தீவக அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் நேற்றையதினம் (2021.12.09) காலை 11 மணிக்கு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.க.மகேசன் அவர்களின் தலைமையில் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.கௌரவ வட மாகாண ஆளுநர் அவர்களின் தீவக களவிஜயத்தின் போது அவதானிக்கப்பட்ட குறைபாடுகள் மற்றும் மக்களால் முன்வைக்கப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் ஒழுங்கு செய்யப்பட்ட குறித்த கலந்துரையாடலில் , தீவக வீதி உட்கட்டமைப்பு நடவடிக்கைகள், கல்வித் துறைசார் ஆளணிப்பற்றாக்குறை படகுச்சேவை, மற்றும் பயணிகள் வீதிப் போக்குவரத்து பிரச்சனைகள்,மற்றும் சுகாதாரம், விவசாயம், சந்தைப்படுத்தல், , கழிவகற்றல் , மின்சாரம் உள்ளிட்ட விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டன.
குறித்த கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த மாவட்ட அரசாங்க அதிபர் " துறைசார் அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்து செயற்படல் அவசியமென வலியுறுத்தியதுடன், சமூகத்தின் அவசரதேவைகளை முன்னிறுத்தி தீவகத்தின் முன்னேற்றத்திற்காக செயற்படுத்த வேண்டிய விடயங்களை முன்கொண்டு செல்ல வலியுறுத்தினார். இதற்காக பொது அமைப்புக்கள் மற்றும் சிவில் அமைப்புக்களின் ஆலோசனைகளை பெற்று செயற்பட வேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் கல்வித் துறையில் ஆளணி வளப் பற்றாக்குறை , ஏனைய வளங்களின் குறைபாடுகளை அறிக்கை சமர்ப்பிக்க உரிய கல்வித்துறை சார் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டதுடன், படகுச் சேவை மற்றும் பயணிகள் பேருந்துச் சேவையினை மக்களின் தேவைக்கமைய ஒருங்கிணைந்த வகையில் செயற்படுத்த ஆலோசிக்கப்பட்டது.
மேலும், வீதி உட்கட்டுமான நடவடிக்கையுடன் தொடர்புடைய திணைக்களங்கள் ஒன்றிணைந்து மக்கள் நலனை முன்னிறுத்தி செயற்பாடுகளை முன்னெடுக்க வலியுறுத்தப்பட்டதுடன், குறுகிய காலத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய அவசியமான தேவைகள் அவற்றிற்கான திட்டங்களையும், அதேபோன்று நீண்டகால திட்டங்கள் அவற்றிற்கான வளத் தேவைபாடுகளை இனங்கண்டு சமூக நலனை முன்னிறுத்தி தீவகத்தின் முன்னேற்றத்திற்காக ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டமை குறிப்பிடப்பட்டதக்கது.
குறித்த கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் (காணி), மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட விவசாயப் பணிப்பாளர், மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர் ,கௌரவ ஆளுநர் அவர்களின் உதவிச் செயலாளர், வட மாகாண பிரதம செயலாளரின் பிரதிநிதி, தீவக பிரதேச செயலாளர்கள்,உதவிதிட்டமிடல் பணிப்பாளர்கள்,தீவக கல்வித்துறைசார் அதிகாரிகள், உள்ளூர் அதிகாரசபை அதிகாரிகள், கியூமெடிக்கா நிறுவன அதிகாரிகள்,வீதி அபிவிருத்தி சபை அதிகாரிகள்,நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அதிகாரிகள், மற்றும் துறைசார் பங்குதாரர்கள் கலந்துகொண்டார்கள்.






