யாழ்ப்பாண மாவட்ட மனித வலு வேலைவாய்ப்புத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மாபெரும் தொழிற் சந்தை நிகழ்வு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் நேற்றைய தினம் (11.12.2021) மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்கள் கலந்துகொண்டதுடன், உதவி மாவட்டச் செயலாளர் திருமதி. எஸ்.சி.என்.கமலராஜன் மற்றும் திரு.எஸ்.சுசிகரன் ( IOM ) மற்றும் மனித வலு வேலைவாய்ப்புத் திணைக்கள உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.
மேலும், தொழில் தேடுபவர்களையும் தொழில் வழங்கும் நிறுவனங்களையும் இணைக்கும் இத்தொழிற்சந்தையில் 23 தொழில் வழங்கும் நிறுவனங்கள் பங்குபற்றியதோடு,400 வரையான தொழில் வெற்றிடங்களுக்காக 300 க்கு மேற்பட்ட தொழில் தேடுபவர்கள் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது






