கைத்தொழில் அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகாரசபை யாழ் மாவட்ட செயலகத்துடன் இணைந்து நடாத்தும் வடமாகாண சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களின் உள்ளூர் உற்பத்தி பொருட்களுக்கான "Made in sri lanka வர்த்தக கண்காட்சி" யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களின் தலைமையில் இன்று 06.10.2023 ஆம் திகதி முற்பகல் 9.00மணிக்கு யாழ்ப்பாண கலாசார மத்திய நிலையத்தில் சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இக் கண்காட்சியில் நூற்றுக்கும் அதிகமான உள்ளூர் உற்பத்திப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன் அதிகளவான பொதுமக்கள் இதனை பார்வையிட்டு வருகின்றனர்.
இக்கண்காட்சி 06 மற்றும் 7,8 ஆம் திகதிகள் வரை முற்பகல் 9.00மணி தொடக்கம் பிற்பகல் 8.00 மணி வரை தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் வடமாகாண உற்பத்தியாளர்களுக்கு சந்தை வாய்ப்பை ஏற்படுத்தும் நோக்கில் ஒழுங்குசெய்யப்பட்ட இவ் வர்த்தகக் கண்காட்சியில் உள்ளூர் உற்பத்திப் பொருட்களான கடல் சாா் உணவுகள், பனை , தும்பு சாா் உற்பத்திப் பொருட்கள், ஆடைகள், தோல் உற்பத்திப் பொருட்கள், உள்ளூர் உற்பத்திப் பொருட்கள் என்பன காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இக்கண்காட்சியில் சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண பிரதம செயலாளர் எஸ்.எம். சமன்பந்துலசேன அவர்கள் கலந்து கொண்டதோடு, தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் லசந்த காரிய பெரும, தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகார சபையின் மேலதிக செயலாளர் A.லக்கதாஸ், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் N.நந்தகோபாலன், தொழிற் திணைக்கள பணிப்பாளர் திருமதி. வனஜா, யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன் மற்றும் மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், , பிரதேச செயலாளர்கள், மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைப்பாளர், தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகார சபையின் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் , தொழில் முயற்சியாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோா் கலந்து கொண்டனர்.






