நிதியமைச்சினால் முன்னெடுக்கப்படும் 2022ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்ட ஒரு இலட்சம் வேலைத்திட்டத்தின் யாழ்ப்பாண மாவட்ட பணிகள் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்களினால் 03.02.2022 அன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
யாழ்ப்பாண பிரதேச செயலகத்தில் நடைபெற்ற ஆரம்ப நிகழ்வில், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோது "கிராமிய பொருளாதாரத்தை வலுப்படுத்துவதே தேசத்தின் நிலையான அபிவிருத்திக்கு அடிப்படை என்பதை கருத்தில் கொண்டு, அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவர்களின் "சுபீட்சத்தின் நோக்கு" கொள்கைத்திட்டத்தின்படி, மாண்புமிகு பிரதமர் மகிந்த ராஜபக்ச அவர்களின் கண்காணிப்பில்,மாண்புமிகு நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச அவர்களின் வழிகாட்டுதலில், எமது அரசாங்கத்தால் ஒவ்வொரு கிராமங்களுக்கும் தலா 3 மில்லியன் ரூபாய் நிதியானது, 2022ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
இச் செயற்றிட்டம் யாழ்.மாவட்டத்திலுள்ள அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் ஒரே நேரத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
மேலும், இவ் ஆரம்ப நிகழ்வில் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்கள் கலந்துகொண்டதோடு, மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் (காணி), உதவி மாவட்டச் செயலாளர், பிரதம கணக்காளர், மாவட்ட விவசாயப்பணிப்பாளர், மாவட்டச் செயலக உள்ளக கணக்காய்வாளர், பிரதேச செயலாளர், உதவித் திட்டமிடல் பணிப்பாளர், மாவட்டச் செயலக நிர்வாக உத்தியோகத்தர் மற்றும் மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள்.






