இலங்கையைப் பசுமை நாடாக உருவாக்குவதற்கு அவசியமான முக்கிய விடயங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவ்விடயங்களை முறைமையாகவும், நிலையானதாகவும் செயற்படுத்துவதற்கு, ‘பசுமை விவசாயச் செயற்பாட்டு மையம்’ ஒன்றை பாதுகாப்புப் படைகளின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் வழிகாட்டலின் கீழ் அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் ஸ்தாபித்திருந்தார்.
அதனடிப்படையில், சிறிய அளவிலான உர உற்பத்தியாளர்களின் உற்பத்திகளை கொள்வனவு செய்தல், தரத்தினை உயர்த்துதல் மற்றும் ஒருங்கமைத்தல் வேலைத்திட்டம் தொடர்பான உயர்மட்டக் கலந்துரையாடலானது அனைத்து மாவட்டங்களையும் ஒரே நேரத்தில் உள்ளடக்கியதாக கடந்த வெள்ளிக்கிழமை (11.02.2022) காலை 10.30மணியளவில் Zoom செயலி ஊடாக இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடலில் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷிந்திர ராஜபக்ஷ, பாதுகாப்புப் படைகளின் பிரதானியும் இராணுவத் தளபதியும் பசுமை விவசாயச் செயற்பாட்டு மைய தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா, அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட உயரதிகாரிகள் Zoom செயலி ஊடாக இணைந்திருந்தனர்.
அதேவேளை, அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் இராணுவ உயரதிகாரிகள், மாகாண பிரதி விவசாய பணிப்பாளர், மாவட்ட விவசாய பணிப்பாளர்,கமநல சேவைகள் உதவிஆணையாளர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இதன்போது, சுற்றாடலுக்கு நட்புறவான சேதனக்கூட்டுப் பசளை உற்பத்தியில் ஈடுபடும் 15 பேர் அழைக்கப்பட்டிருந்ததோடு, சேதனக் கூட்டுப்பசளை மட்டும் கொள்வனவு செய்வதோடு திரவமாக பசளையை கொள்வனவு செய்வதில்லை, நெல்லுக்கு தேவையான பசளையை விநியோகத்தல், சேதன பசளையை உற்பத்தி தொடர்பாக அலுவலர்களுக்கான பயிற்சிகள் வழங்குதல் தொடர்பாகவும் ஆராயப்பட்டுள்ளது.
இதன்போது சுற்றாடலுக்கு நட்புறவான . சேதனப்பசளை உற்பத்தியாளர்களை பதிவு செய்யும் நடவடிக்கைகள் தரநிர்ணயம் செய்து தரத்தினை உயர்த்துதல், அவர்களிடமிருந்து கொள்வனவு செய்து விநியோகித்தல் என்பவற்றுடன் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் அவற்றை தீர்ப்பதற்கான வழிவகைகள் குறித்து ஆராயப்பட்டுள்ளது.
மேலும், உள்ளூர் சேதனப்பசளை உற்பத்தியாளர்களிடம் பெறப்பட்ட மாதிரிகள் தேசிய பசளை செயலகத்திற்கு அனுப்பி வைக்கும் செயல்முறைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.






