யாழ்ப்பாண மாவட்ட செயலக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரக்கிளையின் ஏற்பாட்டில் மாவட்ட அரசாங்க அதிபரும் தொகை மதிப்பு மாவட்ட ஆணையாளருமான அ.சிவபாலசுந்தரன் அவர்களின் தலைமையில் குடிசன மற்றும் வீட்டு வசதிகள் தொகை மதிப்பு தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு 10.05.2023 புதன்கிழமை காலை 9.00 மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இவ்விழிப்புணர்வுக் கருத்தரங்கில் நடைபெறவுள்ள 2024 ஆம் ஆண்டுக்கான 15வது குடிசன மற்றும் வீட்டு வசதிகள் தொகை மதிப்பு நிகழ்ச்சி திட்டத்திற்கான தொகை மதிப்பு ஆணையாளர் மற்றும் பிரதித்தொகை மதிப்பு ஆணையாளர்களுக்கான தொகை மதிப்பு கட்டங்கள், தொகை மதிப்பின் அமைப்பு ,தொகை மதிப்பீட்டின் கடமைப் பொறுப்புகள், காலவரையறை போன்ற விடயங்கள் தொடர்பாக விழிப்புணர்வுக் கருத்தரங்கு நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள் கருத்து தெரிவிக்கும்போது "நாட்டில் புள்ளிவிபரத் திணைக்களத்தின் முக்கியத்துவம் அதன் செயற்பாடுகள் பற்றியும் நவீனமயப்படுத்தல் மற்றும் தகவல் திரட்டுதல் முறை ,காலவரையறையில் காணப்படும் குறைபாடுகள் பற்றியும் இதில் பிரதேச செயலாளர்களின் பங்களிப்பு" தொடர்பாகவும் கருத்து தெரிவித்தாா்.

இந்நிகழ்வில் தொகை மதிப்புத் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் அனோஜா செனவிரட்ண,தொகை மதிப்பீட்டுத் திணைக்களத்தின் கள முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.எச்.மன்சூர், பிரதிப்பணிப்பாளரும் மாவட்ட இணைப்பாளருமான மஞ்சுள ஏக்கநாயக்க மற்றும் மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள் உதவி பிரதேச செயலாளர்கள் மற்றும் மாவட்ட செயலக புள்ளிவிவரக் கிளையின் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்