யாழ் மாவட்ட செயலகத்தின் 2023 ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பித்தல் நிகழ்வு யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் (2023.01.02) காலை 9.00 மணிக்கு மாவட்ட செயலகம் முன்றலில் நடைபெற்றது.
2023 ஆம் ஆண்டுக்கான யாழ் மாவட்ட செயலகத்தினுடைய ஆரம்ப நிகழ்வானது "நூற்றாண்டுக்கான முன்னெடுப்பு" என்ற தொனிப் பொருளின் கீழ் தேசிய கொடி ஏற்றல், தேசிய கீதம் இசைத்தல் மற்றும் சத்தியப்பிரமாணம் செய்தல் போன்ற நிகழ்வுகளுடன் இனிதே ஆரம்பமானது.
இதன்போது கருத்து தெரிவித்த மேலதிக அரசாங்க அதிபர் கடந்தகாலங்களில் ஏற்பட்ட கொவிட் தொற்றிடர் நிலை மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு நிலவிய நெருக்கடியான காலங்களில் எமது மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் மிகவும் வினைத்திறனாகவும் அர்ப்பணிப்பாகவும் சேவையாற்றியமைக்கு வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்ததுடன், இச் செயற்பாடுகளை சிறப்பான வழி நடத்தல்களை வழங்கி வழிப்படுத்திய முன்னாள் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களுக்கு நன்றியையும் தெரிவித்தார்.
 
மேலும் , அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் எண்ணக்கருவில் உருவான உணவுப்பாதுகாப்பு செயற்பாடுகளுக்கு அனைவரினதும் பங்களிப்பு அவசியமானதென தெரிவித்தார்.மேலும் அறிவு, திறன் மனப்பாங்குடன் சிந்தித்து செயலாற்றுவதன் மூலமும் வெற்றி அடையலாம் என்பதுடன் இவ் வெற்றி மூலம் பொதுமக்கள் திருப்தி அடையக்கூடிய வகையில் சேவையாற்றுவதே அரச உத்தியோகத்தர்கள் ஆகிய எங்கள் ஒவ்வொருவரினதும் தலையாய கடமையாகும் என தெரிவித்தார்.

இந் நிகழ்வில் அரச உத்தியோகத்தர்களின் கடமை முக்கியத்துவம் தொடர்பாக யாழ் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் திரு.எஸ்.எஸ் உதயகுமார் அவர்கள் சிறப்புரையினை ஆற்றினார்.அத்துடன் நிகழ்வில் பதவிநிலை உத்தியோகத்தர்களால் வாழ்த்துரைகள் வழங்கப்பட்டதுடன், சிறப்பு நிகழ்வுகளும் நடைபெற்றன.

இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி), திட்டமிடல் பணிப்பாளர், பிரதம கணக்காளர், சமுர்த்தி பணிப்பாளர், மாவட்ட பொறியியலாளர், உள்ளக கணக்காய்வாளர், உதவி மாவட்ட செயலாளர், பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
 
2wo1 2wo2 2wo3