யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் உத்தியோகத்தர்களுடனான கலந்துரையாடல் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்களின் தலைமையில் (21.06.2022) காலை பத்துமணிக்கு மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன், மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) எஸ்.முரளிதரன், வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் வட மாகாண சிரேஷ்ட முகாமையாளர் சந்தியா மானகே, பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்களின் பிரத்தியேக செயலாளர் சிவராம் மற்றும் மாவட்டச் செயலக திட்டமிடல் பணிப்பாளர், உதவி மாவட்டச் செயலாளர், வெளிநாட்டு வேலைவாய்ப்பு திணைக்களத்தின் இணைப்பாளர், மனித வள வேலைவாய்ப்பு திணைக்களத்தின் இணைப்பாளர், வெளிநாட்டு வேலைவாய்ப்பு திணைக்களத்தின் பிரதேச மட்ட உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தார்கள்.

மேலும், இக் கலந்துரையாடலில் மாவட்ட அரசாங்க அதிபர் கருத்துத் தெரிவிக்கும் போது "தற்போதைய பொருளாதார நெருக்கடிமிக்க சூழலிலும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக உத்தியோகத்தர்கள் தமது அர்ப்பணிப்பான சேவைகளை முன்னெடுத்து வருகின்றார்கள். எனினும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு திணைக்களம் மற்றும் மனித வள வேலைவாய்ப்பு திணைக்களம் ஆகியோர் தமது சேவைகளை இன்னும் பலப்படுத்த வேண்டிய தேவையுள்ளது. குறிப்பாக தொழில் தேர்ச்சிகளை வழங்கி உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சிறந்த தொழிலாற்ற வலுப்படுத்துதல் வேண்டும். அத்தோடு தொழில் தேடுவோர் மற்றும் அரச உத்தியோகத்தர்களுக்கு தொழிற்பயிற்சிகள் மற்றும் தொழிற் சந்தைகளை மேற்கொண்டு சான்றிதழ்களை வழங்குதல் வேண்டும்.

மேலும், உரிய மொழிகளை கற்பித்து உத்தரவாதம் மிக்க தொழிலை பெற்றுக் கொடுத்தல் மற்றும் அதிகளவான சம்பளத்தை பெறுவதற்கான வழிகாட்டல்களை மேற்கொள்ளுதல் வேண்டும். அத்தோடு இதற்காக பல சர்வதேச நிறுவனங்களும் இணைந்து செயற்படுவதனையும் காணமுடிகின்றது" எனவும் தெரிவித்துள்ளார்.