இலங்கை சாரணர் சங்கத்தின் யாழ்ப்பாண மாவட்டக் கிளையின் வருடாந்த பொதுச்சபைக் கூட்டம் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபரும், யாழ்.மாவட்ட சாரணர் சங்கத்தின் மரபுவழி கிளைச்சபை தலைவருமான கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் 2022.02.07 பிற்பகல் 2.30 மணிக்கு மாவட்டச்செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.இக் கூட்டத்தில், சாரணர் சங்கத்தின் பிரதம ஆணையாளர் கௌரவ ஜெனபிரித் பெர்னான்டோ அவர்களும், வடக்கு கிழக்கு விஷேட ஆணையாளர் கௌரவ எஸ்.எப்.எம்.முகீட் அவர்களும் கலந்துகொண்டதோடு, வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், கௌரவ மாவட்ட ஆணையாளர் இ.தவகோபால், உதவி மாவட்டச் செயலாளர் திருமதி.எஸ்.சி.என். கமலராஜன் மற்றும் பாடசாலை அதிபர்கள், சாரணர் இயக்கத்தின் உறுப்பினர்கள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.
மேலும், அரசாங்க அதிபர் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போது " யாழ்.மாவட்டத்தில் சாரணர் இயக்கம் நீண்ட பாரம்பரியத்தை கொண்டது ஆகும். இச் சாரணர் இயக்கத்திற்கு மாவட்ட மட்டத்தில் தலைமையேற்பதில் மகிழ்வடைவதோடு, அவ் இயக்கத்தின் மூலம் மனிதாபிமான நடவடிக்கைகள் மற்றும் ஒற்றுமை, தலைமைத்துவம், சகோதரத்துவம் சார்ந்த விடயங்கள் முன்னெடுக்கப்படுகிறது. எனவே யாழ்.மாவட்டத்தில் சாரணர் இயக்கத்தை சரியாக வழிப்படுத்தி அடுத்த தலைமுறையை உருவாக்க செயற்படுவோம்" எனவும் தெரிவித்தார்.
மேலும், சாரணர் சங்கத்தின் பிரதம ஆணையாளர் கருத்துத் தெரிவிக்கும் போது "1907 ஆம் ஆண்டு பேடன்பவல் என்பவரால் சாரணர் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது ஆகும். 1907 ஆம் ஆண்டு 20 பேரோடு ஆரம்பிக்கப்பட்டதோடு தற்போது ஏராளமானோர் இச் சங்கத்தில் இணைந்துள்ளார்கள். யாழ்ப்பாணத்தில் முதன்முதலாக 1917 இல் சாரணர் ஜம்போரி நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
அத்தோடு யாழ். மாவட்ட சாரணர் சங்கத்திற்கு அரசாங்க அதிபரின் உதவியினால் காணி ஒன்று கிடைத்துள்ளது. அதில் சரியான வகையில் உங்களுக்கான கட்டிடத்தை அமைத்து பயன்படுத்துதல் வேண்டும்.
அதிமேதகு ஜனாதிபதியின் எதிர்பார்ப்பு என்னவென்றால் இங்குள்ள பாடசாலை மாணவர்களை அரவணைத்து நீங்கள் வழிகாட்டுதல் வேண்டும் என்பது ஆகும். இன்றைய தினம் தெரிவு செய்யப்பட்ட நிர்வாகக் குழுவை மனம் திறந்து பாராட்டுவதோடு, அனைத்து பாடசாலைகளிலும் சாரணர் சங்கத்தை உருவாக்குவதன் மூலம் பாடசாலை மாணவர்களுக்கு சாரணத்தியம் பற்றி தெரிவித்தல் வேண்டும்" எனவும் தெரிவித்தார்.
இக் கூட்டத்தில் வருடாந்த அறிக்கைகள் வாசிக்கப்பட்டதோடு, புதிய நிறைவேற்றுக்குழுத் தெரிவும் நடைபெற்றது.







