யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கடற்தொழில் அமைச்சரும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் (31.05.2023) காலை ஒன்பது மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவில் அனுமதி பெற வேண்டிய விடயங்களாக குளம், வாய்க்கால் புனரமைப்பு மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களால் சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களான எழுவைதீவிலுள்ள பனைவளங்கள் அழிதல், அத்தோடு கருவேலை மரங்களின் பரவல் தொடர்பாக கலந்துரையாடப்பட்டு, பனைமரங்களை தறிப்பதனை குறைத்தல் வேண்டுமெனவும் குறிப்பிடப்பட்டது.
அத்தோடு புத்தூர்- கந்தரோடை, மானிப்பாய்- காரைநகர் , எழுதுமட்டுவாழ்- நாகர்கோவில் வீதிகளின் அபிவிருத்தி புனரமைப்பு தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.
அத்தோடு செம்மணி பகுதியில் முப்பது ஏக்கர் காணியை நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு கையளித்தல், சுன்னாகம் நிலத்தடி நீரில் ஒயில் கலந்தமை தொடர்பாக நீதிமன்றத் தீர்ப்புகள், கீழ் பாலியாற்று வடி நிலத்திலிருந்து யாழ் குடாநாட்டிற்கு குடிநீர் விநியோகம் போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
மேட்டுநிலப் பயிர்களுக்கான காப்புறுதிகள், கடலட்டை பண்ணை அமைத்தல், மாணவர்களின் இடைவிலகல் மற்றும் வரவு ஒழுங்கற்ற மாணவர்கள், தேசிய தொழிற் தகைமை சான்றிதழ் வழங்குதல் தொடர்பாக பிரதேசசெயலாளர்கள் , கல்வித்திணைக்கள அதிகாரிகளின் செயற்பாடுகள், அச்சுவேலி கைத்தொழில் பேட்டைக்கு செல்லும் வீதியை புனரமைத்தல் ,முச்சக்கர வண்டிகளுக்கு கட்டண மீற்றர் பொருத்துதல், தீவகங்களுக்கிடையிலான கடல் கடந்த போக்குவரத்து தொடர்பான விடயங்களும் கலந்துரையாடப்பட்டன.
அத்துடன் யாழ் போதனா வைத்தியசாலைக்கு புதிய எரியூட்டி தொகுதி UNDP நிறுவனத்தி்னால் வழங்கப்பட்டபோதும் அதற்கான இடம் தேவைப்பட்டமைக்கு தீர்வாக கோம்பயன்மடம் மயானத்தில் அமைக்க அனுமதி வழங்கப்படுள்ளது.
தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் 2018 ,2019 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட வீட்டுதிட்டங்களுக்கான மிகுதி உதவி பணம் பயனாளிகளுக்கு வழங்கப்படாமை தொடர்பாகவும், வீட்டு திட்டம் வழங்கப்பட்டு வீட்டில் வசிக்காத மக்களிடமிருந்து வீடுகளை மீளப் பெற்று வீடு இல்லாதவர்களுக்கு வழங்குவது பற்றியும் கலந்துரையாடப்பட்டது.
யாழ் மாவட்ட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை மற்றும் கட்டாக்காலி நாய்கள் மற்றும் வளர்ப்பு நாய்கள் என்பவற்றினூடாக அனுபவிக்கும் தொல்லைகளும் உயிரிழப்புக்களும், நெடுந்தீவு, காரைநகர் ,நயினாதீவு வேலணை போன்ற பிரதேசங்களில் வாழும் மக்களின் குடிநீர் விநியோகம், அச்சுவேலி கைத்தொழில்பேட்டையில் வேலை செய்பவர்களுக்கான நீர்த்தேவை, இளம் தொழில் முனைவோருக்கான காணிகள் வழங்கப்படாமை, நவக்கிரி சித்த மருத்துவமனைக்கான மூலிகைத் தோட்டத்தை விஸ்தரிக்க இலங்கை இராணுவத்தினர் நிலை கொண்டுள்ள இரண்டு ஏக்கர் காணியை விடுவித்தல், மண்டைதீவு ரேடியோ சிலோன் வீதி, அராலி கடற்கரை வீதி போன்ற இடங்களுக்கு மின்சார இணைப்பு வழங்கப்படாமை, பருத்தித்துறை பிரதேச தபால் நிலையத்தின் கீழ் வருகின்ற மூன்று உப தபாலகங்கள் தாளையடி தபாலகங்களின் கீழ் கொண்டுவரப்படல், தொண்டமனாறு கடல் நீரேரி தடுப்பணை, போலீஸ் நிலையம் வீதி அபிவிருத்தி அதிகார சபை, நீதிமன்றம் என்பவற்றை யாழ் மாவட்டத்தின் பருத்தித்துறை பிரிவிற்கு மாற்றுதல், தையிட்டியில் விகாரை அமைத்தமை தொடர்பான விடயங்கள் விரிவாக கலந்துரையாடப்பட்டன.
இதில் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ சிவஞானம் ஸ்ரீதரன், கௌரவ அங்கஜன் இராமநாதன், கௌரவ கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கௌரவ செல்வராஜா கஜேந்திரன், ஜனாதிபதி செயலகத்தின் வடக்கு அபிவிருத்திக்கு பொறுப்பான மேலதிக செயலாளர் எல்.இளங்கோவன், வடக்கு மாகாண சபை அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம், மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் மற்றும் மத்திய மாகாண சபையின் திணைக்களத்தலைவர்கள், வடக்கு மாகாணசபை அமைச்சின செயலாளர்கள், பிரதிப் பொலீஸ்மா அதிபர், வட பிராந்திய கடற்படையின் பிரதி கடற்படைத்தளபதி, விஷேட பொலிஸ் அதிரடிப்படை அதிகாரி, பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தரகள், பிரதேச செயலாளர்கள், அரச மற்றும் அரசாா்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தரகளும் கலந்து கொண்டனர்.







