இலங்கை மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் ILO நிறுவனத்தின் நிதி பங்களிப்புடனும் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு வழங்கும் பயிற்சிப் பட்டறை நிகழ்வு யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் 10.01.2022 காலை 9 மணிக்கு நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில் "வட மாகாணத்திலுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு வழங்குகின்ற இறுதிகட்ட அறிக்கை தயாரிக்கும் போது அவர்களுக்கான எதிர்கால வேலை வாய்ப்பை மேம்படுத்தும் வகையில், அத்துடன் பாரம்பரிய கடப்பாடுகளை கடைப்பிடிக்கின்ற அதேவேளை நவீன மாற்றங்களுடனான மொழி, தொழில்நுட்ப அறிவை மேம்படுத்தும் வகையில் வேலைவாய்ப்பு வழங்கும் திட்டங்களை தயாரிக்க வேண்டும்.
மேலும், தரப்பட்ட சந்தர்ப்பத்தையும், முயற்சியையும் பயன்படுத்தி தொழில் வழங்குநர்களை உருவாக்கும் திட்டங்களை வட மாகாணத்துக்கு முன்னோடி திட்டமாக தயாரிக்க வேண்டும்" என தெரிவித்தார்.
இந் நிகழ்வில் கருத்து தெரிவித்த மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் அவர்கள் "மாற்றுத்திறனாளிகளுக்கான செயற்திட்ட அறிக்கையானது ஐந்து மாவட்டங்களிலும் உள்ள வேலையற்ற மாற்றுத்திறனாளி இளைஞர் யுவதிகளுக்கான வேலைவாய்பையும் சுய தொழிலை மேற்கொள்வதற்கான ஊக்குவிப்பு திட்டமாகவும், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பை ஊக்குவிக்கும் திட்டமாகவும் அமைய வேண்டும்" என தெரிவித்தார்.
இந் நிகழ்வில் இலங்கை மனித வலு வேலைவாய்ப்பு திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் என்.சஞ்சிவன் மற்றும் யாழ். மாவட்ட செயலக மனித வலு வேலைவாய்ப்பு திணைக்களத்தின் ஒருங்கிணைப்பாளர் கே.கருணாகரன் மற்றும் யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி ,வவுனியா மாவட்ட செயலக இணைப்பாளர்கள் மற்றும் உத்தியோகத்தர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.





