யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் உணவுக் கையிருப்புப் பாதுகாப்பு மற்றும் போசாக்கினை உறுதிப்படுத்துவதற்காக கிராமிய பொருளாதார புத்துயிரூட்டல் கேந்திர நிலையங்களை வலுவூட்டுவதற்கான பல்வகைத்துறைசார் ஒருங்கிணைந்த பொறிமுறையை உருவாக்குவதற்கான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் (21.09.2022) காலை 9 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில், அனைத்து பிரஜைகளுக்கும் நாட்டில் நிலவும் எந்தவொரு நிலமையின் கீழும் சுறுசுறுப்பான, ஆரோக்கியமான வாழ்க்கைக்குத் தேவையான போதுமான உணவினை நியாயமான விலையில் பெற்றுக்கொள்வதற்கான இயலுமையை உருவாக்குதல் எனும் நோக்கத்துடன், உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்கு தொடர்பான மாவட்ட ஒருங்கிணைந்த பொறிமுறை, உணவு பாதுகாப்பு மற்றும் போஷாக்கு தொடர்பான பிரதேச ஒருங்கிணைந்த பொறிமுறை மற்றும் கிராமிய பொருளாதார புத்துயிரூட்டல் கேந்திர நிலையம் ஆகிய பொறிமுறைகளை உருவாக்குதல் தொடர்பாக ஆராயப்பட்டது.

மேலும், மாவட்டத்திற்குள் உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்கு நிகழ்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் மூலம் மாவட்டத்தில் உணவுப் பாதுகாப்பினை உறுதிப்படுத்தி போசாக்கின்மையை இல்லாமல் செய்தல், இது தொடர்பாக சரியான திட்டமிடல்களை மேற்கொள்ளுதல் மற்றும் மதிப்பீடுகள் செய்தல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் திரு. ம.பிரதீபன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு.எஸ்.முரளிதரன், மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.செ. நிக்கொலஸ்பிள்ளை ஆகியோர் கலந்துகொண்டிருந்தார்கள். அத்தோடு இணையவழி நிகழ்நிலை மூலம் ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் கலாநிதி .ஜே.ஜி.எல். சுலக்சன, ஜனாதிபதியின் ஆலோசகர் கலாநிதி.வட்டகொட, லெப்டினன்ட் கேணல் ஞானடிக ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள். அத்தோடு பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர், கமநல சேவைகள் உதவி ஆணையாளர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், சமுர்த்தி பணிப்பாளர், மாகாண திணைக்கள தலைவர்கள், பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர், வர்த்தக சங்க தலைவர், வலயக் கல்வித் திணைக்கள அதிகாரிகள், மற்றும் பனை தென்னை வள கூட்டுறவு சங்கம், சிறுவர் உத்தியோகத்தர்கள், மகளிர் உத்தியோகத்தர்கள், விதாதா வளநிலையம் மற்றும் துறைசார் உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள்