மாவட்ட மட்டத்தில் நடைபெற்று முடிந்த கிராம அலுவலர் சேவை ஊடாக நிறைவேற்ற எதிர்பார்க்கும் மக்கள் சேவைகளை சிறந்த முறையில் முறையில் ஆற்றுவதற்கும் மற்றும் கிராம அலுவலகங்களின் தரத்தினை மேம்படுத்துவதனையும் இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட மாவட்ட மட்ட உத்தியோகத்தர் அலுவலக முகாமைத்துவ போட்டியில் பங்குபற்றி வெற்றி பெற்ற உத்தியோகத்தர்களுக்கான மாவட்ட மட்ட விருது வழங்கும் நிகழ்வு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்று (09.03.2022 )பிற்பகல் 2.30 மணிக்கு மாவட்ட செயலக கேட்போா் கூடத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு கருத்து தெரிவித்த மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்கள் பொது மக்களின் பணத்தில் சம்பளம் பெறும் நாம் பொதுமக்களுக்காக சரியான முறையில் செயற்பட்டு, மக்களுடைய தேவைகளை பூர்த்தி செய்ய அவர்களுக்கு வழங்குகின்ற சேவைகளை உரிய வகையில் வழங்கி மக்களை திருப்திப்படுத்தி செயற்படுவதுடன் இலக்கினை தவறாது பொதுமக்களுடன் இசைந்து கடமையாற்ற வேண்டும் எனத் தெரிவித்தார்.மேலும்,அலுவலகங்களை சரியான முறையில் பேணுவதுடன் பொதுமக்கள் மற்றும் சக உத்தியோகத்தர்களுடனும் இடையேயான உறவு முறையை சரியாக பேணி திறமைகளை நாளாந்தம் வளப்படுத்தி கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
மேலும், பிரதேச செயலகங்கள் மற்றும் மாவட்ட செயலகம் சரியாக முறையில் இயங்க வேண்டுமானால் கிராம மட்டங்களில் கிராம அலுவலர்கள் வினைத்திறனான செயற்பாடு மிக அவசியமானதென தெரிவித்தார்.
இங்கு கருத்து தெரிவித்த மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் அவர்கள் தெரிவிக்கையில், இப்போட்டியில் பங்குபற்றாத ஏனைய கிராம உத்தியோகத்தர்களும் இச்செயற்பாட்டில் பங்குபற்றி மாவட்ட மாவட்ட உற்பத்தித்திறன் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் அதேவேளை மக்களுக்கு அர்ப்பணிப்புடன் சேவையாற்ற வேண்டுமென தெரிவித்தார்.
இந்நிகழ்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக ரீதியாக சிறப்பான முறையில் செயலாற்றுகையை வெளிக்காட்டிய கிராம உத்தியோகத்தர்கள் ,மாவட்ட மட்ட போட்டியில் பங்குபற்றிய கிராம உத்தியோகத்தர்கள் ஆகியோர் விருது மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந் நிகழ்வில் மாவட்ட செயலக பிரதம கணக்காளர் ,மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ,உதவி மாவட்ட செயலாளர்,நிர்வாக உத்தியோகத்தர், பிரதேச செயலர்கள் ,உதவி பிரதேச செயலர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் நிர்வாக கிராம உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
பிரதேச மட்டத்தில் நடைபெற்று முடிந்த கிராம அலுவலர் அலுவலக முகாமைத்துவ போட்டி முடிவுகளின் அடிப்படையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் பதினைந்து பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த 50 கிராம அலுவலர் அலுவலகங்கள் பரிசீலிக்கப்பட்டன.அவற்றில் முதல் மூன்று இடங்களை பெற்ற உத்தியோகத்தர்களது விபரங்கள் வருமாறு.
1 ஆம் இடம்- திரு.பா.வைகுந்தன் -கரவெட்டி பிரதேச செயலகம்-J/376,நெல்லியடி கிராம அலுவலர் பிரிவு.
2ஆம் இடம்- திரு.அ.விமலேசன் மருதங்கேணி பிரதேச செயலகம்-J/423 ,நாகர்கோவில் கிழக்கு கிராம அலுவலர் பிரிவு.
2ஆம்இடம்-திரு.க.தனேஸ்வரன்- சாவகச்சேரி பிரதேச செயலகம்- J/332, கெற்பேலி கிராம அலுவலர் பிரிவு.
3ஆம் இடம்- திரு.இ. யூயின் மசனட்-உடுவில் பிரதேச செயலகம் ,J/183,உடுவில் தென்கிழக்கு கிராம அலுவலர் பிரிவு.







