தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் ஏற்பாட்டில் சிறுவர் இல்ல மேற்பார்வை தொடர்பான மாகாண மட்டக் கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் 2022.03.25 காலை 9.30 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் அரசாங்க அதிபர் கருத்துத் தெரிவிக்கும் போது " சிறுவர்கள் பல்வேறுபட்ட காரணங்களால் சிறுவர் இல்லங்களை தஞ்சமடைந்துள்ளார்கள். இச் சிறுவர்களை நெறிப்படுத்தி சமூகத்தில் ஆளுமைமிக்கவர்களாக மாற்றுதல் வேண்டும். அத்தோடு சிறுவர் இல்லங்களில் உள்ள சிறுவர்களிற்கு போதிய பாதுகாப்பினை வழங்குவதோடு கல்வி, கலாசாரச் செயற்பாடுகளில் அவர்களை ஈடுபடுத்துதல் வேண்டும் அத்தோடு சிறுவர் அபிவிருத்தி நிலையங்களை கண்காணிப்பது நுட்பமான பணியாகும்" எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், இக் கலந்துரையாடலில் சிறுவர்களுக்கு உகந்த சூழலை உருவாக்குதல், சிறுவர் இல்லத்தில் நிலவும் குறைபாடுகள், சிறுவர் தொடர்பான பணியினை மேற்கொள்ளும் அதிகாரிகள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் சிறுவர் நன்நடத்தை அதிகாரசபை மற்றும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் பணிகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் திரு.ம.பிரதீபன், உதவி மாவட்டச் செயலாளர் திருமதி.எஸ்.சி.என்.கமலராஜன், வடமாகாண சிறுவர் நன்னடத்தை ஆணையாளர் திரு.ஆர்.குருபரன், திட்ட முகாமையாளர் திரு.ரோஹண ரணசிங்க(NCPA), உளசமூக முகாமையாளர் திரு.லக்மல் பொன்னம்பெரும (NCPA), மாவட்ட மட்ட மற்றும் பிரதேச மட்ட சிறுவர் நன்னடத்தை அதிகாரிகள், மாவட்ட மட்ட மற்றும் பிரதேச மட்ட தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரிகள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள்.






