.அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் பங்கேற்புடன் நடைபெறவுள்ள 75வது தேசிய சுதந்திர தினம் மற்றும் தைப்பொங்கல் நிகழ்வுகளின் முன்னேற்பாட்டு கலந்துரையாடல் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ( காணி) சுப்பிரமணியம் முரளிதரன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (10.01.2023) காலை 10.00மணிக்கு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
குறிப்பாக 15 ஆம் திகதி பிற்பகல் 3 மணிக்கு நல்லூர் சிவன் ஆலய உட்புறத்தில் பொங்கல் நிகழ்வுடன் ஆரம்பிக்கப்படும் எனவும் தொடர்ந்து இசை ,நாதஸ்வர, கலாச்சார நிகழ்வுகள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் உரைகள் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இப்பொங்கல் நிகழ்வு நல்லூர் பிரதேச செயலகம் மற்றும் கலாச்சாரத் திணைக்களத்தின் ஒழுங்கமைப்புடன் ஒழுங்கமைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும் அடுத்த 25 வருடங்களுக்கான இலங்கையின் அபிவிருத்தி முன்னெடுப்பிற்கு அமைவாக கொண்டாடப்படவுள்ள 75வது தேசிய சுதந்திர தின நிகழ்வுகளை பெப்ரவரி 11ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்திய கலாச்சார மண்டபத்தில் நடாத்துவதற்குரிய ஏற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
குறிப்பாக ஆளுநர், இந்தியத் துணைத்தூதரக அதிகாரிகள்,மத்திய கலாசார அமைச்சு,யாழ் மாநகர சபை என்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ள இணைப்பு முகாமைத்துவ குழுவின் ஏற்பாட்டில் இடம்பெறும் குறித்த நிகழ்வுகள் யாழ்ப்பாணம் ,கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னாா் மாவட்டங்கள் உள்ளடக்கி,குறித்த மாவட்டங்களை உள்ளடக்கியதான சிறப்பு அம்சங்களுடன் கலாசார நிகழ்வுகள் இடம் பெறும் எனவும் அதற்கான அனுசரணையாளர்கள், உள்ளக மற்றும் வெளியக அலங்கார ஏற்பாடு, கலாச்சார நிகழ்வுகள் உள்ளிட்ட தொடர்புடைய விடயங்கள் ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இக்கலந்துரையாடலில் நிகழ்நிலை ஊடாக ஏனைய மாவட்ட திணைக்கள தலைவர்கள் ,பிரதிநிகள் கலந்து கொண்டதுடன், ஜனாதிபதி செயலக பிரதிநிதிகள், யாழ்ப்பாணம் மற்றும் நல்லூர் பிரதேச செயலாளர்கள், வடக்கு மாகாண பிரதம செயலக அதிகாரிகள் ,கௌரவ ஆளுனர் செயலக அதிகாரிகள், இராணுவஅதிகாரிகள் , பொலிஸ் அதிகாரிகள் மற்றும் மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்





