9agri1இயற்கை முறையிலான சேதனப் பசளை உற்பத்தி தொடர்பான தற்போதைய நிலவரங்களை ஆராயும் கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் நேற்றைய தினம் (09.12.2021) பிற்பகல் ஐந்து மணிக்கு யாழ்.மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.

இக் கலந்துரையாடலில், நூறு வீதம் இயற்கை முறையிலான சேதனப் பசளை மூலம் உற்பத்தியில் ஈடுபடுதல், அதற்காக இராணுவத்தினரின் பங்களிப்பை பெறுதல் பற்றி ஆராயப்பட்டது. அத்தோடு இவ் உற்பத்தியில் ஈடுபடுகின்ற விவசாயிகள் மூலம் ஏனைய விவசாயிகளையும் சேதனப் பசளை மூலமான உற்பத்திக்கு தூண்டுதல் அத்தோடு சமூக ஊடகங்கள் மற்றும் இன்ன பிற ஊடகங்கள் மூலமாக விவசாயிகளுக்கு இவ் உற்பத்தி தொடர்பான விழிப்புணர்வுகளை வழங்குதல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

மேலும், நெல் உற்பத்தியின் அளவு, சேதனப் பசளை கொடுக்கும் அளவுகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டதோடு, விவசாய ஆராய்ச்சி உற்பத்தி அலுவலர்கள் இல்லாத கிராம மட்டங்களில் இராணுவத்தினர் மனித வளங்களை தருவதாகவும் குறிப்பிடப்பட்டது.
இக் கலந்துரையாடலில், மேலதிக அரசாங்க அதிபர், பிரதி மாகாண பிரதி விவசாயப் பணிப்பாளர், கமநல திணைக்கள உதவி ஆணையாளர், மாவட்ட விவசாயப் பணிப்பாளர், இராணுவக் கட்டளைத் தளபதிகள் ( வலிகாமம், தென்மராட்சி, வடமராட்சி) மற்றும் துறைசார் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டிருந்தார்கள்.