பின்தங்கிய நிலையில் உள்ள சுய தொழில் முயற்சியாளர்களின் வலையமைப்பு மற்றும் கூட்டாண்மையை வலுப்படுத்துவதன் மூலம் பொருளாதார மேம்பாட்டினை அடைதல் தொடர்பான திட்ட அறிமுக ஆலோசனை அமர்வு மேலதிக அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் (19.10.2022) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.நிதி அமைச்சினுடைய தேசிய ஒருமைப்பாட்டின் கீழும் USAID நிறுவன அனுசரனையுடனும் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போது தனியார் துறை முயற்சியாளர்களின் கூடுதல் பங்களிப்பில் இதனுடைய வெற்றி அடங்கியுள்ளதாக தெரிவித்தார்.தற்பொழுது உற்பத்தியாளர்களைவிட விற்பனை முகவர்கள் அதிக உறுதியுடன் செயற்படுகின்றனர்.சுய தொழில் முயற்சியாளர்களின் வலையமைப்பு பரந்துபட்டு பலமாக உருவாக்கப்படவேண்டுமென்றால் உள்ளக தொடர்பாடலும், உள்ளக செயற்பாடுகளும் மிகவும் உறுதியானதாக இருக்கவேண்டும் என்றும் தெரிவித்தார்.
சுயதொழில் முயற்சியாளர்களின் வலையமைப்பை மேம்படுத்துவது என்பது திணைக்களங்களினால் மட்டும் முடியாத காரியமாகும்.நல்ல அரிய சந்தர்ப்பங்கள் அதிகம் உள்ளன, இதற்கேற்ற வகையில் தொழில் முயற்சியாளர் தமது வணிக திட்டமிடல்கள், தகுதி, பிரதேசத்திற்குரிய வளங்கள் மற்றும் தேவைகளை இனங்கண்டு அதற்கேற்ற வகையில் உற்ப்பத்தியாளர்களை வலுப்படுத்தவேண்டும் என்றும் அரசாங்க அதிபர் அறிவுரைவழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும், இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி)திரு.எஸ். முரளிதரன் மற்றும் மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்கள மாவட்ட இணைப்பாளர், விவசாய திணைக்களம், கைத் தொழில் அதிகார சபை, சிறுதொழில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், தனியார்துறை நிறுவனங்கள் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.





