன் அவர்களின் தலைமையில் 06.12.2021 அன்று மாலை மூன்று மணிக்கு மாவட்ட செயலக கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றும் போது" மனித வலு வேலை வாய்ப்புத் தொழில் நிலையம் மாவட்ட செயலகத்தில் சிறப்பாக செயற்படுகிறது. எமது மாவட்ட மாணவர்கள் சிறப்பாக செயற்பட்டு தேசிய ரீதியில் ஏழு இடங்களை பெற்றுள்ளார்கள். மனித வளத்தினை சிறப்பாக பயன்படுத்துகிறோமா என்றால் கேள்விக்குறியாகவே உள்ளது. பாடசாலையில் கற்கும் மாணவர்களில் ஒரு தொகுதி மாணவர்களே பல்கலைக்கழகம் செல்கிறார்கள். இத்தகைய மனித வளங்களை சரியாக பயன்படுத்துதல் வேண்டும். அரசாங்கம் மனித வளத்தை வலுப்படுத்த இலவசக் கல்வி மற்றும் இலவச மருத்துவத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. மனித வளம் என்பது வெறுமனே பாடசாலையில் படிப்பதோ பட்டம் பெறுவதோ அல்ல சமூகத்தில் ஆரோக்கியமாக செயற்படுதல் வேண்டும். உங்கள் அறிவுப் பரப்பை விரிவாக்க வேண்டும் நிறைய வாசியுங்கள் வாசிப்பின் ஊடாக நீங்கள் சிறந்த நிலையில் இருப்பீர்கள். உடல் உள ஆரோக்கியம் சமமாக இருக்க வேண்டும் எனவே மனித வளமானது பல்வேறு விடயங்களோடு இணைந்திருக்கின்றது" எனவும் தெரிவித்தார்.
மேலும், இந் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக யாழ்ப்பாண வலயக் கல்விப்பணிப்பாளர் திரு.முத்து இராதா கிருஸ்ணன் அவர்கள் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போது " வாழ்வை சிறப்பாக மேற்கொள்ள கல்வி பிரதானமானது ஆகும். கல்வி மட்டுமல்லாது திறனும் பிரதானமானது ஆகும். நல்ல சிந்தனைகளை மேற்கொண்டு புத்தாக்க செயற்பாடுகளில் ஈடுபடுதல் வேண்டும். நீங்கள் மீண்டும் மீண்டும் முயற்சி செய்வதனூடாக வெற்றியாளராக மாற முடியுமென" தெரிவித்தார்.
மேலும், இந் நிகழ்வில் மாவட்ட செயலக பிரதம கணக்காளர், பாடசாலை அதிபர்கள் , ஆசிரியர்கள், மனி வலு வேலைவாய்ப்புத் திணைக்கள உத்தியோகத்தர்கள்,பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.





