யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் கடற்தொழில் அமைச்சரும் யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத் தலைவருமான கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் (04) யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதில் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவில் அனுமதி பெற வேண்டிய விடயங்களாக நீர்ப்பாசன திணைக்களத்தின் செயற்பாடுகள், விவசாயத் திணைக்களத்தின் செயற்பாடுகள், மீள் குடியேற்ற செயற்பாடுகள், உள்ளூர் அபிவிருத்தி உற்பத்தித்திட்டத்தின் செயற்பாடுகள்,தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் வேலைத்திட்டங்கள், கல்வித்திணைக்கள செயற்பாடுகள் தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
அத்துடன் தேசிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படும் பிரதான அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்கள் மற்றும் யாழ். மாவட்டத்தில் அதன் முன்னேற்றம் தொடர்பாக குறிப்பாக சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாளர்களை ஊக்குவித்தல், கைத்தொழில் மற்றும் ஏற்றுமதி நடவடிக்கைகள், பாடசாலையை விட்டு இடைவிலகிய மாணவர்களை பாடசாலையில் இணைத்தல், போதைப்பொருளுக்கு அடிமையானோரை புனர்வாழ்வுக்கு உட்படுத்தல், போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுவோரை புனர்வாழ்வளித்து மீளவும் சமூகத்தில் இணைத்தல், குறைந்த வருமானம் பெறும் கர்ப்பிணித்தாய்மாரின் போஷாக்கினை மேம்படு்த்தல், குறைந்த வருமானம்பெறும் குடும்பங்களிலுள்ள பிள்ளைகளின் போஷாக்கினை மேம்படு்த்தல், நிலைபேறான வீட்டுத்திட்டங்களை உருவாக்குதல்,மர நடுகைத்திட்டங்கள் போன்ற திட்டங்களில் எதிர்பாா்த்த இலக்குகள் தற்போதைய அடைவு மட்டங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.

மேலும் உணவுப்பாதுகாப்பு மற்றும் போஷாக்கு ,வடக்கு மாகாண சபையின் ஒதுக்கீட்டின் கீழான யாழ் மாவட்டத்துக்குரிய அபிவிருத்தித் திட்டங்கள், நிரல் அமைச்சுக்கள், நியதிச்சபைகள் மற்றும் கூட்டுத்தாபனங்களின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் யாழ் மாவட்ட செயலகத்தால் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தித்திட்டங்கள் மற்றும் எழுவைதீவில் கருவேலை மரங்களின் பரவல் அதிகரிப்பு, யாழ் மாவட்டத்தில் கட்டாக்காலி நாய்கள் மற்றும் வளர்ப்பு நாய்கள் என்பவற்றினூடாக அனுபவிக்கும் தொல்லைகளும் உயிரிழப்புக்களும், வெள்ளை ஈ தாக்கத்தின் பரவல் அதிகரிப்பு, நவக்கிரி சித்த மருத்துவமனைக்கான மூலிகைத் தோட்டத்தை விஸ்தரிக்க இலங்கை இராணுவத்தினர் நிலை கொண்டுள்ள 02 ஏக்கர் காணியை விடுவித்தல்,விவசாயிகளினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் போன்ற பல்வேறு பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.

இதேவேளை யாழ் மாவட்ட முஸ்லிம் பாடசாலைகளில் காணப்படும் பிரச்சினைகள், வலி வடக்கில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை விடுவித்தல், வட மாகாணத்தில் முதலீட்டு வலயங்களை உருவாக்குவதற்கான முன்மொழிவுகள், கால்நடை வளர்ப்பு சங்கம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாகவும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவருமான கௌரவ ஜீவன் தியாகராஜா, மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் மற்றும் மாகாண சபையின் திணைக்களத்தலைவர்கள், வடக்கு மாகாண சபை அமைச்சின் செயலாளர்கள், பிரதிப்பொலிஸ்மா அதிபர், கடற்படைத்தளபதி, விஷேட அதிரடிப்படைத்தளபதி,பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், அரச, அரசாா்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், பிரதேச செயலாளர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.
கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சி.ஸ்ரீதரன், த .சித்தாா்த்தன், ம. சுமந்திரன், அங்கஜன் இராமநாதன் மற்றும் முன்னாள் வடக்கு மாகாண சபை அவைத்தலைவர் ஆகியோர் மேற்படி கூட்டத்திற்கு வருகைதந்திருந்தபோதும் தையிட்டி பௌத்த விகாரை சம்பந்தமான சில ஆட்சேபனைகள் குறித்து வெளிநடப்பு செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.