விளையாட்டு மற்றும் இளைஞர் அபிவிருத்தியில் இளைஞர்களை வலுப்படுத்தி ஈடுபடுத்தல் தொடர்பான ஒருங்கிணைந்த செயற்திட்டத்தை அமுல்படுத்துதல் தொடர்பான கலந்துரையாடல் வட மாகாண ஆளுநர் கௌரவ ஜீவன் தியாகராஜா அவர்களின் தலைமையில் (12.01.2023) காலை 9.30 மணிக்கு ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.
இக் கலந்தரையாடலில் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் கௌரவ றொசான் ரணசிங்க, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார இராஜாங்க அமைச்சர் கௌரவ றோஹன திஸாநாயக்க, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளரும் முன்னாள் யாழ்மாவட்ட அரசாங்க அதிபருமான கணபதிப்பிள்ளை மகேசன் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றது.
விளையாட்டு மற்றும் இளைஞர் அபிவிருத்தியில் இளைஞர்களை ஈடுபடுத்தி கிராமிய, மாவட்ட, மாகாண ரீதியாக வலுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய விடயங்கள்,தேசிய பொருளாதாரத்திற்கான வலுவான இளைஞர் தொழில்முனைவு விடயங்கள் தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டது.
பங்காளர்களுடனான ஒருங்கிணைந்த அணுகுமுறை , திறன் விருத்தியுடன் தொடர்புடைய நிறுவனங்களின் செயற்பாடுகள், விளையாட்டு துறைசார் புலமைப்பரிசில் திட்டங்கள் ,பாடசாலை மட்டத்தில் இளைஞர் விளையாட்டு கழகங்களை அபிவிருத்தி செய்தல், சர்வதேச ரீதியிலான தரம் வாய்ந்த விளையாட்டு மைதானத்தை யாழ்ப்பாணம்- மண்டைதீவுப்பகுதியில் அமைப்பதற்கான முன்மொழிவுகள் மற்றும் இளைஞர்களுக்கான தொழில்பயிற்சி வாய்ப்புக்களை விருத்தி செய்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாகவும் கலந்தாலோசிக்கப்பட்டது.
இதன்போது விளையாட்டு துறைசார் பிரச்சினைகள் தொடர்பாக குறிப்பாக விளையாட்டு வீர வீராங்கனைகளுக்கான பயிற்சிகளை வழங்குதல், இதற்கான உபகரண வசதி மற்றும் இட வசதியினை ஏற்படுத்திக்கொடுத்தல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
இதன்போது , அமைச்சின் மேலதிக செயலாளர் அமைச்சின் உயர்அதிகாரிகள், வடமாகாண பிரதம செயலாளர், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு அரசாங்க அதிபர்கள் ,கல்வி அமைச்சின் உயரதிகாரிகள், முப்படையினர், விளையாட்டு துறைசார் திணைக்கள தலைவர்கள்,இளைஞர் கழக துறைசார் பிரதிநிதிகள் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இக்கலந்துரையாடல் நடைபெற்றது





