கிராம உத்தியோகத்தர்களினால் மேற்கொள்ளப்படுகின்ற அரச கடமைகள் மிகவும் வினைத்திறன் மற்றும் உற்பத்தித் திறன் வாய்ந்ததாக மேற்கொள்வதற்காக ஒழுங்கு முறையிலான பயிற்சிகளை வழங்கும் நோக்கமாக உள்நாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சின் ஏற்பாட்டில் கிராம அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு இன்றைய தினம்(13.12.2021) மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் காலை 9 மணிக்கு ஆரம்பமானது.குறித்த நிகழ்வின் பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் உயர்திரு கணபதிப்பிள்ளை மகேசன் அவர்கள் கலந்து கொண்டிருந்தார். மேலும் குறித்த நிகழ்வில் உதவி மாவட்ட செயலாளர் திருமதி.சி.எஸ்.என் கமலராஜன்அவர்களும் குறித்த பயிற்சிநெறியின் வளவாளர்களாக
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உஜித் நயனபிரிய லியனகே மற்றும் பிரதம பொலிஸ் அத்தியட்சகர் பி.எம்.சி.ஜே.பி.பலிகேன ஆகியோர் கலந்து கொண்டனர்.
குறித்த நிகழ்வினை ஆரம்பித்து வைத்து தலைமை உரையாற்றிய மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் அவர்கள் கருத்து தெரிவிக்கையில், கிராம மட்டத்தில் இருந்து அமைச்சுமட்டம் வரையான அனைத்து தகவல்களையும் திரட்டும் மிக முக்கியமான பொறுப்புவாய்ந்த பணியை ஆற்றும் கிராம அலுவலர்களின் கடமைகளின் முக்கியத்துவத்தை சிறப்பாக எடுத்துரைத்தார்.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு கருத்து தெரிவித்த மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள் கருத்து தெரிவிக்கையில் மக்களின் பிரச்சினைகளை கிராம மட்டத்தில் தீர்க்கும் மிக முக்கியமான கடமைகளை மேற்கொள்ளும் கிராம அலுவலர்களின் இச்சேவையை வலுப்படுத்தும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட இப்பயிற்சியானது பொதுமக்களின் சேவைக்கு உத்வேகமளிக்கும் வகையில் அமையுமென தெரிவித்தார்.
மேலும், கிராம உத்தியோகத்தரின் கடமைகள், பொறுப்புகள், தலைமைத்துவம் ,உற்பத்தித்திறன், முகாமைத்துவம் ,சட்டம் மற்றும் சமாதானம் தொடர்பான பயிற்சி ஆகியவற்றை வழங்கும் இப்பயிற்சி நெறியானது பொதுமக்களின் சேவைக்கு பாதிப்பில்லா வண்ணம் மூன்று கட்டங்களாக ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.






